பீப் சர்ச்சை: 2:

 

டாக்டர் ருத்ரன்
டாக்டர் ருத்ரன்

 

சிம்புவின் பீப் பாடல்(!) ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்திருக்கிறது.  ஆனால் இப்படி அதிரவைப்பதை தனது பழக்கமாகவே வைத்திருக்கிறார் சிம்பு.  ஏன் இந்த மனநிலை… பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் அவர்களிடம் நமது கேள்விகளை வைத்தோம். இதோ அவரது பேட்டி…

பிறர் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணத்தமனதில் வைத்து செயல்படுவவரே சராசரியான மனிதராக அறியப்படுகிறார். அந்த எண்ணம் இல்லாத.. சிம்பு, அனிருத் போன்றவர்களின் மனநிலை என்ன.. இன மன ரீதியான பாதிப்பா?

இது ஒரு மனநோய் அல்ல. அப்படிச் சொல்லி ஓர் இழிசெயலிலிருந்து தப்பித்தல் இன்னும் கேவலம். இவ்வகை செயல்பாடுகள் எப்போதேனும் சிந்தனையாய் வந்து செயலாக வெளிப்படும் முன் சமூகரீதியாய் கற்றுக்கொண்ட நெறி சிலருக்கு சுயகண்டனத்துடன் ஒரு தடை விதிக்கும். சமூகநிலைப்பாடுகள் குறித்த எவ்வித அக்கறையுமின்றி வக்கிரமாய் பேசுவதும், பாடுவதும் அதை ஒரு கொண்டாட்டமான இசையமைப்பின் மூலம் மக்கள் மத்தியில் வெளியிடுவதும் இவர்களின் உள்விகாரத்தையே காட்டுகிறது.

இது குறித்து எவ்வித வெட்கமோ குற்ற உணர்வோ இல்லாத மனப்பான்மை இவர்களது மனத்தின் தீவிர சுயவெறியையும் சமூகம் குறித்த அலட்சிய ஆணவத்தையுமே காட்டுகிறது.

இவ்வகை விகாரமும் வக்கிரமும் வெறும் விவரமற்ற விடலை துறுதுறுப்பாக இல்லை, இது அவர்களின் அடிப்படை குணமாகவே தெரிகிறது. இந்த இழிகுணம், பல நேரங்களில் சமூக ஒப்ப்னைகளால் ஒளித்து வைக்கப்பட்டிருந்தாலும், அவ்வப்போது வெளிப்பட்டு இவ்வகை மனிதர்களை அடையாளம் காட்டிவிடும்.

பிறர் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் தனக்குச் சரியெனத் தோன்றுவதைச் செய்பவர்கள் பலர் உண்டு, ஆனால் அப்படிச் செய்த காரியத்தால் யாருக்கும் பாதிப்பு வராமல் இருப்பதைச் செய்பவரே நெறி பிறழாதவர், இவர்கள் அப்படியல்ல.
இது வெறும் ஒரு கவன ஈர்ப்போ விளம்பர உத்தியோ அல்ல, இது உள்ளிருக்கும் வக்கிரத்தின் ஆணவம் கலந்த வெளிப்பாடு.

சிம்பு
சிம்பு

தன்னை அதீத செக்ஸியான ஆளாக வெளிப்படுத்திக்கொள்வது என்பதும் ஒரு மேனியாக் என்பதாக படித்த நினைவு. அது உண்மையா?

நீங்கள் குறிப்பிடும் மனநிலையின் அடிப்படை அந்த மனிதனின் சுயமதிப்பீட்டுக் குறைவால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மை. இதற்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை.

குறிப்பிட்ட இந்த பாடல், பெண்கள் மீது வக்கிரமான பாலியல் தாக்குதலை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதைக் கேட்கும் இளைஞர்களுக்கு மன ரீதியாக பாதிப்பு ஏற்படுமா?

இது பெண்களைப் பற்றி இவர்கள் என்ன எடைபோட்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இதைக் கேட்பதால் இளைஞர்க்கு மனரீதியாய் பாதிப்பு வராது. இவ்வகை வக்கிரத்தோடு ஒத்த கருத்துடையவர்கள் ரசிப்பார்கள், பிற இளைஞர்க்கு இது ஒர் அருவெறுப்பையே உருவாக்கும்.

ஒரு பாடல் தேர்ந்த இசையமைப்பின் மூலம் மனத்துள் பதிந்தால் வாய் அதை அவ்வப்போது முணுமுணுக்கும், இப்பாடலை அப்படி வீட்டிலோ வீதியிலோ பாட முடியுமா? குடும்பத்தினரோடு உற்சாகமாய் இருக்கும்போது பாட முடியுமா? ஒரு நகைச்சுவையாகவாவது ஒரு குழுவில் பாடிக்காட்ட முடியுமா? இவ்வகை வார்த்தகளும் வரிகளும் பலருக்கும் பரிச்சயம்தான், சிலருக்கு போதையின் தன்னை மறந்த நிலையில் வெளிப்படக்கூடியதுதான். ஆனால் சுயநினைவோடு, வேண்டுமென்றே இப்படியொரு பாடலை உருவாக்கிப் பகிரங்கமாய் பரப்புவதுதான் கேவலத்தின் திமிர்நிலை.

பள்ளிகளில் செக்ஸ் கல்வி வைப்பது இது போன்ற செயல்களுக்கு தீர்வாக இருக்குமா?

பாலியல் புரிதல் இன்றைய காலகட்ட்த்தில் குழந்தைகளுக்கும் சிறுவர்க்கும் அவசியம். எது சரி எது நாகரிகம், எது உடலுக்கும் மனத்துக்கும் சரியானது என்பதை நிச்சயம் பள்ளிகளிலேயே சொல்லித்தர வேண்டும். அப்படிச் சொல்லிக்கொடுக்கவும் இந்தப் பாடல் உதவாத அளவு அசிங்கமான அநாகரிகம். பாலியல் புரிதல் கல்வி என்பது வேற்றுபாலினை அங்கீகரிக்கவும் மதிக்கவும் கற்றுக்கொடுப்பதேயாகும்.

சிம்பு போன்றவர்களுக்கு என்ன வகையில் சிகிச்சை அளிக்க வாய்ப்பு உள்ளது.. அது  நோயாக இருந்தால்..

இது நோயல்ல சமூக அவமதிப்பு, திமிருடன் வரும் வக்கிரம். இது சிகிச்சையளிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல தண்டிக்கப்படவேண்டிய ஒன்று.”

– “நச்”சென்று சொல்லி முடித்தார் டாக்டர் ருத்ரன்.

பேட்டி: டி.வி.எஸ். சோமு