திரைக்கு வராத உண்மைகள்: 3:

 

Bhairavi-1978-Th

 

ஜினி, தொடக்கத்தில் வில்லனாக நடித்தார். அப்புறம் இரண்டு, மூன்று கதாநாயர்களுள் ஒருவராக நடித்தார். “ப்ரியா”, “ “நினைத்தாலே இனிக்கும்”, “ஆடு புலி ஆட்டம்”, “சங்கர் சலீம் சைமன்”, “இளமை ஊஞ்சலாடுகிறது” வரை இந்த ரகம்.

தயாரிப்பாளர் கலைஞானம், “பைரவி” என்றொரு படம் எடுக்க முன்வந்தார். இந்த கலைஞானம் ஒரு கதாசிரியர்தான். இருந்தாலும் சண்முகம் என்பவர்,  இவரது  கதையை வாங்கிப் படமாக்க முன்வந்தார். அதனால் இந்த சண்முகத்திற்கு பின்னாளில் “பைரவி” சண்முகம் என்றே பெயராயிற்று.

ஆனால், கதாநாயகநாக நடிக்க ரஜினி உடனே ஒப்புக்கொள்ளவில்லை. “வில்லனாக நடித்து வருகிறேன். “இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தில்கூட எனக்கு கதநாயகனுக்கு எதிரான வேடம்தான். என்னை ஹீரோவாகப்போட்டு படம் எடுப்பது ரிஸ்க் அல்லவா?” என்றாராம் ரஜினி.

கதை சொல்லப்போன சண்முகம், “கதையைக் கேளுங்கள். பிடித்திருந்தால் அப்புறம் பேசுவோம்” என்றாராம்.

கதையாக்கேட்ட ரஜினி, ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம். அப்போது சிவாஜி, ஜெய்சங்கர், சிவக்குமார், கமல்ஹாசன் போன்றவர்களே ஹீரோக்களாக நடித்துவந்தார்கள்.

“பைரவி” தொடங்கி, முடித்து, வெளியிடப்பட்டது. ரஜினி பயந்தது போல் இல்லாமல், படம் வெற்றி பெற்றது. “ஓகோ” என்ற வெற்றி இல்லையானாலும் மக்கள் ஹீரோவாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பது மாதிரியான வெற்றி.

இதன் பிறகு ரஜினி தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வந்தார். ஏவி.எம்.மின் “முரட்டுக்காளை” படம், இவரை “பாப்புலர் ஹீரோ” ஆக்கியது.

இதற்கிடையில் ஏவி.எம்மில் பணிபுரிந்துவந்த “பைரவி” சண்முகம், தனியே ஒரு படம் டைரக்ட் செய்ய சென்றார். அன்தப்படம் பாதியோடு நின்றுபோய்விட்டது.

“பைரவி” படத்தின் கதையில் கதாநாயகன் ஊனமுற்றவராக இருப்பார். ரஜினி, தாம் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்திலேயே இப்படி நடிக்க விரும்புவாரா? மாட்டார். . அதனால், “ரஜினியிடம் எப்படியாவது பேசி, கதையை ஏற்கச் செய்வது உன் வேலை” என்று கூறித்தான் சண்முகத்தை ரஜினியிடம் பைரவி கதையைச் சொல்ல அனுப்பினார்கள்.

எதிர்பார்த்தது போலவே, ஊனமுற்ற ஹீரோவாக நடிக்க முதலில் ரஜினி மறுத்துவிட்டார். வேறு கதை தயார் செய்யச் சொன்னார். சண்முகம்தான் ரஜினியை “காம்ப்ரமைஸ்” செய்து ஒருவாறு சம்மதிக்க வைத்து, நடிக்க வைத்துவிட்டார்.

அதிலிருந்து ரஜினிக்கு ஏறுமுகம்தான். ஆனால் சண்முகம்தான், பாவம். ஏவி.எம்.மில் பார்த்த வேலையும் இல்லாமல், தனியாக வந்து இயக்கிய படமும்  பாதியில் நின்று.. சிரமத்தில் இருந்தார்.

இப்போது இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன. ரஜினி பெரிய ஹீரோ. அவர் எவெரஸ்ட் சிகரமாக, தான் கைபர் கணவாயாக, அவர் பைரவியாக.. தான் பாதாள பைரவியாக, மலையும் மடுவுமாக இருக்கும் நிலையில், இப்போது போய் ரஜினியை சந்தித்தால் மதிப்பாரா? அல்லது தன்னை நினைவுதான் வைத்திருப்பாரா?

”உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது.. அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது” என்று “சூரியகாந்தி”படத்தில் கண்ணதாசன் பாடியது அடிக்கடி சண்முகத்தின் காதில் ரீங்காரமிட.. ரஜினியை சந்திப்பதை தவிர்த்துவந்தார்.

இந்நிலையில் சண்முகத்தின் மகளுக்கு திருமண ஏற்பாடுவேறு நடந்தது.. வாழ்ந்துவந்த வீடு அடமானத்தில் இருந்தது. அதுவும் இப்போது வட்டி வெள்ளத்தில் மூழ்கப்போகிறது. “சேட்டு” அனுப்பிவிட்டான் சீட்டு!

என்ன செய்வது..? “காகித ஓடம்.. கடலலை மீது போவது போலே” வடபழி தெருக்களஇல் போய் வந்துகொண்டிருந்தார் சண்முகம். வாழ்க்கையின் ஓரத்தையே நெருங்கிவரும் நிலையில்.. சந்தித்தார் அவரது சகாவை!

ஏவி.எம். கதை இலாகாவில் பணியாற்றிய லட்சுமி நாராயணன்தான் அந்த சகா. அவர் சண்முகத்திடம், “ரஜினியை சென்று பாரேன்.. உதவுவார்” என்றார்.

“ரஜினி அப்போதிருந்த நிலையில் இப்போது இல்லை. உயரத்திற்குப்போய்விட்டார். நானும் அப்போது இருந்த நிலையில் இப்போது இல்லை. அதள பாதாளத்தில் விழுந்துவிட்டேன். ரஜினியிடம் போய் என்ன கேட்பது? எதைக் கேட்பது? என்ன உரிமையில் கேட்பது? “பைரவி” படத்தில் நான் கதாசிரியன். அவர் ஹீரோ. மற்றபடி அவருக்கும் எனக்கும் ஒட்டும் இல்லை: உறவும் இல்லை… அதான் யோசிக்கிறேன்!”

“யோசித்தால் தயக்கம்தான் ஏற்படும்! போ! ரஜினியைப் பார்! உன் நிலமையைச் சொல். அதில் உண்மை இருக்கிறது அல்லவா? அது போதும். மற்றதை ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும். நல்ல மாதிரி அவர் முடிவு செய்வதும் செய்யாயததும் அவரது மனம், உனது நல்ல நேரம் – இரண்டையும் பொறுத்தது. போய் ரஜினியை உடனே பார்!” என்றார். லட்சுமி நாராயணன்.

மறுநாள் ரஜினிக்கு போன் செய்தார் சண்முகம். உதவியாளர் ரமேஷ் எடுத்தார். “பைரவி சண்முகம் என்று சொல்லுங்கள்!” என்று சண்முகம் சொன்னார்.

மறுமுனையில் ரஜினியே வந்தார்: நலம் விசாரித்தார்.

“தங்களை சந்திக்க வேண்டும்” என்றார் சண்முகம்.

“நாளைக்கு காலை பத்து மணிக்கு வாருங்கள்” என்றார் ரஜினி.

மறுநாள்.. பரபரப்புடன் சென்றார் சண்முகம். ரஜினியை சந்திக்க வந்திருந்த தயாரிப்பாளர், இயக்குநர், இன்ன பிறர் வரவேற்பறையில் காத்திருந்தனர்.

அங்கு சென்ற சண்முகம், தனது பெயரையும் ஒரு காகிதத்தில் எழுதி அங்கிருந்த உதவியாளரிடம் கொடுத்தார். தனது முழுப்பெயரான சண்முக சுந்தரம் என்பதை எழுதியிருந்தார். காத்திருந்தார்.

நேரமாயிற்று. இவருக்கு முன் அங்கே காத்திருந்தவர்களையும் ரஜினி உள்ளே அழைக்கவில்லை. சண்முகத்தையும் அழைக்கவில்லை.

நேரமாகிக்கொண்டே இருந்தது. மணி பத்து முப்பது.

ரஜினி, உதவியாளரை உள்ளே கூப்பிட்டார். சற்று நேரத்தில் வெளியே வந்த உதவியாளர், “பைரவி சண்முகம் என்பவர் வந்திருக்கிறாரா..?” என்று கேட்டார்.

“நான்தான்!” என்றார் சண்முகம்.

“என்ன சார்.. உங்கள் பெயரை பைரவி சண்முகம் என்று சொல்லக்கூடாதா? சார் உங்களுக்காகத்தான் ரொம்ப நேரமாகக் காத்திருக்கிறார். வாருங்கள்..” என்றார்.

சண்முகம் போனார்.

ரஜினி எழுந்து, அவரைக் கட்டி அணைத்துக்கொண்டார். பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்துகொண்டார்.

“இத்தனை காலம் ஏன் என்னை சந்திக்க வரவில்லை?” என்று கேட்டார்.

சண்முகம், தான் டைரக்டரான கதையை எல்லாம் சொன்னார். தொழில் தேக்கம், வறுமை, மகள் திருமணம், வீடு ஏலம்.. எல்லாவற்றையுமே சொன்னார்.

கேட்டுக்காண்டார் ரஜினி.

அப்போது ரஜினியினஅ மனைவி லதாரஜினி அங்கே வந்தார்.

“பைரவி” சண்முகத்தைப் பார்த்ததும், ரஜினியிடம் “நீங்கள் சொன்னது இவர்தானா?” என்றார்.

லதா - ரஜினி
லதா – ரஜினி

பஞ்சக் கோலத்தில் இருந்த “பைரவி” சண்முகத்திற்கு ஆச்சரியம். தாம் வருவதற்கு முன்பே தம்மைப்பற்றி மனைவியிடம் கூறியிருக்கிறார் ரஜினி!

“கொடு!” என்று ரஜினி மனைவியைப் பார்த்துக்கூற, லதா தன் கையில் இருந்த பணப்பையை ரஜினியிடம் கொடுத்தார். அதில் இருந்தது ஒரு லட்ச ரூபாய்!

ஆக, சண்முகம் தனது கஷ்டத்தைச் சொல்வதற்கு முன்பே, ரஜனி தன் மனைவியிடம் கூறி வரப்போகிற சண்முகத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவ ஏற்பாடு செய்துவிட்டார். இது தெரியாமல் சண்முகம் தனது கஷ்டத்தை விளக்கிச் சொல்லியிருக்கிறார் ரஜினியிடம்!

ரஜினி எழுந்தார்.

சண்முகத்தை கிழக்கு நோக்கி நிற்கச்சொன்னார்.

அவர் கையில் பணப்பையை கொடுத்தார். அதில் இருக்கும் தொகையையும் சொன்னார்.

பிறகு, “லதா! இவர் காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணிக்கொள்வோம்!” என்றபடிசண்முகம் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ண, லதாவும் உடன் நமஸ்காரம் செய்துகொண்டார்.

உடனே பெரிய அழுகைச் சத்தம்!

அழுதவர் சண்முகமேதான்.

அழுகையோடு ரஜினியைக் கட்டித் தழுவிக்கொண்டார்!

சண்முகத்தை சமாதானப்படுத்தி, அவர் அழுகையை நிறுத்தச் செய்வதற்குள் ரஜினிக்கு பெரும்பாடாகிவிட்டது.

அதைப் பார்த்த லதாவுக்கு அது ஒரு தேவ தரிசனமாகத் தெரிந்திருக்க வேண்டும்!

லதாவிடம், “இன்றைக்கு நான் ஹீரோவாக இருப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர். இவரது கைவாகு, கதை ராசி… பெரிய ஆள் ஆகிவிட்டேன்!” என்றார் ரஜினி உணர்ச்சி மேலிட!

(அடுத்தவாரம் சந்திப்போம்)

ஆர்.சி. சம்பத்  அலைபேசி எண்: 9790752183