downloadss
தென்னாப்பிரிக்காவில் கன்னித்தன்மையை நிரூபிக்கும் மாணவிகளுக்கு ”உதவித்தொகை” வழங்கும் திட்டம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலதரப்பில் இருந்தும் இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து திட்டத்தை ஒத்திவைத்துள்ளது தென்னாப்பிரிக்க அரசு.
நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும், ஏழை, ஒடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம்.  ஆனால் தென்னாப்பிரிக்காவில், தங்களது கன்னித்தன்மையை நிரூபிக்கும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தத் திட்டம், இளம் வயதில் பெண்கள் கர்ப்பமடைவதை தடுக்கும் என்று தென் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள க்வா ஷுலு நாட்டல் மாகாணத்தில் உள்ள ஒரு நகரின் மேயர் டூடு மசிபோகோ தெரிவித்தார்.
ஆப்பிரிக்கா நாடுகளில்  டீன் ஏஜ் வயதில் உள்ள பள்ளி மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரித்து வருகிறது. இதனால் இள வயது தாய்மார்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
தென் ஆப்பிரிக்காவில் நூற்றுக்கு 18 இளம் பெண்கள் டீன் ஏஜ் வயதிலேயே தங்களின் கன்னித்தன்மையை இழக்கின்றனர். இளம் வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு 68000 டீன் ஏஜ் பெண்கள் திருமணத்திற்கு முன்பே தாய்மை அடைந்தார்கள்.  2012 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 81000 ஆக அதிகரித்தது. 2013ம் ஆண்டில் 1 லட்சம்  ஆனது.
இளம்வயதிலேயே கர்ப்பமடையும் பெண்களில் 36 சதவிகிதம் பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள்.   மேலும்  ஹெச்ஐவி பாதிப்பிற்கும் ஆளாகி மரணமடைகிறார்கள்.
 
இதையெல்லாம் காரணம் காட்டித்தான், மாணவிகளுக்கு கன்னித்தன்மை சோதனை என்றும்  அதற்கு உடன்படுபவர்களுக்கு உதவித்தொகை என்றும் அறிவிக்கப்பட்டது.
மனித உரிமைகள் அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த கன்னித்தன்மை சோதனையை அமல்படுத்துவதை ஒத்திவைத்துள்ளது தென்னாப்பிரிக்க அரசு.