தங்க நகைக்கு உற்பத்தி வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் : வைகோ
மத்திய அரசு, நகைக்கடை உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, தங்க நகை ஆபரணங்களுக்கு விதிக்கப்படும் ஒரு சதவீத உற்பத்தி வரியை திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’’என்று
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மத்திய அரசின் 2016 -17 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையில், வெள்ளி நீங்கலாக தங்கம், வைரம் மற்றும் பிறவகை ஆபரணங்களுக்கு ஒரு சதவீதம் உற்பத்தி வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தங்க நகை மீதான உற்பத்தி வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிடக் கோரியும் தங்க நகை வியாபாரிகள் நாடு முழுவதும் மார்ச் 2 ஆம் தேதி முதல் நகைக்கடைகளை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் இதனால் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்கத்துக்கு 10 சதவீதம் சுங்க வரியும், ஒரு சதவீதம் மதிப்புக் கூட்டு வரியும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூடுதலாக ஒரு சதவீதம் உற்பத்தி வரி விதிப்பதால் வியாபாரிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, தங்கத்தின் விலையும் அதிகரிக்கும். தங்க நகை ஆபரணங்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்களில் பணியாற்றும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த இரு வாரங்களாக வேலை இல்லாததால் வருவாய் இழப்புக்கு ஆளாகி தவிக்கிறார்கள். இந்தியா முழுவதும் தங்க நகைக் கடைகள் கால வரையரையின்றி மூடப்பட்டுள்ளதால் நகை வர்த்தகம் பாதிக்கப்பட்டு, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதை மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
மத்திய நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் தங்க நகைகளை கொண்டு வரும் நோக்கத்தில்தான், தங்க நகை மீதான உற்பத்தி வரி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்தால் தங்கம் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் அந்த வரி விதிப்பின் கீழ் வந்துவிடும்” என்றும் கூறி இருக்கிறார்.
காங்கிரஸ் கூட்டணி, ஆட்சியில் இருந்த காலத்திலிருந்து கடந்த ஐந்து ஆண்டு காலமாக சரக்கு மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் பயனளிக்கவில்லை. தற்போது பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது காங்கிரஸ் கட்சி அதனை ஆதரிக்க முன்வரவில்லை. மாநிலங்களவையில் பா.ஜ.க. அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் இருக்கின்றது.
எனவே மத்திய அரசு, நகைக்கடை உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, தங்க நகை ஆபரணங்களுக்கு விதிக்கப்படும் ஒரு சதவீத உற்பத்தி வரியை திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.