புற்றுநோய்.....9-13 வயது பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி
புற்றுநோய்…..9-13 வயது பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி

டெல்லி:
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு புற்றுநோயை உண்டாக்கும் ஹெச்பிவி (மனித பாபில்லோமா நோய்கிருமி) தாக்குதலில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி போடுவது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.
9 வயது முதல் 13 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு மூன்று முறை இந்த தடுப்பு மருந்து செலுத்தினால் இனபெருக்க உறுப்பு மறுக்கள் மற்றும் கர்ப்ப பை வாய் புற்று நோய் ஆகியவற்றில் இருந்து தப்பலாம்.
உலகளவில் பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் இரண்டாவது மிகப்பெரிய புற்றுநோயாக இது உள்ளது. ஆண்டுதோறும் இந்த புற்றுநோய் 5.10 லட்சம் பெண்களுக்கு ஏற்படுகிறது. இதில் 2.88 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.32 லட்சம் பெண்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. இதில் 74 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.
இந்திய பெண்களில் 2.5 சதவீதம் பேருக்கு வாழ்நாள் முழுவதும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. 1.4 சதவீதம் பேருக்கு இறப்பை ஏற்படுத்துகிறது.
டெல்லி அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு மாணவிகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக இந்த ஆண்டு தொடங்குகிறது. இலவச முறையில் 9 முதல் 13 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசமாக செலுத்தும் திட்டத்தை அடுத்த ஆண்டு விஸ்தரிக்கவுள்ளது.
ஒரு முறை செலுத்தப்படும் மருந்தை மானிய விலையில் ரூ. 450க்கு டெல்லி மாநில அரசு வாங்குகிறது. அதனால் குழந்தை நல மருத்துவரை ஆலோசித்து இந்த தடுப்பு மருந்தை பெண் குழந்தைகளுக்கு செலுத்த பெற்றோர் முன் வர வேண்டும்.