1
தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில் வித்தியாசமானது. தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். இதில் என்ன வித்தியாசம் என்றால் இந்த நவக்கிரக கோவில் கடலில் உள்ளது. இந்துக்களின் நம்பிக்கையின் படி சூரியனை சுற்றும் ஒன்பது கோள்களும், இவ்வுலகில் வாழும் மக்களின் விதியை தீர்மானிக்கின்றன. அந்த ஒன்பது கோள்களை வழிபட தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்கள் இருந்தாலும், இந்த நவக்கிரக கோவில் மிகப் பிரசித்தி பெற்றது. வால்மீகி இராமயணத்தின் கதாநாயகனான ஸ்ரீராமபிரான் எழுப்பிய கோவிலாகும் இது.
ராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, தேவிப்பட்டினத்தில் கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டார். ராமபிரான் வழிபட்டுக் கொண்டிருந்த சமயம் கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினார் அவர். பின்னர் கடல் அலைகள் அமைதியடைந்தன. இதனாலேயே இன்றுவரை இங்கு கடல் அலைகள் அதிகம் காணப்படுவதில்லை என்று கூறலாம். இந்த இடத்தில்தான் ராமர் சனிதோஷத்தில் இருந்து விடுபட்டார் என்ற வரலாறும் உண்டு.
இந்த கோவிலின் அருகே கடற்கரையில் திலகேஸ்வரர் கோவிலும் உள்ளது. இங்கு சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சியளிக்கின்றனர். இந்தக் கோவிலுக்கு நவபாஷனக் கோவில் என்று ஓர் பெயரும் உள்ளது. இங்கு நவதானியங்களை கொண்டு மக்கள் பூஜை செய்கின்றனர். அமாவாசை தினங்களில் ஏராளமானோர் குவிந்து அவர்களின் மூதாதையர்களையும் வழிபடுகின்றனர். ஆடி அமாவாசை தினத்தன்று இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை நடத்துகின்றனர். இராமருக்கு சனி தோஷம் நீங்கியதால், இங்கு வழிபட்டால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். மேலும் இந்தக் கோவில் மூதாதையர்களை வழிபட மிகச்சிறந்த இடமாக கருதப்படுகிறது.
தி மா தமிழழகன்