2

ஜினியின் புதிய படமான “கபாலி”யின் படப்பிடிப்பு மலேசியாவில் துவங்குகிறதா… ரஜினியின் ஃபேவரைட் ஏவி. எம். பிள்ளையார் கோயில் செட்டிலா என்று மீடியாக்களில் பெரும் விவாதம் நடந்தது. மலேயிசில் இருக்கும் பிள்ளையார் கோயிலைக்கூட பட இயக்குநர் பார்த்துவந்தார். இந்த நிலையில் சென்னையிலேயே நாளை – செப்டம்பர் 17ம் தேதி – துவங்குவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், “கபாலி படத்தை ரஜினி டிராப் செய்துவிட்டார். ஆகவே நாளை படப்பிடிப்பு துவங்காது” என்று கோலிவுட்டில் அதிர்ச்சிகரமான பேச்சு கிளம்பியிருக்கிறது.

நாமும் அதிர்ந்துபோய் விசாரிக்க ஆரம்பித்தோம்.

வருத்தமாக இருந்தாலும் இந்த விவகாரத்தையும் ரஜினியின் முந்தைய சோகமான லிங்காவில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.

லிங்கா படத்தை வாங்கி விநியோகம் செய்தவர் வேந்தர் மூவிஸ் மதன். அந்த படம் கவிழ்த்துவிட.. தியேட்டர்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ஏக அடி. உண்ணாவிரதபோராட்டம், ரஜினி வீட்டு முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் என்றெல்லாம் அவர்கள் இறங்கினார்கள். படத்தை முடித்துவிட்டு நிம்மதியாக தியானம் இருக்க முடியவில்லை ரஜினியால். பாதிக்கப்பட்ட தியேட்டர்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டார்.

அந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் என்கிற கோதாவில் ரஜினிக்கு ஃபேவராக விசயத்தை முடித்துக்கொடுத்தவர் கலைப்புலி தாணு. அதற்கு பதிலீடாகத்தான் “கபாலி” கால்ஷீட்டை ரஜினியிடம் கேட்டுப்பெற்றார் தாணு.

ஒரு புறம் கபாலி பட வேலைகள் மும்மரமாக நடந்துகொண்டிருக்க.. இன்னொரு புறம் விஷால் நடித்த பாயும்புலி படத்தால் விவகாரம் வெடித்தது.

பாயும்புலி படத்தை தயாரித்தது வேந்தர் மூவிஸ் மதன். அவர்தான் லிங்கா படத்தை வெளியிட்டவர்.

“ஏற்கெனவே லிங்காவால், நம்மை நட்டமடைய வைத்தவர் மதன். அந்த நட்டத்தை ஈடுகட்டாவிட்டால் அவரது தயாரிப்பில் வரும் பாயும் புலி படத்துக்கு ரெட் (தடை) விதிக்க வேண்டும்” என்று தியேட்டர்காரர்கள் தீர்மானிக்க… பிரச்சினை வெடித்தது.

உடனே தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, “தியேட்டர்காரர்கள் ரொம்பவே முரண்டு பிடிக்கிறார்கள். ஆகவே செப்டம்பர் 4ம் தேதி முதல் எந்த படத்தையும் ரிலீஸ் செய்ய மாட்டோம்” என்றார் எகிடுதகிடாக.

ஆனாலும் தியேட்டர்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அசரவில்லை. தமிழ்நாடு தியேட்டர் உரியமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம், “போட்டி தயாரிப்பாளர்சங்கம் அமைப்போம். ரிலீஸாகாமல் சின்ன பட்ஜெட் படம் இருநூறு முடங்கிக்கிடக்கின்றன. அவற்றை ரிலீஸ் செய்வோம்” என்று ஆவேசமாக அறிவித்தார்.

இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத கலைப்புலி தாணு, தனது அறிவப்பை வாபஸ் பெற்றார். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை… தனக்கு போட்டியாக கிளம்பிய பன்னீர் செல்வத்தின் மகனுக்கு போன் போட்டு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அதை அப்படியே பதிவு செய்து, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டார் பன்னீர் செல்வம்.

அதுமட்டுமல்ல.. இன்னொன்றும் சொல்ல ஆரம்பித்தார். “கலைப்புலி தாணி ரொம்பவே வில்லங்கம் செய்கிறார். ஏற்கெனவே லிங்கா படத்தின் நட்டம், விநியோகஸ்தர்களையும் தியேட்டர்காரர்களையும் எட்டாமல் போனதற்கு இவர்தான் காரணம். இவரது தயாரிப்பில் உருவாகும் கபாலிக்கு தடை போடுவோம்” என்று விநோயகஸ்தர்களையும் தியேட்டர்காரர்களையும் திரட்ட ஆரம்பித்தார்.

இந்த செய்தி ரஜினியின் காதுக்குப் போக பதறிவிட்டார் மனிதர்.

“ஏன்.. ஏன்.. கபாலிக்கு ஏன்” என்று தனது நம்பிக்கை வட்டாரத்தில் அவர் விசாரிக்க.. அனைவருமே கலைப்புலி தாணுவை கை காட்டியிருக்கிறார்கள். அவரை அழைத்து இரு நாட்களுக்கு முன் விசாரித்திருக்கிறார் ரஜினி.

முந்தைய லிங்காவுக்காக தான் கொடுத்த நட்டஈடு உரியவர்களிடம் முழுமையாக போய் சேரவில்லை என்பதையும் தெரிந்துகொண்டார்.

முடிவில், “தாணுவால் இவ்வளவு பிரச்சினை வரும் என்று நினைக்கவில்லை. இனியும் கபாலியை தொடர்வது சரியில்லை” என்ற தனக்கு நெருங்கய வட்டாரத்தில் சொல்லியிருக்கிறார்.

அதற்கு அவர்கள், “எதற்காக டிராப் செய்ய வேண்டும். தயாரிப்பாளரை மாற்றிவிடலாமே” என்று கூறியிருக்கிறார்கள்.

அதற்கு ரஜினி, “ஏற்கெனவே தாணு பல நடிகர்கள் மீது வெளிப்படையாக குற்றம் சாட்டியவர். அவரிடமிருந்து கமல் கூட தப்ப முடியவில்லை. ஆளவந்தான் படத்துக்காக கமலையே கடுமையாக விமர்சித்தவர்தான் தாணு.

ஆகவே தயாரிப்பாளரை மாற்றினால் அதிலும் ஏதாவது வில்லங்க விவகாரங்கள் வெடிக்கக்கூடும். டிராப் செய்வதே நல்லது” என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து ரஜினிக்கு போன் செய்திருக்கிறார் தாணு. ஆனால் ரஜினி அட்டெண்ட் செய்யவில்லை. இருவருக்கும் பொதுவான நண்பர்கள் மூலம் நேற்று இரவு வரை பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இப்போதும் தொடர்கிறLு.

இதையடுத்து இந்த செய்தி வெளியாகும் நேரம் வரை, நாளை “கபாலி” படப்பிடிப்பு உண்டா இல்லையா, இருந்தால் அதற்கு தயாரிப்பாளராக தாணு தொடர்வாரா என்பதெல்லாம் சஸ்பென்ஸாகவே இருக்கிறது.

“கபாலி படம் டிராப் ஆவது என்பது அதிர்ச்சிதான். ஆனால் அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது” என்று கூறும் திரையுலக புள்ளிகள், ஏற்கெனவே ராணா, ஜக்குபாய் ஆகிய படங்களை ரஜினி டிராப் செய்யததையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கபாலிஸ்வரா…  ரசிகர்களுக்கு  நல்ல முடிவு சொல்லப்பா!