mm 1

ம் நமோவுக்கு ஒபாமா ராசியில்லை போலும். அவரை சந்திக்கும்போதெல்லாம் ஏதாவது தேவையில்லாத சர்ச்சையில் மாட்டிக்கொள்கிறார்.

கடந்த முறை அமெரிக்க அதிபர் இந்தியா வந்திருந்தபோது பல லட்ச ரூபாய் விலையுள்ள, அதுவும் அவரது பெயர் வரி வரியாக தைக்கப்பட்ட ஒரு சூட்டைப் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்து, எளிய ஸ்வயம்சேவக் அசிங்கப்பட்டார். அந்த சூட்டை 4.31 கோடி ரூபாய் ஏலத்தில் எடுத்தவரிடமிருந்து குஜராத் அரசால் மருத்துவமனை உள்ளிட்டவை கட்டவென வாங்கப்பட்ட 12,000 சதுர அடி நிலம் அவருக்கே திருப்பி அளிக்கப்பட பரிவாரம் நெளிந்தது.

இப்போது கொடிப் பிரச்சினை. ஒபாமா கையெழுத்திட்ட சிறிய அமெரிக்க கொடி விற்பனைக்கிருக்கிறது.  இணைய தளங்கள் மூலம் அந்த மாதிரிக் கொடியை யார் வேண்டுமானாலும் வாங்கலாம்.

விடுவாரா நம்மவர்? இந்திய தேசியக் கொடியில் கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார் விகாஸ் கன்னா என்ற பிரபல சமையற் கலைஞர் ஒருவரிடம்.

நியூயார்க்கில் மோடி அமெரிக்க தொழிலதிபர்கள் பலருக்கு விருந்தொன்று அளித்தார். அவ்விருந்தில் இந்தியாவெங்கும் கொண்டாடப்படும் 26 வேறு திருவிழாக்களின் சிறப்பு உணவு வகைகளை பரிமாறி, அசத்தியிருக்கிறார் கன்னா.

மோடி அய்யாவுக்கு ஒரே குஷி. எங்கிருந்தோ ஒரு தேசியக்கொடியை கன்னா எடுத்து வர, இந்தியப் பிரதமர் அதில் கையெழுத்திட்டு தட்டிக்கொடுத்தனுப்பியிருக்கிறார்.

சமையற்கலைஞர் அத்துடன் நின்றிருக்கவேண்டும். அவரும் மோடிஜி போன்று விளம்பரப்பிரியர். அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்றெல்லாம் பீலாவிட்டுவிட்டுவிட்டு, முத்தாய்ப்பாக இதோ பாருங்கள் பிரதமரே கையெழுத்திட்ட தேசியக் கொடி, நான் அதிபர் ஒபாமாவை சந்தித்து அவருக்கு இதை பரிசாக அளிக்கப்போகிறேன் என்று கூறியிருக்கிறார்.

தற்செயலாக நடந்ததுபோன்றே செய்தி, ஆனால் நமோ திட்டமிட்டே இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கக்கூடும்.

ஆனால் அவர் எதிர்பாராத வகையில் ஒரே ரகளை. சமூக வலைத் தளங்களில் ஆளாளுக்கு கேள்வி எழுப்பினர்.

m3அமெரிக்காவில் எதுவேண்டுமானாலும் செய்வார்கள். உள்ளாடைகளில் கூட தம் நாட்டு தேசிய கொடியை அச்சிட்டு அணிவார்கள். நம்மூர் வேறு மாதிரி அல்லவா? பசு மூத்திரம் முதற்கொண்டு புனிதமானது. தேசியக்கொடியில் தனி நபர் எவரும் கையெழுத்திட்டு அதன் மகத்துவத்தைக் கெடுக்கமுடியுமா?

இந்தியக் கொடி விதிகள் படி தேசியக் கொடியின் மீது எவரும் எதுவும் எழுதக்கூடாது .

இதையும் எவரோ எடுத்துவிட ஒழுங்கு மரியாதையாக விகாஸ் கன்னாவிடமிருந்து மோடிஜீ கையெழுத்து பொறிக்கப்பட்ட கொடியைப் பிடுங்கிவிட்டார்களாம்,

ஏற்கெனவே நியூயார்க் போய் சேர்ந்தபோது மோடியை யாரோ உள்ளூர் கவுன்சிலர் ஒருவர்தான் வரவேற்றிருக்கிறார். மேயர் கூட இல்லை என்று டுவிட்டரில் கலாய்ப்பு நிரம்பி வழிந்தது.

ஜவஹர்லால் நேரு அங்கே சென்றபோது அதிபர் ஜான் கென்னடியே நேரில்

m 2

வரவேற்ற புகைப்படத்தையும் போட்டு, கூடவே ஊர் அறியாத எவரோ மோடியை வரவேற்பதையும் காண்பித்து, இப்படியா ஆகவேண்டும் கோத்ரா மாவீரர் கதி என்று நகைக்கின்றனர்.

ஏற்கெனவே யோகா செய்கிறேன் பேர்வழி என்று தேசிய கொடியில் முகம் துடைத்தார் என்று மோடி மீது புகார் கிளம்பியது. இப்பொழுது கையெழுத்து சர்ச்சை.

நாட்டில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இவரோ வந்த ஓராண்டிலேயே ஒரு நாடு விடாமல் சுற்றிப் பார்த்து, முழங்கி, செல்ஃபி எடுத்துக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார். விளம்பர அரிப்பு அநியாயத்துக்கு இருந்தால் இப்படித்தான் வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டும்.

  • த.நா. கோபாலன்