கவிதை: மழையைப் பழிப்பது மாபாதகம்!

Must read

rain_0

பெய்த மழை உணர்த்திவிட்டது
அரசியல் செய்தோரை
மந்திரிகள் உணர்த்திவிட்டனர்
தத்தம் மனநிலையை
நடிப்பவர் யார் என நன்றாக
தெரிந்துவிட்டது நமக்கு
ஆக்கிரமித்தது தன் இடத்திலென
அழித்துச் சென்றது மழை
கட்டமைப்பின் அழகை
காட்டிச் சென்றது மாமழை
மூச்சு திணறி கிடந்த ஆறுகள்
முடியாமல் விட்ட பெருமூச்சே இவை
காலாவதியான ஆறு குளங்களின்
எண்ணிக்கையை கணக்கெடுத்து
காட்டியிருக்கிறது கனமழை
அடைமழை சொல்லித் தந்திருக்கிறது
அன்பு மழையை
ஓங்கி பெய்த மழை உணர்த்திவிட்டது
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று
மழை வேண்டாம் என கோபம்
கொள்ளும் மக்களிடம் ஊழல்
அரசியல்வாதிகள் வேண்டாமென
கொதிக்காதது ஏன் என
கொதித்துச் சென்றிருக்கிறது மழை
அழிக்கப்பட்ட ஏரிகளில் ஆக்கிரமித்த
வீடுகளால் வந்து விட்டது சேதம்
தவறு செய்த அரசியல்வாதிகளை
தட்டிக்கேட்காமல் வாக்களித்து விட்டு
தரம் குறைந்த சாலைக்கு
மௌனமாய் வரிசெலுத்திவிட்டு
மழையைப் பழிப்பது மாபெரும் பாவம்..!

–  பானுப்ரியா

More articles

Latest article