3

சென்னை:

தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு பிரம்மாண்டமாக இரு நாட்கள் நடந்து முடிந்தது. “ மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீடுகள் வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன” என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். “இவற்றில் எத்தனை சதவிகித ஒப்பந்தங்கள் உண்மையில் நிறைவேற்றப்படும்” என்று எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த நிலையில், சமீபத்திய ஒப்பந்தங்கள் காரணமாக எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முதலீடு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி தென்மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.67 ஆயிரத்து 920 கோடி முதலீடு வரவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த இடத்தை ரூ.35 ஆயிரத்து 200 கோடியுடன் கடலூர் மாவட்டம் பிடித்திருக்கிறது. நாகை மாவட்டத்தில் ரூ. 24 ஆயிரத்து 380 கோடி முதலீடு வருவதற்கான ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.15 ஆயிரத்து 838 கோடி, சென்னை மாவட்டத்தில் ரூ 5 ஆயிரத்து 395 கோடி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 5 ஆயிரத்து 100 கோடி, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.4 ஆயிரத்து 979 கோடி, வேலூர் மாவட்டத்தில் ரூ. 4 ஆயிரத்து 500 கோடி சேலம் மாவட்டத்தில் ஆயிரத்து ரூ.123 கோடிக்கான முதலீடுகளும் வர இருப்பதாக தெரிகிறது.

ரூ.730 கோடிக்கான தொழில் ஒப்பந்தங்கள் கோவை மாவட்டத்துக்கும், ரூ. 650 கோடிக்கான ஒப்பந்தங்கள் விழுப்புரம் மாவட்டத்துக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 534 கோடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 500 கோடி, . திருப்பூர் மாவட்டத்தில் ரூ.496 கோடி, நெல்லை மாவட்டத்தில் ரூ. 275 கோடியும் முதலீடு செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.

விருதுநகர் ரூ. 151 கோடி,, கன்யாகுமரி 150 கோடி ரூபாயும் முதலீடுகள் வர இருக்கின்றன.

தமிழகத்திலேயே மிகக் குறைந்த அளவாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 94 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மொத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் என்ற நிலையில், மாவட்டவாரியாக முதலீடுகள் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 192 கோடி ரூபாய் ஆகும். மீதமுள்ள 70 ஆயிரத்து 968 கோடி ரூபாய் முதலீடுக்கான ஒப்பந்தங்கள் எந்தப் பகுதியையும் குறிப்பிடாமல் கையெழுத்திடப்பட்டுள்ளன.