1457012724-9041
டில்லி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீது வரி விதிக்கும் முடிவை அரசு வாபஸ் பெறுவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி  பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார். இதனால் நடுத்தர வர்க்கத்து தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்) மீது வரி விதிக்கப்படுவதாக, 2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து விளக்கம் கொடுத்தத நிதி அமைச்சகம், “அதில், 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு, பி.எப். கணக்கில் சேரும் தொகையை திருப்பி எடுக்கும்போது, 60 சதவீத தொகைக்கு மட்டுமே வரி விதிக்கப்படும்.  40 சதவீத தொகை வரியற்றது” என்றது. ஆனாலும் மக்களின் எதிர்ப்பு குறையவில்லை.
இதையடுத்து பிரதமர் நரேந்திரபமோடி, நிதி அமைச்சகத்திடம் இதுகுறித்து ஆலோசித்தார். அப்போது அவர், பி.எப். மீதான வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தியதாக  இரு தினங்களுக்கு முன்பு ஊடகங்களில் தகவல் வெளியானது.
எனவே, வரி விதிப்பு குறித்த திருத்தப்பட்ட அறிவிப்பு செவ்வாய்க்கிழமையான இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதை உறுதி செய்யும்விதமாக  பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் ஜெட்லி, இன்று “தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீது வட்டி விதிக்கும் பட்ஜெட் அறிவிப்பை வாபஸ் பெறப்படுகிறது.  அதற்கு பதிலாக வேறு வழிகளில் நிதி ஆதாரத்தை பெருக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்” என்று  அறிவித்தார்.
மக்களின் எதிர்ப்பைக் கண்டு இந்த விவகாரத்தில் மத்திய அரசு பணிந்துள்ளது. அரசின் இந்த முடிவு தொழிலாள வர்க்கத்தினரை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.