1
சீடன் ஒருவன் தனது குருவிடம்,  “காதல் என்றால் என்ன?” என்றான்.
அதற்கு குரு, “கோதுமை வயலுக்கு சென்று, இருப்பதிலேயே பெரிய கோதுமையை கொண்டு வா . பதில் சொல்கிறேன். ,ஆனால் நீ ஒரு தடவை கடந்து சென்ற இடத்திற்கு திரும்பவும் வரக்கூடாது”  என்றார்.
சீடனும் வயல் பகுதிக்கு கிளம்பினான். வயலின் முன்பகுதியிலேயே பெரிய கோதுமை ஒன்று இருந்தது.  ஆனாலும்  அவன் மனம், வயலின் உள்ளே இதைவிட பெரிய கோதுமை இருக்கக்கூடும் என்று எண்ணியது.
வயலின் பாதிப்பகுதியை தேடிய பின் தான், “ஆரம்பத்தில் தான் கண்ட கோதுமையே பெரியது.  அதைவிட பெரிய கோதுமை இனிமேல் கிடைக்கப்போவதில்லை”  என்று உணர்ந்தான்.
ஆனால் ஒரு தடவை சென்ற பகுதிக்கு மீண்டும் திரும்பக்கூடாது என்று குரு நிபந்தனை விதித்திருக்கிறாரே…
ஆகவே வெறும் கையுடன்  திரும்பினான் சீடன்!
ஒன்றுமில்லாமல் வந்த சீடனை பார்த்து குரு,  “இது தான் “காதல்”! மனிதர்கள் தமக்கு பொருத்தமான, மிக நல்ல காதல் இணையை தொடர்ந்து  தேடுவர். ஆனால் இறுதியில்,தாம் அந்த பொருத்தமான நல்லவர்களை இழந்து நீண்ட தூரம் வந்து விட்டதை உணர்வர்”  என்றார்.
சீடன் அடுத்த கேள்வியாக, “கல்யாணம் என்றால் என்ன?” என்றான்.  குரு, ” சோளக்கொல்லைக்கு சென்று இருப்பதில் பெரிய சோளத்தை கொண்டு வா! ஆனால் நீ ஏற்கனவே தேடிய பகுதிக்கு திரும்ப வரக்கூடாது என்ற நிபந்தனை இதிலும் உண்டு” என்றார்.
சீடனும் சோளக்கொல்லைக்கு சென்றான்.  கோதுமை வயலில் அனுபவத்தை மனதில் கொண்டு  மிக கவனமாக தேடினான். சிறிது நேரத்தில் ஓரளவு பருமனான நல்ல சோளப்பொத்தி ஒன்றைக்கண்டு திருப்தியடைந்தான். அதை எடுத்துக்கொண்டு வந்து குருவிடம்   காண்பித்தான்.
குரு,  “இந்த முறை நீ ஒரு சோளத்தை பார்த்து, நன்றாக இருக்கிறது, இது போதும் என்று நினைத்தாய் அல்லவா. உன் மனதில் திருப்தியான எண்ணம்  அல்லவா…  இது தான் “கல்யாணம் ” என்றார்.