Sanofi-Logo

பாரீஸ்: சனோஃபி நிறுவனத்தின் டெங்கு தடுப்பூசியை சந்தையிட மெக்சிகோ அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 20 நாடுகளில் சந்தையிடப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவன துணைத் தலைவர் ஆலிவர் கார்மெய்ல் கூறியதாவது: ரத்ததில் ஏற்படும் நான்கு விதமான டெங்கு வைரஸை கட்டுப்படுத்தும் டெங்க்வேக்சியா என்ற பாதுகாப்பு சிகிச்சை முறைக்கு மெக்சிகோ அனுமதி வழங்கியது. ஆண்டுதோறும் இந்த நோய் தாக்குதல் ஏற்படும் பகுதிகளில் 9 முதல் 45 வயது வரையிலானர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை அளிக்கப்படும். எனினும் உலகின் முதல் டெங்கு தடுப்பூசி அதிகம் பாதிக்கப்படும் இளம் குழந்தைகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பயன்படுத்த அனுமதி கிடைக்காமல் உள்ளது.

தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள 20 நாடுகளில் இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தையிட அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017ம் ஆண்டில் ஐரோப்பா நாடுகளில் அனுமதி பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் பரிசோதனை துவங்கிய நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று. உலக சுகாதார மையம் அங்கிகரித்த நிறுவனங்களுடன் மட்டுமே இணைந்து இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 15 நாடுகளை சேர்ந்த பல தரப்பட்ட வயதுடைய 40 ஆயிரம் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் அடிப்படையிலேயே மெக்சிகோ அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசி 80 சதவீத மருத்துவமனை சிகிச்சையை குறைக்கும். நோயின் தாக்கம் ரத்தத்தில் பெருகுவதை 93 சதவீதம் தடுக்கும்.

இளம் குழந்தைகளுக்கான பரிசோதனையில் குறைந்த அளவில் மட்டுமே கட்டுப்படுத்தியது. 2010ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு 2020ம் ஆண்டுக்குள் 128 நாடுகளில் டெங்குவை 50 சதவீதம் கட்டுப்படுத்தவும், 25 சதவீத டெங்கு இறப்பை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார மையம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. டெங்கு கொசு மூலம் பரவி நான்கு வகையான கிருமிகள் மூலம் ரத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உலகின் 50 சதவீதம மக்கள் தொகையை இது அச்சுறுத்துகிறது. ஆண்டிற்கு 400 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.