தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே தொகுத்து வழங்கும் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். .
விவாதத்தின் போது “பெரியாரை புகழ்ந்து பேசிவிட்டு, இப்போது இகழ்ந்து பேசுகிறீர்கள்” என்று சீமானை நோக்கி அருணன் கேட்க.. ஆத்திரமடைந்த சீமான், “ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா” என்றார். பதிலுக்கு அருணன், “நீதான்டா லூசு” என்றார்.
பலரும் பார்க்கும் தொ.கா. விவாத நிகழ்ச்சியில் இப்படி நடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதே நேரம் இருவருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பலரும் சமூகவலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.
இந்த நிலையில் சிலர், நிகழ்ச்சியை வழங்கும் ரங்கராஜ்பாண்டேவை குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களில் ஒருவரான பிரின்ஸ் ஏர்னஸ்ட் பெரியார். திராவிடர் கழக பிரமுகரான இவரது முகநூல் பதிவு:
“நான் பார்க்க இது முதல்முறையல்ல… ம.ந.கூ அமைவதற்கு முன்பும் ஒரு முறை திமுக சார்பில் அப்பாவு அவர்களும், பொதுவுடைமை இயக்கத்தின் சார்பில் அருணன் (என்று நினைவு) அவர்களும் மற்றும் இருவரும் பங்கேற்ற தந்தி டிவி விவாத நிகழ்ச்சி. அந்த விவாதம் முடிவடையப் போகிறது என்று அதற்கு முன்பு பேசிய வாதங்களையெல்லாம் நிறுத்திவிட்டு, நிறைவை நோக்கி வந்துவிட்டார் ரங்கராஜ். இறுதிக் கருத்தை சொல்ல பேசிய அப்பாவுவும், அருணனும் வேகமாக மோதிக் கொள்ள, நீயா நானா என்று கடுமையானது. நிகழ்ச்சியை முடிக்க விரட்டிக் கொண்டிருந்த ரங்கராஜ் இருவரின் சண்டையையும் தடுக்காமல், பொறுமையாக சிரித்துக் கொண்டே அமர்ந்திருக்கிறார். இருவரும் எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்று வேடிக்கை பார்க்கிறார் – தடுப்பதற்கான முயற்சிகள் எதுவும் செய்யாமல். அவர்கள் ஓயப் போன நேரம் பார்த்து, நீங்கள் எவ்வளவு மோசமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களின் தரத்தைக் குறிப்பது போல கமெண்ட் அடித்துவிட்டு முடித்தார்.
இன்று மீண்டும் அருணனும், சீமானும்! இருவரும் வார்த்தைகளில் கடுமையாக மோதிக் கொண்டிருக்கும்போது, சீமான் வார்த்தை தடித்து உதிர்க்கத் தயாராகிறார் என்பது புரிகிறது. பார்த்துக் கொண்டிருந்த நமக்கு அவரின் அடுத்த வார்த்தைகள், நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அதனைத் தடுப்பதற்கு கொஞ்சமும் முயலவில்லை ரங்கராஜ். கொள்கை குறித்த விவாதம் வேகமாகி, அருணனை ‘லூசு’ என்று விளிக்கிறார் சீமான். அருணன் கோபமாகி ‘அவனை மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள்’ என்கிறார்.
இந்த இடத்தில் வேறொரு தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரை நினைத்துப் பாருங்கள். அவர்களது குரல் உயர்ந்திருக்கும், விவாதத்தை திசை திருப்பியிருப்பார்கள். விசயத்துக்கு வாங்க என்று வழிநடத்தியிருப்பார்கள். இது எதற்கும் முயலாத ரங்கரா ‘பாண்டே’வின் முகத்தை அப்போது நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.
வரலாற்றுக் காலத்திலிருந்து நமக்குள்ளே மோதவிட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனியத்தின் குரூர முகம் எப்படி இருக்கும் என்பதை இத்தனை அப்பட்டமாய் யாரும் வெளிப்படுத்தி நான் பார்த்ததில்லை. பொதுவுடைமைச் சிந்தனையாளர் அருணனை ஆள்வைத்துத் திட்டி அரிப்பைத் தீர்த்துக் கொண்டதுபோலாயிற்று; அவரைக் கோபப்படுத்தியது போலவும் ஆயிற்று. இதைத்தானே பார்பனியம் காலம்காலமாகச் செய்துகொண்டிருக்கிறது.
இரண்டு உயிர்களை மோதவிட்டு, ரத்தத்தை நக்கிச் சுவைக்க நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு காத்திருக்கும் அந்தக் குரூர முகத்தைக் காணச் சகிக்கவில்லை…சே… எத்தனை காலத்துக் கொடூர முகம்.
குறிப்பு: உடனடியாக அந்தக் குரூர சிரிப்பு நிறைந்த படம் கிடைக்கவில்லை. மீண்டும் அதைப் பார்க்கவும் விருப்பமில்லை” – இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பிரின்ஸ் ஏர்னஸ்ட் பெரியார்.
இதற்கிடையே ரங்கராஜ்பாண்டே தனது முகநூல் பதிவில் கூறியிருப்பது:
“ஆயுத எழுத்து விவாதம் தனிப்பட்ட முறையில் திசை திரும்பியது பெரும் வேதனையே. வினாடி நேரத்தில் இரு விருந்தினர்களும் உணர்ச்சி வயப்பட்டுவிட்ட பிறகு, சமாதானங்கள் சடங்குகளாகின்றன. ஆனாலும் முயன்றேன். மனசாட்சி அறியும், வீடியோவில் தெரியும். இன்னும் கவனமாக இரு(ந்திரு)க்க வேண்டும்” – இவ்வாறு ரங்கராஜ்பாண்டே தெரிவித்திருக்கிறார்.
மொத்தத்தில் மேடை நாகரீகம் என்பது இல்லாமல் போய்விட்டது அனைருக்குமான அவமானமே!
சம்பந்தப்பட்ட விவாதத்தின் வீடியோ லிங்க்…