t7

 

20.6.2015 அன்று தஞ்சாவூர் சைவசித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தலப்பயணம் சென்றோம். இப்பயணத்தில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களான திட்டை, திருக்கருக்காவூர், ஆவூர், சத்திமுற்றம், பட்டீஸ்வரம், திருவலஞ்சுழி, மங்களாசாசனம் பெற்ற தலங்களான நந்திபுரவிண்ணகரம், திருஆதனூர், திருப்புகழ்த் தலமான காவலூர், பள்ளிப்படையான பஞ்சவன்மாதேவீச்சரம் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். இவற்றில் காவலூர் மற்றும் திருஆதனூர் கோயில்கள் தற்போது முதல் முறையாக நான் செல்கிறேன். மற்ற அனைத்து கோயில்களுக்கும் முன்னர் பல முறை சென்றுள்ளேன். நாங்கள் சென்ற கோயில்களுக்கு உங்களை அழைக்கிறேன். வாருங்கள்.

1) திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்
காலை 7.00 மணியளவில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து வேனில் கிளம்பினோம். முதலில் திட்டை சென்றோம். வசிஷ்டேஸ்வரையும் சுகந்தகுந்தளாம்பிகையையும் தரிசித்தோம். குருவினை நின்ற நிலையில் கண்டோம்.

2) காவலூர் முருகன் கோயில்
திட்டை பயணம் முடித்து அங்கிருந்து காவலூர் சென்றோம். திருப்புகழ் பாடல் பெற்ற இக்கோயில் சற்றே உயர்ந்த தளத்தில் உள்ளது. ஆறுபடை வீடுகளைச் சேர்ந்த முருகனின் திருவுருவங்களையும் இங்கு கண்டோம். திருமுருக கிருபானந்த வாரியார் இக்கோயிலுக்கு விரும்பி வந்ததாகக் கூறினர்.

3) திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோயில் அங்கிருந்து நாங்கள் சென்றது திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோயில். முல்லைவனநாதரையும், அம்மனையும் தரிசித்தோம். யாகசாலையை ஒட்டிய மண்டபம் குதிரை, தேரை இழுத்துச் செல்வது போல அமைந்துள்ள அமைப்பு பார்க்க மிகவும் அழகாக இருந்தது. அச்சிற்பத்தை ரசித்துவிட்டு அக்கோயிலிலேயே காலை உணவு உட்கொண்டோம். இதே போன்ற சிற்பத்தை பழையாறையிலும் கண்டோம்.

4) ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில்
அழகான மாடக்கோயில். படிகளில் ஏறி மேலே கோயிலுக்குச் சென்றோம். பசுபதிநாதரையும், மங்களாம்பிகை, பங்கஜவல்லி என்ற இரு அம்மன் இரு அம்மன் சன்னதிகளையும் கண்டோம். ஒரே இடத்தில் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், காள பைரவர், உன்மத்த பைரவர் எனப்படுகின்ற ஐந்து பைரவர்களைக் கண்டோம். இவ்வாறு வேறு எங்கும் நான் பார்த்ததில்லை.

5) திருச்சத்திமுற்றம் முல்லைவனநாதர் கோயில்
அடுத்து நாங்கள் சென்றது திருச்சத்திமுற்றம் முல்லைவனநாதர் கோயில். இம்மண்டபத்தில் கருவறையின் வலப்புறம் சக்தி தழுவிய உடையார் என்ற சன்னதி உள்ளது. இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம். சக்தி முற்றம் எனப்படுகின்ற சக்தி உறையும் இடத்தை இறைவி இறைவனுக்கு முத்தம் தருவதாகக் கூறிவருவதைக் கண்டோம். தனியாக அம்மன் சன்னதியில் அம்மனைக் கண்டோம்.

t6

6) பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில்
அடுத்து நந்தி விலகிய தலமாகக் கருதப்படும் தேனுபுரீஸ்வரர் கோயில். மூலவர் சன்னதியின் இடப்புறம் ஞானாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் உள்ள தூண்கள் சிற்ப வேலைப்படுகளோடு உள்ளதைக் கண்டோம். தேனுபுரீஸ்வரரையும், அம்மனையும் தரிசித்துவிட்டு வெளியே வரும்போது அக்கோயில் வளாகத்தில் உள்ள துர்க்கையம்மன் சன்னதியைக் கண்டோம். துர்க்கையம்மனை தரிசித்துவிட்டு குழுவாக அங்கு மதிய உணவு உண்டோம். மாலை வரை ஓய்வெடுத்தோம். 4.00 மணிக்கு மறுபடியும் கிளம்பினோம். அங்கிருந்து போகும் வழியில் முழையூர் தர்மபுரீஸ்வரர் கோயிலைப் பார்த்தோம். மாடக்கோயிலாக மிகவும் பெரிய கோயிலாக இருந்தது. அதற்கடுத்து பார்சுவநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. நேரமின்மை காரணமாக இரு கோயிலுக்கும் செல்ல முடியவில்லை.

t5 (1)

7) பழையாறை சோமநாதர் கோயில் இக்கோயிலுக்குப் பல முறை சென்றுள்ளபோதிலும் பெயரின் காரணமாக வரலாற்றுரீதியாக என்னை ஈர்த்த கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலின் அமைப்பு தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலை நினைவுபடுத்தும். மூலவர் சன்னதி அமைந்துள்ள மண்டபம் குதிரைகள் இழுத்துச் செல்வதைப் போல அமைந்துள்ளது. ஒரே நாளில் இவ்வாறான அமைப்பில் இரு கோயில்களை இன்று பார்த்துள்ளோம்.

t4

8) நந்திபுர விண்ணகரம் எனப்படும் நாதன்கோயில்
அதற்கருகில் நாதன்கோயில் எனப்படுகின்ற ஜகன்னாதப்பெருமாள் கோயில் இருப்பதாகக் கூறினேன். அப்போது திரு ஜெயபால் அவர்கள் அது மங்களாசாசனம் பெற்ற தலமா? என்றார். ஆமாம் என்று நான் கூறியதும் எங்களது வேன் அக்கோயிலை நோக்கிச் சென்றது. ஆறு விண்ணகரங்களில் ஒன்றாக இக்கோயில் உள்ளதாகக் கூறினர். மூலவராக அமர்ந்த கோலத்தில் பெருமாள் உள்ளார். அருகில் ஸ்ரீதேவி, பூமாதேவி உள்ளனர். பெருமாள் சன்னதியின் இடப்புறம் செண்பகவல்லித்தாயார் சன்னதி உள்ளது.

t3

9) பஞ்சவன்மாதேவீச்சரம்
கோயில் உலாவின்போது வரலாற்றறிஞர் திரு குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டார். நாங்கள் இருக்கும் இடத்தைக் கூறியவுடன் அவசியம் பஞ்சவன்மாதேவீச்சரம் செல்லுங்கள் என்றார். என் மனதுக்குள் இருந்த ஆசையும் அதுவே. அடுத்த இடமாக நாங்கள் ராஜேந்திர சோழன் தன் சிற்றன்னைக்காகக் கட்டிய பள்ளிப்படையான பஞ்சவன்மாதேவீச்சரம் சென்றோம்.

t2

10) திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில்
பஞ்சவன்மாதேவீச்சரத்திலிருந்து கோபிநாதப்பெருமாள் கோயில் வழியாக திருவலஞ்சுழி வந்தடைந்தோம். திருவலஞ்சுழியில் கபர்தீஸ்வரர் கோயிலும், விநாயகர் கோயிலும் ஒரே வளாகத்தில் உள்ளன. வலப்புறம் பைரவருக்கான தனிக்கோயில் உள்ளது. விநாயகர் கோயிலைக் கடந்தே சிவன் கோயிலுக்குச் செல்ல முடியும் விநாயகர் கோயிலிலும், கபர்தீஸ்வர் கோயிலிலும் நுட்பமான தூண்கள் காணப்படுகின்றன. மிகப்புகழ் பெற்ற திருவலஞ்சுழி பலகணியைப் பார்த்தோம்.

11)திருஆதனூர்
திருவலஞ்சுழியிலிருந்து சுவாமிமலை வழியாக வந்து திருஆதனூர் சென்றோம். கிடந்த நிலையில் பெருமாள் இருந்த ஆண்டளக்குமயன் கோயில் சென்றோம். மங்களாசாசனம் பெற்ற இக்கோயிலில் பெருமாள் கிடந்த கோலம் மனதிற்கு நிறைவைத் தந்தது. அக்கோயிலுடன் எங்களது பயணத்தை நிறைவு செய்து, இரவு தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம்.