KAMAL650

“தொழில் உயர்வு தாழ்வு இல்லை. “நீ செய்வது கக்கூஸ் கழுவும் வேலையாகக் கூட இருக்கலாம். உன்னைவிட வேறுயாரும் இத்தனை சிறப்பாக செய்ய முடியாது என்ற பெயர் வாங்க வேண்டும்” என்றார் என் அம்மா”

  • ஒரு மேடையில் கமல் சொன்னதுதான் இது.

அப்படித்தான் இன்றுவரை இருக்கிறார். ஏதோ நடித்தோம், வசூலித்தோம் என்றில்லாமல், திரைப்படங்கள் என்பவை பார்ப்பவரின் ரசனையை உயர்த்தும்படியாக இருக்க வேண்டும் என்று பல படங்களை எடுத்திருக்கிறார்.

சொந்தத் தயாரிப்பான, “ராஜபார்வை” ஒரு உதாரணம். தொடர்ந்து பேசும்படம், குணா என்று பரிட்சார்த்த முயற்சிகள்தான் எத்தனை எத்தனை!

படத்தில் நாயகன் வெற்றி பெற வேண்டுமென அவர் நினைத்ததே இல்லை. படம் வெற்றிபெற வேண்டும் என்பதே அவரது எண்ணம்.

ஆரம்பகாலத்திலேயே பதினாறு வயதினிலே படத்தில் கோவணாண்டியாக நடித்தார். அதோடு மனநலம் பிறன்டவர், வேலையில்லா இளைஞன், ஏமாந்து நிற்கும் நடுத்தர வர்க்கத்தினன்.. இப்படி எத்தனையோ சொல்லலாம்!

அவ்வளவு ஏன்.. “காக்கிச்சட்டை” என்கிற மசாலா படம். அதில் ஒரு சண்டைக் காட்சி. எதிரிகளை அடிக்கிறார், உதைக்கிறார், துவம்சம் செய்கிறார். இதெல்லாமே எல்லா நாயகனும் (திரையில்) செய்வதுதானே!

அடுத்ததாய் ஒன்றை செய்தார் கமல். எதிரி ஒருவர் கமலின் தலையில் கட்டையால் அடிக்க.. வலியுடன் தலையைத் தேய்த்துக்கொள்வார் கமல்.

தமிழ்த் திரையுலகில் “ஹீரோயிசம்” மிகுந்த நாயகன் ஒருவனுக்கு வலித்தது அப்போதுதான்.

“நாயகனும்” சராசரி மனிதனே என்பதை வெளிப்படுத்தும் காட்சி அது.

ரசிகர்கள் என்பவர்கள், நடிகரின் அடிமைகள் என்பதை மாற்றி, அவர்களையும் தன் உயரத்துக்குக் கொண்டுவந்தவர். ரசிகர்களின் தொடர் வற்புறுத்தலால் மன்றம் அமைக்க ஒப்புக்கொண்டாலும், அதை நற்பணி மன்றமாக உருவாக்கியவர். தனது உதவி இன்றியும், ரசிகர்களின் முயற்சியிலேயே பல நலப்பணிகளை செய்ய வைத்தவர்.

அவர்களை மேம்படுத்த, மய்யம் என்கிற இதழை துவங்கினார். ஒரு நடிகரின் இதழாக அது இருந்ததில்லை. படித்தவருக்குத் தெரியும்.

விருமாண்டி படம் தயாரிக்கொண்டிருந்த நேரம். அப்போது அதன் பெயர் சண்டியர். “சண்டியர் என்ற பெயர் சாதி ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது” என்று டாக்டர் கிருஷ்ணசாமி பொங்கி எழ… பிரச்சினை ஏற்பட்டது.

கொதித்த தனது ரசிகர்களை அமைதிப்படுத்தினார் கமல். “இது என் பிரச்சினை. நான் சமாளித்துக்கொள்கிறேன்” என்றார். அதையும் மீறி, சேலத்தில் சில ரசிக மன்ற நிர்வாகிகள், கிருஷ்ணசாமியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, அவர்களை மன்றத்தில் இருந்து நீக்கினார்.

தன் வழி நடக்கும் ரசிகர்களை, தனது பட வியாபாரத்துக்கு, பாதுகாப்புக்கு அவர் பயன்படுத்தவே இல்லை. அவர்களுக்கு நல்வழி காட்டும் ஒரு நல்ல தகப்பனாகவே இருக்கிறார் கமல்.

“திரைப்பட நாயகன்” என்பதை, அரசியலுக்கான துருப்புச்சீட்டாக அவர் பயன்படுத்தியதே இல்லை. வெளிப்படையாகவே, “நான் அரசியலுக்கு வர மாட்டேன்” என்றார்.

ஆனால் தேர்தல் இல்லாத அரசியலில் அவர் இருக்கவே செய்தார். அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட நேரம். விழா ஒன்றில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் கலந்துகொள்கிறார். அதே விழாவில் பங்கேற்ற கமல் எழுந்து, தனது கண்டனத்தை கம்பீரமாக பதிவு செய்தார்.

கியூபா நாட்டுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்த நேரம். உலகின் பல பகுதிகளில் இருந்தும், நல் மனம் கொண்டேர் உதவி பொருட்களை அனுப்பி வந்தனர். அதுபோல சென்னையில் இருந்து ஒரு கப்பல் புறப்பட்டது. அதற்கு கொடி அசைத்து வழி அனுப்பியவர் கமல்.

சாதிமத சனாதனங்களை எதிர்த்து அவர் எழுதியும் பேசியதும் பலரும் அறிவர்.

இல்லாத கதைகள் பேசி, பொல்லாத அரசியலை தன் படங்களுக்கு அவர் ஒருநாளும் பயன்படுத்தியதே இல்லை.

அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்போர் உண்டு. அது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே.

“திருமணம் என்பது பெண்ணடிமைத்தனம்” என்ற கமல், அதை வாழ்க்கையிலும் கடைபிடித்தார்.

வாணி கணபதியை மணவிலக்கு செய்தார். சரிகாவை திருமணம் செய்துகொள்ளும் முன்பே ஸ்ருதி பிறந்தார். “இப்போதாவது திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்று நட்பு வட்டாரம் வற்புறுத்த.. “இன்னொரு குழந்தை பெத்துக்கலாம்னு இருக்கோம். அதுவும் பிறக்கட்டும். அப்புறம் செய்துக்கலாம். இல்லேன்னா திருமணத்துக்கு முன் பிறந்தவர், பின் பிறந்தவர் என்று பிள்ளைகளுக்குள் மனஸ்தாபம் ஏற்படும்” என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னார் கமல்.

அதே போல இரண்டாவது குழந்தை அக்ஷரா பிறந்த பிறகு கமல் – சரிகா திருண சடங்கு, மற்றவர்களுக்காக நடந்தது.

அவர்களுக்குள் மனப்பிரச்சினை ஏற்பட்டு விலகினர். தற்போது கவுதமியுடன் மணமொத்து வாழ்கிறார். இதுபற்றி ஒருமுறை பேசினார் கமல். அதாவது, கவுதமியின் குழந்தையின் பெயரைச் சொல்லி “எனக்கு மூன்று பிள்ளைகள்” என்றார்.

“மனைவியை விவாகரத்து செய்யலாம்.. பிள்ளைகளை விவாகரத்து செய்ய முடியுமா” – இதுவும் கமல் சிரித்துக்கொண்டே கேட்ட கேள்விதான். ஆனால் அர்த்தம் பொதிந்தது.

அவரது மசாலா படங்களில் கூட திருமணம் என்ற பெண்ணடிமைத்தனத்தை வீசி எறிந்தே வருகிறார். உதாரணம் மும்பை எக்ஸ்பிரஸ். அங்கீகரிக்கப்படாத மனைவியாய் குழந்தையோடு தவிக்கும் மனீசாவை மனம் உவந்து ஏற்றுக்கொள்வார்.

“நாடு, தேசம்” என்று அவர் கதை பேசியதில்லை. ஆனால் வருமானவரி ஒழுங்காக கட்டுகிறார். அதற்கான விருதுகளும், பாராட்டும் பெற்றுள்ளார்.

சமீபகாலமாக அவர் மீது, ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக இருக்கிறார் என்று விமர்சனம் வைக்கப்படுகிறது. ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட நிற்கமாட்டேன் என்று உறுதியுடன் கூறும் ஒரு திரைப்பட நடிகர் மீது திணிக்கப்படும் இந்த விமர்சனம் நகைப்பிற்குறியதே.

கமல்.. ஒரு நிஜநாயகன்!  இன்று பிறந்தநாள் காணும் கமல், வாழ்க பல்லாண்டு!

– அ.விசுவநாதன்