k
 
லிங்கப்பட்டியில் நான் ஜாதிக் கலவரத்தைத் தூண்டியதாக அபாண்டமாக பேசியுள்ளதிமுக தலைவர் கருணாநிதி மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் வைகோ உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
“அதிமுக ஆட்சியில் ஜாதிக் கலவரம் இல்லை, மதக் கலவரம் இல்லை. அனைத்துப்பிரிவினரும் அமைதியாக, ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.
ஆனால் அண்ணன் கலைஞர் ஆட்சி நடத்தியபோது, எங்கு பார்த்தாலும் ஒரேகலவரம். கோவையில் தொடர் குண்டுவெடிப்பு, தென் மாவட்டங்களில் ஜாதிக்கலவரம். அண்ணன், தம்பிகளாகப் பழகியவர்கள் வெட்டிக் கொண்டு மரணமடைந்தனர். சந்தைக்குப் போனவர்கள் கை கால்களை இழந்தனர். வேல் கம்பு ஈட்டிகள்தான் எங்கும்  நடமாடின. விருதுநகர், ராஜபாளையம், தூத்துக்குடி என தென் மாவட்டங்கள் பதட்டத்திலேயே இருந்தன.
இன்றோ நிலைமை தலைகீழாக உள்ளது. அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் சிறுத்தைகள் நடமாடலாம், சிங்கங்கள் நடமாடக் கூடாதாஎன்று ஜாதிக் கலவரத்திற்கு  விதை விதைக்கிறார். அமைதி இருக்கக் கூடாது, கலவரம் வரட்டும், ரத்தம் ஓடட்டும், மக்கள் வெட்டுப்பட்டுதுண்டு துண்டாக கிடக்கட்டும் என்பதற்காகவே திட்டமிட்டு பேசுகிறார்.   அப்படி  கலவரம் ஏற்பட்டால் ஒரு பிரிவினர் ஓட்டு தனக்கு கிடைக்கும். லாபம் அடையலாம் என்று கருதியே அப்படி பேசுகிறார்.
இதைப் பற்றி நான் கருத்து சொன்னால் மிருக சாதிகளுக்குள் மோதல் ஏற்பட்டால் நான் என்ன செய்வது என்கிறார். அதுபற்றி கேட்டால் இலக்கிய ரசனையுடன் கூறியதாக சொல்கிறார். இது என்ன வகை இலக்கியம்?
திமுகவில் துரும்பைக் கூட தூக்கிப் போடாத பேரப் பிள்ளையை மத்திய அமைச்சராக்குகிறார். அந்தப் பேரப் பிள்ளை என் மீது வழக்கு போடுகிறார். போடட்டும். சம்மனை அனுப்பியும் நான் வாங்கவில்லையாம். வெளியூரில் இருந்து இன்றுதான் சென்னை வந்துள்ளேன். இன்று அனுப்புங்கள் வாங்கிக் கொள்கிறேன். வைகோ எதற்கும் பயப்படுகிறன் அல்ல. பாஞ்சாலங்குறிச்சி சீமையில் இருந்து வந்தவன். தூக்குக் கயிற்றை முத்தமிடுவான், மண்டியிட மாட்டான்.
1993ல் கொலைப்பழி சுமத்தி என்னை திமுகவிலிருந்து விரட்டினார் கலைஞர். இப்போது இன்னொரு பழியை சுமத்தியுள்ளார். கலிங்கப்பட்டி கிராமத்தில் நான் சாதிக்கலவரத்தைத் தூண்டினேனாம். கலிங்கப்பட்டி கிராமத்தில் அனைத்து சாதியினரும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். இந்தியாவிலேயே மாதிரி கிராமமாக அதுவிளங்குகிறது. ஆதி திராவிட மக்களுக்கும், பிற ஜாதியினருக்கும் அங்கு ஒரே சுடுகாடுதான். ஆதிதிராவிடர் சுடுகாட்டில்தான் எனது தந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டது. என்னைப் பார்த்து கலைஞர் கேட்கிறார். ஆதி திராவிட மக்களிடம் எனது திமிரைக்காட்டி, கலிங்கப்பட்டியில் 2,3 ஆதி திராவிடர்கள் சாகக் காரணமாக இருந்ததாய் என கம்யூனிஸ்டுகள் கலைஞரிடம் சொன்னார்களாம். நான்தான் அவர்களிடம் கெஞ்சி, விட்டு விடச் சொன்னேன் என்கிறார் கலைஞர். இது ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய், கோயபல்ஸ் பிரசாரம். அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்பதுதான் உண்மை. நாங்கள் ஒரே குடும்பமாக வாழ்கிறோம்.எனது வீட்டில் அண்ணா, காமராஜர், கலைஞர் உட்கார்ந்த இடத்தில்தான் ஆதி திராவிடசகோதரர்கள் உட்காருகிறார்கள். இரவு 12 மணிக்கு வந்து கதவைத் தட்டி உடல் நலம் சரியில்லை என்றாலும் காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்புகிறோம். அப்படிப்பட்ட என் மீது இப்படி ஒரு பழியா?
இந்தப் பழியை சுமத்திய உங்கள் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடப்போகிறேன்..” –   இவ்வாறு வைகோ பேசினார்.
(2006ம் ஆண்டு பேச்சு)