download (1)
சென்னை:
“கெயில் நிறுவனம்,  கொச்சியில் இருந்து பெங்களூர் வரை குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. விவசாய நிலத்தை பாதிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து போராடுவோம்” என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொச்சியிலில் இந்து தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களின் வழியாக 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்க கெயில் நிறுவனம் சுமார் 1491ஏக்கர் நிலத்தின் பயன்பாட்டு உரிமையை 5842 நில உரிமையாளர்களிடம் இருந்து பெற்றது. ஆனால், எரிவாயு குழாய்கள் பதிக்கும் போது விவசாய நிலங்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கெயில் நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து நிலத்தின் பெரும் பகுதியின் நிலப் பயன்பாட்டு உரிமையினைப் பெற்றதால், விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. வேளாண் நிலங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததுடன், அந்நிலங்களுக்கு வேளாண் கடன் அளிக்க வங்கிகள் மறுத்து விட்டன.
எனவே, ஏழு மாவட்டங்களிலும் விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் தீவிரம் அடைந்தது.
எனவே, ‘எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் தேசிய நெடுஞ்சாலை வழியாக மேற்கொள்ள வேண்டும்; ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களை அப்புறப்படுத்தி, நிலங்களை சமன் செய்து விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று 2013 மார்ச் மாதம் தமிழகச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
தமிழக அரசின் தடையை எதிர்த்து கெயில் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ‘கெயில் நிறுவனம் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளைத் தொடரலாம் என்றும், இந்தத் திட்டம் தொடர்பாக விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களை மாநில அரசு சமாதானப்படுத்துவதுடன், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்றும் சென்னை உயர்நீதிமன்றம் 2013 நவம்பரில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசும், விவசாய சங்கங்களும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று கெயில் நிறுவனத்துக்கு ஆதரவாக வழங்கி உள்ள தீர்ப்பு விவசாயிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2011 இல் மத்திய அரசு கொண்டுவந்த பெட்ரோலியம் மற்றும் கனிமங்கள் குழாய் பதிக்கும் சட்டத் திருத்தத்தில், (P & MP Act 1962 Amendment), எரிவாயு குழாய்கள் சேதம் அடைந்தால் அவை பதிக்கப்பட்டு இருக்கும் நிலத்தின் உரிமையாளர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், இதற்காகக் கடும் தண்டனை வழங்க இடம் உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் விரோத பி.எம்.பி. சட்ட திருத்தம் 2011 இல், மாநில அரசு தலையிட அதிகாரம் இல்லை என்று தற்போது உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நாகாராம் என்ற கிராமத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்லப் பதித்த குழாய்களில் கசிவு ஏற்பட்டு வெடித்ததால் 16 பேர் பலி ஆனார்கள். அங்கு விவசாயிகள் போராட்டம்  வெடித்தது. மராட்டிய மாநிலத்தில் உள்ள தபோல் என்ற இடத்தில் இருந்து பெங்களூர் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்லும திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கடுமையான போராட்டங்கள் நடத்தினர்.
எனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்து, விவசாயிகளின் கவலையைப் போக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
கெயில் நிறுவனம் கொச்சி – பெங்களூரு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தைத் தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் கொண்டு செல்கிறது;
மராட்டியத்தில் மஹிம்-தாசிர் எரிவாயுத் திட்டத்தை மகாநகர் கேஸ் நிறுவனம் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே நெடுஞ்சாலை வழியாகவும்;
குஜராத்தில் அகமதாபாத் – பகோதரா மற்றும் காந்திநகர்  – சார்கட்ஜ் எரிவாயுத் திட்டத்தை அதானி கேஸ் நிறுவனம் நெடுஞ்சாலை வழியாகவும்;
உத்திரப்பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் பரோனி -கான்பூர் நெடுஞ்சாலை வழியாகவும்;
குஜராத் மாநிலத்தில் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல்., இந்தியன் ஆயில், ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்கள் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகமதாபாத் – வதோதரா நெடுஞ்சாலையில் குழாய் பதித்தும்தான்  எரிவாயு எடுத்துச் செல்கின்றன.
மேற்கண்ட திட்டங்களைப் போலவே தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களிலும் நெடுஞ்சாலை வழியாகவே கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்ல மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் விவசாயிகளின் உரிமை காக்க மறுமலர்ச்சி தி.மு.கழகம், விவசாயிகளுடன் போராட்டக் களத்தில் இறங்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”
–    இவ்வாறு தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.