மருத்துவ உலகில் திருப்புமுனை ஏற்படுத்தியுள்ள ஜிகா வைரஸ் கட்டமைப்பு கண்டுப்பிடிப்புக் குழுவில் இந்திய மாணவி
 
devika_sirohi_1459948777உலகையே அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ்  கட்டமைப்பை கண்டுபிடித்துள்ள 7 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழுவில் இந்திய ஆராய்ச்சி மாணவி தேவிகா சிரோஹியும் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். உலகம் முழுவதும் மிகப்பெரும் மிரட்டலாக  ‘ஜிகா’ வைரஸ் என்ற புதிய வகை நோய்க்கிருமி பரவி வருகிறது.. இதற்கு தடுப்பூசியோ குணப்படுத்த மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கவில்லை.   உலகத்தின் பல்வேறு நாடுகளில் இந்த நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஜிகா வைரஸின் கட்டமைப்பைக் கண்டறியும் பணியில் அமெரிக்காவின் புர்டூ பல்கலைக் கழகம் இறங்கியுள்ளது. இதற்கான ஆய்வில் 7 பேர் கொண்ட இக்குழுவில் இந்தியாவின் மீரட் நகரைச் சேர்ந்த தேவிகா சிரோஹியும் ஒருவர். 29 வயது கொண்ட இளம் ஆராய்ச்சி மாணவியான சிரோஹி இதுபற்றி கூறியதாவது:-
ஜிகா வைரஸின் கட்டமைப்பைக் கண்டறிய எங்களுக்கு 4 மாதங்கள் ஆனது. இக்குழுவில் இடம்பெற்றுள்ள 7 பேரில் 3 பேர் மருத்துவப் பேராசிரியர்கள். நான் உட்பட 4 பேர்  ஆராய்ச்சி மாணவிகள். இந்த ஆய்வின்போது நாங்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மணி நேரம்தான் தூங்கினோம். அவ்வளவு கடுமையான உழைப்பைக் கொடுத்தோம். இறுதியில் அதற்கான பலன் கிடைத்துவிட்டது.
 
இதனை அடுத்து 33 நாடுகளில் பரவிக்கிடக்கும்  கொடிய ஜிகா வைரஸை ஒழிப்பதற்கான மருந்தை விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பது எளிதாக  இருக்கும். இதுவரை இந்த வைரஸின் வடிவம், குணம், கட்டமைப்பு போன்ற அடிப்படை விஷயங்கள் தெரியாமல் இருந்து வந்தோம். இந்தக் கண்டுபிடிப்புக்குப்பின் இதற்கான தடுப்பூசிகளும், நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துகளும் எளிதில் கண்டுபிடிக்கமுடியும்.
 

20150428-dept_awards-31-blogpost
இடது இருந்து இரண்டாவது தேவிகா சிரோஹி ஆகும்

இந்த ஆராய்ச்சிக்காக நான் முதலில் அமெரிக்கா சென்றபோது, இந்தச் சாதனையை செய்யமுடியும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதற்கான ஆராய்ச்சியைத் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகின்றன. இந்தாண்டின் இறுதியில் எனது ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பிக்க உள்ளேன். ஜிகா வைரஸை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தினோம். இது சவால் நிறைந்த பணியாக இருந்த்து. இருந்தும் இறுதியில் ஆய்வு வெற்றியைத் தந்துள்ளது.
 
ஜிகா வைரஸின் கட்டமைப்பை கண்டறிந்திருப்பதன் மூலம்  மருத்துவ உலகில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.  உ.பி.மாநிலம் மீரட்டில் பிறந்து வளர்ந்த தேவிகா அமெரிக்காவின் பர்டூயூ பல்கலைக்கழகத்தில்  ஆராய்ச்சிப் படிப்பு படித்து வருகிறார். ஜிகா வைரஸ் தொடர்பான 7 நபர்கள் கொண்ட ஆராய்ச்சி குழுவில் மிகவும் சிறிய வயது கொண்டவர் 29வயதுடைய தேவிகா ஆவார்.
தேவிகா சிரோஹி தனது பள்ளிப்படிப்பை தயாவதி மோடி அகாடமியில் முடித்தார், பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் பட்டம் பெற்றார், மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.எஸ்.சி. பட்டம் பெற்றவர். தேவிகாவின் பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்களாக உள்ளனர்.
“மிகப்பெரிய இச்சாதனைக்குழுவில் என் மகளும் இடம் பெற்றிருப்பது எங்கள் குடும்பத்துக்கு மட்டும் பெருமை அல்ல. நம் இந்திய தேசத்திற்கே பெருமை தரும் விஷயம்” என்று தேவிகாவின் தந்தையும் மருத்துவருமான எஸ்.எஸ்.சிரோஹி தெரிவித்துள்ளார்.