பெய்ரூட்:
சிரியா நாட்டிற்குள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைநகராக திகழும் ராக்காவிற்கு சிரிய ராணுவப் படைகள் நுழைந்துள்ளது. இது ஐ.எஸ். பயங்கரவாத  அமைப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்த போரில் இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர்.  மேலும்  1 கோடியே 35 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்.
தினமும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக துருக்கி வழியாக கிரீஸ் சென்று, அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். இப்படி பயணிக்கும்போது விபத்துகளால் பலர் பலியாவதும் நடக்கிறது.
04-1465056129-syria345-600
சிரியாவில் நிலவும் அசாதாரண சூழலை முடிவுக்கு கொண்டு வரவும், உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் ஐ.எஸ்.  பயங்கரவாத அமைப்பை ஒடுக்கவும், சிரியா, ரஷ்யா மற்றும் ஈராக், நேட்டோ படைகள் தொடர்ந்து ஐஎஸ்க்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்ந நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைநகராக  திகழும் ராக்கா நகருக்குள் சிரிய படைகள் நுழைந்துவிட்டன என்று சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. யூப்ரடைஸ் நதியின் மீது கட்டப்பட்டுள்ள தாப்கா அணையை நோக்கி அந்தப் படைகள் முன்னேறி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014 ஆம் வருடத்துக்குப் பிறகு சிரிய ராணுவப் படைகள் இப்போதுதான் முதன்முதலாக ராக்காவிற்குள் நுழைந்துள்ளனர். இதையடுத்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக  கருதப்படுகிறது.