மூத்த பத்திரிகையாளர் குமரேசன் (Kumaresan Asak) அவர்களின் முகநூல் பதிவு:
குமரசேன்
குமரசேன்

 “எக்சிட் போல் ரிசல்ட்டுகள் வர ஆரம்பித்துவிட்டது. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய இந்த கணிப்புகள் பற்றி உங்கள் கருத்து என்ன?”
-‘சத்யம்’ தொலைக்காட்சியின் ‘சத்தியம் சாத்தியமே’ நிகழ்ச்சியில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி இது. நான் சொன்ன பதிலின் சாரம்:
“தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு வெளியீடுகள் ஜனநாயகத்திற்குக் கேடு. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கணிப்பு வெளியீடுகள் நேரத்திற்குக் கேடு. இந்த ஒரு மணி நேர விவாதத்திற்கு ஒரு சப்ஜெக்ட் கிடைத்தது என்பதைத் தவிர எக்சிட் போல் ரிசல்ட்டுகளால் என்ன பயன்? வீட்டில், டீக்கடையில், பயணத்தில் நேரம் போவதற்காகப் பேசுவதற்கு ஒரு விசயம் கிடைத்தது என்பதைத் தவிர வேறு என்ன பயன்?

ஒப்பினியன் போல் ரிசல்ட்டுகளைப் பார்த்துவிட்டு எந்தக் கட்சியும் தனது முயற்சிகளை நிறுத்திக்கொள்ளவில்லை. எக்சிட் போல் ரிசல்ட்டுகளைப் பார்த்து எந்தக் கட்சியும் சும்மா இருந்துவிடப் போவதில்லை.
கணிப்புகளை நடத்துகிற நிறுவனங்களும், ஊடகங்களும் தங்களுடைய சந்தையை விரிவுபடுத்த அல்லது தக்கவைத்துக்கொள்ள மட்டுமே ஒப்பினியன் போல், எக்சிட் போல் இரண்டும் பயன்படுகின்றன.
அறிவியல்பூர்வமான ஆய்வு என்கிறார்கள். அறிவியல்பூர்வ ஆய்வு என்றால் ஒரே மாதிரியான முடிவுகள்தானே வர வேண்டும்?
ஒரு நிறுவனம் அந்தக் கட்சிதான் வெற்றி பெறும் என்கிறது, இன்னொரு நிறுவனம் இந்தக் கட்சிதான் ஆட்சியமைக்கும் என்கிறது. உண்மை முடிவு எப்படி வந்தாலும், எந்த நிறுவனத்தின் முடிவையொட்டி வருகிறதோ அந்த நிறுவனம் நாங்கள் சொன்னது போலத்தான் வந்திருக்கிறது என்று விளம்பரம் செய்துகொள்ளலாம். சில சோதிடர்கள் தாங்கள் சொன்ன பலன்களைப் போலவே நடக்குமானால் ‘நான் கணித்தது போலவே நடக்கிறது’ என்று விளம்பரம் தேடிக்கொள்வார்கள், அப்படி நடக்காதபோது ஜாதகத்தின் மீது பழி போட்டு நழுவுவார்கள், அது போலத்தான் இந்த கருத்துக் கணிப்பாளர்களும்.”