vembu

 

இந்த மழைக்காலத்தில் பெரும்பாலானவர்கள் ஜூரத்தால்.. அதிலும் டெங்கு ஜூரத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் அபாயமும் இருப்பதால், மக்கள் ஜூரம் என்றாலே நடுங்குகிறார்கள்.

இந்த டெங்கு ஜூரத்திலிருந்து, நிலவேம்பு குடிநீரும், பப்பாளி இலைச்சாறும் காப்பாற்றும் என்று பரப்புரை செய்யப்படுகிறது. அரசே, நிலவேம்பு குடிநீரை மக்களுக்கு வழங்கிவருகிறது.

ஆனால், “இந்த நிலவேம்பு மற்றும் பப்பாளி சாறினால், எந்தவித பலனும் இல்லை” என்று சொல்லி அதிர்ச்சி அளிக்கிறார் டாக்டர் ஜானகிராமன்.

இவர் கூறுவதைக் கேளுங்கள்:

“உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் தெற்காசியாவில் மட்டும் ஐந்து கோடி பேர் இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் ஐந்து லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு, அவர்களில் 12 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள்.

இந்த டெங்கு காய்ச்சல் வைரஸானது, ஏடிஎஸ் என்கிற ஒருவகை கொசு கடிப்பதால் பரவுகிறது. இந்த ஏடிஎஸ் இன கொசுக்களை எளிதாக கண்டறியலாம். இந்த வகைக் கொசுக்கிளின் உடலில் கருப்பு வெள்ளைக்கோடுகள், மாறி மாறி இருக்கும்.

இவை, மனிதரை பெரும்பாலும் பகலில் மட்டும் கடிக்கும். இவை நீர் நிலைகளில் முட்டையிடாமல், செயற்கையாக தண்ணீர் தேங்கியுள்ள டயர்கள், தேங்காய் மட்டைகள், உடைந்த பாட்டில்கள், மரங்களின் இலைகளில் நீர் தேங்கும் இடங்கள், பூந்தொட்டிகள, தீ அணைக்க தேக்கி வைக்கப்பட்டிருக்கும் வாளிகள் போன்றவற்றில் முட்டையிடும்.

dengue-fever

இந்த முட்டையிலிருந்து உற்பத்தியாகும் ஏடிஎஸ் கொசுக்கள், “டெங்கு வைரஸால்” தாக்கப்பட்டுள்ள ஒரு நபரைக் கடித்த பிறகு, மற்ற மனிதரைக் கடிக்கும்போது டெங்கு பரவுகிறது.

அறிவியல் மருத்துவம் என்ன சொல்கிறது?

விஞ்ஞான மருத்துவ முறைகளில் இந்த டெங்கு நோய், அதன் தீவிரத் தன்மையைப் பொறுத்து.. டெங்கு காய்ச்சல், காய்ச்சலுடன் கூடிய ரத்த போக்கு, காய்ச்சல் மற்றும் ரத்தப்போக்குடன் ஊடிய இரத்த சுழற்சி சீர்குலைவு என்று மூன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

டெங்கு வைரஸை அழிக்கும் மருந்தோ அல்லது தடுப்பூசிகளோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனஅறு மருத்துவ உலகம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த வைரஸை, உடல் சில வாரங்களில் தானே எதிர்கொள்கிறது. அந்த சில வாரங்களில் ஒரு மனிதர், நோயிலிருந்து விடுபடலாம், அல்லது கடுமையாக தாக்கப்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டோ அல்லது உடல் ரத்த சுழற்சி சீர்பட்டோ உயிர் இழக்கலாம்.

உதாரணமாக, மருத்துவ கவனிப்பில் உள்ள ஒரு நோயாளிக்கு இரத்தப்போக்கு ஏற்பட்ால், அவர் அதிக இரத்தப்போக்கால் உயிர் இழக்காமல் அல்லது சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிப்படையாமல் காக்க முயற்சிக்க இயலும்.

உலகம் முழுதும் விஞ்ஞான முறைப்படி இந்த நோய் இப்படித்தான் அணுகப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பப்பாளஇ இலைச்சாறு, நிலவேம்பு நீர் என்று சில மாற்று முறைகளை அரசே பரிந்துரைக்கிறது. இதற்காக ஊடக விளம்பரத்துக்காக பல கோடி ரூபாய் செலவழிக்கிறது.

ஆனால் பப்பாளி இலைச்சாறோ, நிலவேம்பு நீரோ டெங்குவை போக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

2011ம் ஆண்டு விலங்குகள் மேல் மட்டுமே நடத்தப்பட்ட ஓர் ஆய்வில்நிலவேம்பில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எத்தனலிக் வேதிவினைப் பொருட்கள், (Ethanolic extract) சிக்குன் குனியாவினால் ஏற்படும் காய்ச்சலின் அளவை சறிது குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் காய்ச்சலைக் குறைக்க ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள மற்ற மருந்துகளைவிட இது சிறந்தது என்பதற்கான ஏதும் அந்த ஆய்வில் கிடைக்கப்பெறவில்லை.

மேலும், மனிதர்களுக்கு ஏற்படும் டெங்கு காய்ச்சலுக்கு இந்த எத்தனலிக் வேதிப் பொருட்களோ, பப்பாளி இலைச்சாறோ பயன்படும் என்பதற்கோ அல்லது அவை எப்படி வேலை செய்கிறது என்பதற்கோ இதுவரை எந்தவித ஆதாரமும் இல்லை. இந்த பொருட்களின் திறனுக்கான ஆதாரமும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

மற்றும் இதை யார் கண்டுபிடித்தார்கள், எப்படி கண்டுபிடித்தார்கள் என்ற கேள்வகளுக்கும் பதில் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் நிலவேம்பு, பப்பாளி என்பதெல்லாம் ஆதாரமற்ற செய்திகளே.

உலக நாடுகெள் எல்லாம் டெங்குவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் நிலவேம்பு குடிநீர் டெங்குவை குணப்படுத்தும் என்பது வேடிக்கையான வேதனையே.

அரசே சொல்லிவிட்டதால், டெங்கவால் பாதிக்கப்பட்டவர் வீட்டில் இருந்தபடியே நிலவேம்பு குடிநீரும், பப்பாளி சாறும் அருந்தி வந்தாரானால் அது உயிருக்கு ஆபத்தாகவும் முடியும்.

ஆகவே நண்பர்களே, உங்களுக்கோ உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனே உரிய மருத்துவரை நாடுங்கள்.”

(நன்றி: காட்டாறு மாத இதழ்)