ஒத்துழைக்காத போலீஸ்! சுடுகாட்டில் சகாயம் ஐ.ஏ.எஸ்.!

Must read

sa new

மதுரை:

மதுரை மாவட்டம் மேலூரில் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்ட போலீசார் ஒத்துழைக்கவில்லை என சகாயம் ஐ.ஏ.எஸ். குற்றச்சாட்டியுள்ளார். மேலும் தடயங்கள் அழிக்கும் வாய்ப்பு இருப்பதால், அந்த இடத்தைவிட்டு நகரப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் கிரானைட் குவாரிகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவினர் கடந்த 10 மாதகாலமாக  விசாரணை நடத்தி வருகின்றனர்.  வரும் 5 ஆம் தேதியோடு,  விசாரணைக் காலம் முடிகிறது.  அதற்குள்  விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஆகவே  சகாயம் குழுவினர் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேலூர் அருகே இ.மலம்பட்டியில் இன்று ஆய்வு செய்த சகாயம், மணிமுத்தாறு நடுவில் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு, ஆற்றின் குறுக்கே கரை போடப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்தார். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளிடம் விசாரித்தார்.
அப்போது அங்கு வந்த சேவற்கொடியோன் என்ற பிரபு  சகாயத்திடம் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறினார். அவர், “1999 முதல் 2003 வரை பி.ஆர்.பி., நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தேன். அப்போது மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து சாப்பாடு கொடுப்பார்கள்.  நான் வேலை பார்த்த காலங்களில் 11 ஆண்கள் மற்றும் ஒரு பெண்னை அழைத்து வந்திருக்கிறேன்.
ஒருமுறை இ.மலம்பட்டி குவாரியில் பழுதான ஆயில் மோட்டாரை எடுத்து கொண்டு  ஜோதிபாசு என்பவருடன்  கம்பெனிக்கு சென்றேன். எதிரில் மற்றொரு வண்டியில் மேலாளர் அய்யப்பன் சென்றார். அந்த வண்டியில், நான் அழைத்து வந்ததில் இருவர் கழுத்தறுபட்டு இறந்து கிடந்தனர். இ.மலம்பட்டி அருகே மணல் அள்ளும் இயந்திரத்தை கொண்டு குழி தோண்டி அந்த இருவரையும்  இருவரையும் புதைத்து விட்டனர்.
இருவர் கழுத்தறுபட்டு இறந்து கிடந்ததை நான் பார்த்துவிட்டேன் என்று மேலாளர் அய்யப்பனிடம்  ஜோதிபாசு கூறிவிட்டார். இதனால் என்னையும் அய்யப்பன் மிரட்டினார்” என்று சேவற்கொடியோன் கூறினார்.
அவர் குறிப்பிட்ட இடத்தில்  மணல் அள்ளும் இயந்திரத்தை கொண்டு தோண்டப்பட்டது. அப்போது போலீசாருக்கு உயர் அதிகாரிகளிடமிருந்து மணல் அள்ளும் இயந்திரத்தை கொண்டு தோண்டினால் தடயங்கள் சேதமாகிவிடும் என தகவல் வரவே தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சகாயம் குழுவினர் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் இடங்களை தோண்ட போலீசார் ஒத்துழைப்பு தரவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் அந்த இடங்களை தோண்டும் வரை அங்கிருந்து  நகர மாட்டேன் என சகாயம் தெரிவித்தார்.
சகாயம் விசாரணை குழுவைச் சேர்ந்த ஏ.டி.எஸ்.பி., வேலு, தனி உதவியாளர் ஆல்பர்ட் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது: “சேவற்கொடியோன் குற்றம்சாட்டிய இ.மலம்பட்டி மணிமுத்தாறு பின்புறம் நரபலி கொடுக்கப்பட்ட இடத்திற்கு காலை 10 மணிக்கு வந்தோம். போலீசார் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்ட முயற்சித்த போது, எஸ்.பி., தடயங்கள் அழிந்து போவதாக தெரிவித்ததால் பணி நிறுத்தப்பட்டது. பிறகு ஆட்கள் மூலம் தோண்ட ஏற்பாடு நடந்தது.
இந்த நிலையில், திடீரென “புகார் கொடுத்தால் மட்டுமே தோண்ட முடியும்” என போலீசார் தெரிவித்ததனர். இதையடுத்து வி.ஏ.ஒ., அழகு புகார் கொடுத்தார். சம்பவம் நடந்து பல மாதங்களானதால் எலும்புகள் கிடைக்கலாம் என கருதி டாக்டர் குழு வரவழைக்கவும் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் மதுரை டீன், போலீசார் கடிதம் கொடுத்தால் மட்டுமே, டாக்டர் குழுவை அனுப்ப முடியும் என்றார். கீழவளவு இன்ஸ்பெக்டர் நாகராஜை அனுப்பி கடிதம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஏ.டி.எஸ்.பி., மாரியப்பன், ”மாலை ஐந்து மணிக்கு மேலாகிவிட்டது. இனி தோண்ட முடியாது,” என தெரிவித்தார். போலீசார் ஒத்துழைக்க மறுக்கின்றனர்” என்று அவர்கள் தெரிவித்தார்கள்.
இதனிடையே, அங்கிருந்து சென்றுவிட்டால், தடயத்தை அழித்து விட வாய்ப்பு உள்ளதாகக் கூறி அங்கேயே இரவு முழுவதும் காத்திருக்க சகாயம் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு ஏதுவாக ஜெனரேட்டர் வசதியையும் ஏற்பாடு செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே   சகாயம் குழுவினரின் நடவடிக்கையை போன் மூலம் கிரானைட் நிறுவனத்தினருக்கு தகவல் தெரிவித்த முருகானந்தம் என்பவரை  காவல்துறையினர் கைது செய்தனர்.

More articles

Latest article