k j

.தி.மு.க. மாவட்டச் செயலாளர் மூவர் மற்றும் மகளிர் அணி தலைவி உட்பட சில நிர்வாகிகள் திமுகவுக்கு தாவியதும்… இன்னமும் தாவல்கள் இருக்கும் என்ற செய்தி பரவுவதும் அரசியல் வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பி உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும் அக் கட்சியின் தென் மண்டல செயலாளராக இருந்தவருமான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கடந்த வருடம் ஜனவரி மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.  இதையடுத்து அவரது ஆதரவாளர்களான நடிகரும் முன்னாள் அமைச்சருமான நெப்போலியன் பா.ஜ.கவில் சேர்ந்தார். நடிகரும் முன்னாள் எம்.பியுமான ரித்தீஷ் அதிமுகவில் சேர்ந்தார். முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் சமீபத்தில்தேமுதிகவில் சேர்ந்தார்.

இந்த நிலையில் திமுகவில் இருந்து சில மாஜி அமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் அ.தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சி இன்னும் ஓரிரு நாட்களில் நடக்கும் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

min

தஞ்சை திமுகவில் கோலோச்சிய பழனி மாணிக்கம், மத்திய அமைச்சராகவும் இருந்தவர். ஆனால் டி.ஆர். பாலுவின் மேல்மட்ட லாபியால், தற்போது செல்வாக்கு இன்றி இருக்கிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியை இவருக்கு தராமல், டி.ஆர் பாலுவுக்கு அளித்தது திமுக தலைமை.   தற்போது தி.மு.க. உயர்நிலைசெயல்திட்டக் குழு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதிருப்தியில் இருக்கும் இவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்வார் என்று சில மாதங்களுக்கு முன்பே பேசப்பட்டது. அப்போது அவர் அதை மறுத்தார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் தரப்பில், “மாற்றத்துக்கான அறிகுறி தெரிகிறது” என்று செய்தி பரப்பப்பட்டது.

இந்த நிலையில் அவரது மாற்றத்திலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அதாவது “பாஜக வேண்டாம், அதிமுகவே பெஸ்ட்” என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

அதே போல முன்னாள் மத்திய அமைச்சர் புதுக்கோட்டை ரகுபதியும் அதிமுகவில் சேர்வார் என்பதாக செய்திகள் பரவின.

ரகுபதி 1991- 96ம் ஆண்டில் அ.தி.மு.க அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். பிறகு, 2000ஆம் ஆண்டில் தி.மு.க.வில் இணைந்தார்.  திமுக சார்பில் மத்திய அமைச்சராகவும் ஆக்கப்பட்டார். ஆனால் அவரும்      தி.மு.க. தலைமை மீது அதிருப்பதியில் இருப்பதாக தகவல் வெளியானது. அவரும் சில மாதங்களுக்கு முன் இந்த செய்தியை மறுத்தார். ஆனால் இப்போது அவர் அதிமுகவுக்கு தாவுவது உறுதி என்ற தகவல் புதுக்கோட்டை வட்டாரத்தில் இருந்து வந்துகொண்டிருக்கிறது.

இவர்களைப் போல அல்லாமல், வெளிப்படையாகவே அதிமுகவில் சேர  ஜெயலலிதாவின் அப்பாயிண்ட்மெண்ட்டுக்காக காத்திருப்பவர்கள் இருவர்.  ஒருவர்,  நெல்லை கருப்பசாமி பாண்டியன். அதிமுகவில் செல்வாக்காக இருந்த இவர், பின்னர் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவில் இணைந்தார்.  திமுக மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.    பெண் ஒருவர் அவர் மீது கொடுத்த பாலியல் புகார் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனால் அவர் மீது கட்சி தலைமை அதிருப்பதியில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அவரிடம் இருந்த மாவட்டசெயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.   பின்னர்  அவருக்கு  உயர்  நிலை  செயல்திட்டக்குழு  உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. ஆனாலும் அவர் வருத்தத்தில் இருந்தார். காரணம்,  நெல்லை  மாவட்டத்தை  கிழக்கு,  மேற்கு,  மத்திய,  மாநகர்  என  கட்சித்  தலைமை  நான்காக  பிரித்தது  கருப்பசாமி பாண்டியனுக்கு பிடிக்கவில்லை.  நெல்லை  மாவட்டத்தை மாநகர், புறநகர் என இரண்டு மாவட்டங்களாக மட்டுமே தொடர வேண்டும் என்றார். ஆனால், கட்சிதலைமைஅதனை ஏற்காமல், நான்காக பிரித்து அமைப்புத் தேர்தலையும் நடத்தியது.

மேலும் மாவட்ட செயலாளர் பதவி தேர்தலில்  போட்டியிட்ட அவரது மகன் சங்கர் தோற்கடிக்கப்பட்டார். ஆகவே   கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

அடுத்து..  அனிதா ராதாகிருஷ்ணன் .இவர், அ.தி.மு.க.வில்  எம்.எல்.ஏ,  அமைச்சர்  என  கோலோச்சியவர்.  அழகிரியால் தி.மு.க.வுக்கு அழைத்துவரப்பட்டவர். தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் பெரியசாமிக்கும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் சில ஆண்டுகாலமாகவே இருந்து வரும்மோதலால் முக்கியத்துவம் இன்றி இருந்தார்.

அனிதாவையும் கருப்பசாமியையும்  திமுக தலைமை, திடீரென சஸ்பெண்ட் செய்ததால், அப்போதே அதிமுகவுக்கு தாவ தயாராகிவிட்டார்கள். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆனபோது இவர்கள் இருவரது ஆதரவாளர்களும் வெடி வெடித்து கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் வெளிப்படையாக ஜெயலலிதாவை வாழ்த்தி பேட்டியும் கொடுத்தார்கள்.

இவர்கள் தவிர, தென்மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மா.செ.க்கள் மூவர், வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர் ஆகியோரும் அதிமுகவுக்குத் தாவ தயாராகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவதாவது:

“திமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவ பெருந்தலைகள் பலர் முன்பே தயாராகிவிட்டார்கள். ஆனால் அதிமுக தலைமை அதற்கு நேரம் ஒதுக்கவில்லை என்பதால் தாமதமாகிக்கொண்டே வந்தது.

இந்த நிலைியல் மதிமுகவில் இருந்து மாவட்ட செயலாளர்கள் உட்பட சில நிர்வாகிகளை திமுக தன் பக்கம் இழுத்து செய்திகளில் இடம் பிடித்து வருகிறது. ஆகவே  அதிமுக சுறுசுறுப்படைந்திருக்கிறது.

திமுகவில் இருந்து வர இருக்கும் முக்கிய பிரமுகர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக சேர்வார்கள்” என்று கூறப்படுகிறது.