temp

 

 

புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில் தமிழகத்தில் அழகான சிற்பங்களைக் கொண்ட கோயில்களில் ஒன்று ஆலந்துறைநாதர் கோயில் என்று அழைக்கப்படும் புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில். இக்கோயிலுக்கு குடவாயில் பாலசுப்ரமணியன் அய்யம்பேட்டை செல்வராஜ், அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி, கரந்தை ஜெயக்குமார் உள்ளிட்ட பல நண்பர்களுடனும் அறிஞர்களுடனும் சென்றுள்ளேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் மென்மேலும் அதன்மீதான ஈடுபாடு கூடுவதை என்னால் உணர முடிகிறது. அக்கோயிலுக்குச் செல்வோம் வாருங்கள்.

temp1

தமிழகத்தில் தஞ்சாவூரிலிருந்து 15 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டைக்கு முதல் நிறுத்தத்தில் இறங்கி இக்கோயிலுக்குச் செல்லலாம். பண்டைக்காலத்தில் திருவாலந்துறை மகாதேவர் என்று அழைக்கப்பட்ட இக்கோயில் முதலாம் பராந்தகசோழன் (கி.பி.907-955) காலத்தைச் சேர்ந்ததாகும். அம்மன்னன் காலத்திய கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு இக்கோயில் ஒரு எடுத்துக் காட்டாகும். ஞானசம்பந்தப்பெருமானால் பாடப்பெற்ற இக்கோயிலின் தூண் சிற்பங்கள், ஆடல் அணங்குகளின் சிற்பங்கள், இராமாயணச்சிற்பங்கள் போன்றவற்றைக் கொண்டு ஒரு கலைப்பெட்டகமாக இக்கோயில் விளங்குகிறது.

 

temp2

கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூரத்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. பிரகாரத்தில் விநாயகர் சன்னதியும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. கோயிலின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. சப்தஸ்தானத்தல விழாவிற்கான பல்லக்கு அருகே காணப்படுகிறது. கருவறை கோஷ்டத்தில் சீதை இலக்குவனனுடன் ராமர் வனவாசம் ஏற்று படகில் கங்கையைக் கடந்துசெல்லல் தொடங்கி ஜடாயு வதம் போன்ற ராமாயணக்காட்சிகள், கஜசம்ஹாரமூர்த்தி, காளியின் மகிஷ வதம், காலசம்ஹாரமூர்த்தி, வராகமூர்த்தி பூமாதேவியை மீட்டு வரல், ஆதிசேடன் மீது அரிதுயில் கொள்ளும் அனந்த சயனமூர்த்தி போன்ற பல நுட்பமான சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன.

ஒரு சோழ நாட்டுச் சிற்பி…..கம்பனின் காப்பியம் காட்டும் வாலி வதத்தின் சோகத்தை விஞ்சும் வகையில் கம்பனுக்குக் காலத்தால் முற்பட்ட புள்ளமங்கைச் சிற்பம் உள்ளது உண்மை என்று அங்குள்ள சிற்பங்களில் ஒன்றின் பெருமையைப்பற்றி குடவாயில் பாலசுப்பிரமணியன் தன்னுடைய கலையியல் ரசனைக் கட்டுரைகள் என்ற நூலில் விவாதிக்கிறார். அனைத்துச் சிற்பங்களும் அவ்வாறு உணர்வை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.

temp3

அழகான சிற்பங்களையும், கலை நுட்பங்களையும் கொண்ட இக்கோயிலுக்கு ஒரு முறை சென்றுவருவோம்.