ஜவஹர் பழனியப்பன்
ஜவஹர் பழனியப்பன்

 
சென்னை:
‘குமுதம்’ குழுமத்தின் பங்குகளை அதன் நிறுவனர் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் வாங்கியதில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA)  மீறப்படவில்லை என்றும் அச்சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே பங்கு பரிவர்த்தனை நடந்திருப்பதாக ரிசர்வ் பாங்க் ஆப் இண்டியா தெளிவுபடுத்தி உள்ளது. இதனை அடுத்து குமுதம் குழுமத்தின் தலைவராக மீண்டும் டாக்டர் ஜவஹர் பழனியப்பனே பொறுப்பேற்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
குமுதம் குழுமத்தை ஆரம்பித்த எஸ் ஏ பி அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு, அந்தக் குழுமத்தின் அனைத்துப் இதழ்களுக்கும் நிர்வாக ஆசிரியராகவும், உரிமையாளராகவும் இருந்தார் அவரது மகன் டாக்டர் எஸ். ஏ.பி.ஜவஹர் பழனியப்பன்.  இவர், அமெரிக்காவில்  இதய சிகிச்சை மருத்துவராகவும் பணியாற்றுகிறார்.
குமுதத்தில் பதிப்பாளராக இருந்த பி வி பார்த்தசாரதியின் மகனான என் வரதராஜனுக்கு நிர்வாக இயக்குநர் பதவி அளித்து, நிறுவனத்தை அவரது பொறுப்பில் விட்டிருந்தார் ஜவஹர். ஆனால் குமுதம் நிர்வாகத்திலும், ஆசிரியர் குழு விவகாரங்களிலும் ஜவஹருக்கும் வரதராஜனுக்கும் சுமூகமான உறவு இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இரு தரப்பினரும் மாறி மாறி புகார் கூறி வந்தனர்.
இறுதியில்  இரு தரப்பினரும் 2010 ஆம் ஆண்டில்  ஒரு சுமூக முடிவுக்கு வந்தனர். அதன்படி இருதரப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.இந்த ஒப்பந்த அடிப்படையில் குமுதம் குழுமத்திலிருந்து வெளிவரும் 9 இதழ்களில் 2 இதழ்கள் மட்டும் வரதராஜன் மற்றும் அவரது சகோதரர் டாக்டர் ஸ்ரீனிவாசனுக்கும் , மற்ற 7 இதழகள் ஜவஹர் பழனியப்பன் மற்றும் அவருடைய தாயார் கோதை அண்ணாமலைக்கும்  ஒதுக்கப்பட்டன.
வரதராஜன்
வரதராஜன்

இருதரப்பினரும்  முழு சம்மதம் மற்றும் சுதந்திரமாக சுயமதிப்பீடு செய்த பின்னரே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆனால் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒத்துக் கொள்ளமுடியாது என்றும் இதைச் சட்டப்படி சந்திக்கப்போவதாகவும் வரதராஜனிடமிருந்து தனக்கு 2011 ஆம் ஆண்டில் தகவல் கிடைத்ததாக டாக்டர் ஜவஹர் பழனியப்பன் கூறியிருந்தார்.
குமுதம் குழுமத்தின் பங்குகளை டாக்டர் ஜவஹர் பழனியப்பன் வாங்கியிருப்பது பெமா சட்டப்படி தவறு என்றும், சட்டவிதிகளை மீறி இப்பங்குகள் வாங்க்பட்டுள்ளன என்றும் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவுக்கு வரதராஜன் தரப்பிலிருந்து புகார் அனுப்பப்பட்ட்து.
பின்னர் குமுதம் குழுமம் நிர்வாகம் 2014 டிசம்பரில் வரதராஜன் வாரிசுகளின் தலைமையின் கீழ் செயல்பட்த் துவங்கியது. இதற்கு பதிலளித்துள்ள ரிசர்வ பாங்க் ஆப் இந்தியா :” உங்கள் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள டாக்டர் ஜவஹர் பழனியப்பன் பெமா சட்டம் 1999 மற்றும் அதனையொட்டிய அனைத்துச் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டே பங்குகளை வாங்கியிருக்கிறார். இதில் எவ்வித சட்டமீறல்களும் கிடையாது என நாங்கள் கருதுகிறோம்..” என ரிசர்வ் பேங்க் ஆப் இண்டியா ஜூன் 15, 2015 ஆம் தேதியிட்ட பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
குமுதம் ப்பளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள டாக்டர் ஜவஹர் பழனியப்பனின் பங்குகளை முழுமையாக ஆராய்ந்தோம். இதில் எவ்விதச் சட்டமீறல்களும் இல்லை. இவர் வாங்கியுள்ள பங்குகளை வைத்து இதை நேரடி அந்நிய முதலீடாக கருதமுடியாது. அனைத்தும் அந்நிய செலாவணிச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடைபெற்றுள்ளது. எனவும் ரிசர்வ் பேங்க் ஆப் இண்டியா தெளிவுபடுத்தி உள்ளது.
இதுதொடர்பாக டாக்டர் ஜவஹர் பழனியப்பனிடம் கேட்டபோது,”ஆர்.பி.ஐ.யின் இந்த தெளிவான அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணமான சிக்கலிலிருந்து விடுபட்டுள்ளேன். எங்கள் மீது குற்றச்சாட்டுகளும் சட்டமீறலும் இல்லை என்பதை ஆர்.பி.ஐ  தெளிவுபடுத்தி இருக்கிறது.எங்கள் மீது சுமத்தப்பட்டது பொய்ப் புகார் என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது. இது எனக்கும் என் சகோதரி கிருஷ்ணா மெய்யம்மைக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாக இதைப்பார்க்கிறேன். இதன்மூலம் என் தந்தைக்குச் சொந்தமான  நிறுவனத்தை அவருடைய  வாரிசுதார்ர்கள் என்ற முறையில் குமுதம் குழுமத்தை நிர்வகிக்கவும், ஆசியர் குழுவிற்கு தலைமைப் பொறுப்பேற்கவும் இதன் மூலம் எங்களுக்கு வழி பிறந்துள்ளது என டாக்டர் ஜவஹர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் குமுதம் குழுமத்தின் நிர்வாகப்பணிகளை வரதராஜனும், ஆசிரியர் குழு தலைமைப் பொறுப்பினை டாக்டர் ஜவஹர் பழனியப்பனும் ஏற்று நடத்தி வந்தனர்.\
மேலும் குமுதம் குழுமத்தின் நிர்வாகம் மற்றும் உரிமை தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வுகாணும் வகையில் ஆர்.பி.ஐ.சில விளக்கங்கள் அளித்து உதவ வேண்டும் என்றும் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2010 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த்த்தில் குமுதம் குழுமத்தை விட்டு வெளியேற வரதராஜன் முன்னரே விருப்பம் தெரிவித்திருந்தார். இப்போது அதற்கு நாங்களும் சம்மதிக்கிறோம் என்றார் டாக்டர் ஜவஹர் பழநியப்பன்.