IWD-slider
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சமுதாயத்தின் தூண்களாகத் திகழும் பெண்களின் நிலை‌ மாறினால் தான், வீடும், நாடும் வளர்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளார்.  பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதுடன், அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர்  வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, அதிமுக அரசின் பல சிறப்பான திட்டங்களால், மகளிர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றும்  பெண்கள், தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, அவற்றை வெற்றிப்படிகளாக்கி சரித்திரம் படைத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாடாளுமன்றம் ‌மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவிதிகம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்  வேண்டும் என்று கோரியுள்ளார்.
பெண்கள்‌ தற்சார்பு பெற்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும், அனைத்துத் துறைகளிலும் முன்னேறி நல்வாழ்வு பெறவும் வாழ்த்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற பெண்களின் விருப்பம் நிறைவேறும்.  அதற்காக கடுமையாக உழைக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுவின் பிடியிலிருந்து தமிழக பெண்களை மீட்டெடுத்து, பாதுகாக்க உலக மகளிர் தினத்தில் சூளுரை மேற்கொள்வதையே உலக மகளிர் தின செய்தியாக கூற விரும்புவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி. கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். 
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில், தேர்தல் களத்தில் போட்டியிடுவதற்கு மகளிருக்கு நியாயமான விகிதத்தி‌ல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.