ரஜினி ரசிகன்

கோவை மாவட்டத்தில் முதல் ரஜினி மன்றம் கரடிவாவி என்னும் ஒரு கிராமத்தில் உருவானது அவ்வூரின் கல்வெட்டுக்களில் பொறிக்கப்படாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை .

தங்கமகன் ரஜினிகாந்த் ரசிகர் மனமகிழ் நற்பணி மன்றம் …. காலப்போக்கில் மறைந்து விட்டது .

இன்று காலை சுப்ரமணி அண்ணனோடு டீக்கடையில் நின்று கொண்டிருக்கும் போது ஞாபகம் வந்து கேட்டேன் ” இன்னிக்கு தலைவர் பொறந்த நாளாமே .. ”

“அப்படியா …. “என்று சுரத்தில்லாமல் கேட்ட சுப்பிரமணி ஒரு காலத்தில் மன்றத்தின் தலைவர் .

ஏதோ நினைத்தவராக கடையில் இருந்து வெளியே வந்து எதிர்புறம் உள்ள சத்துணவு கூடத்தின் சுவரை அண்ணாந்து பார்த்து எதையோ தேடியபடி என்னை சைகை செய்து அழைத்த சுப்பிரமணி அண்ணனின் முகத்தில் ஒரு சிறு புன்னகை .

வெளியே வந்து அவர் கை நீட்டிச் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தேன் .

சத்துணவுக் கூட சுவரில் மேல் மட்டத்தில் நீலம் கொண்டு அழகான எழுத்தில் எழுதப்பட்டிருந்தது .
‘ .. பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் . ‘

அழியாமல் காலத்தை தாண்டி இருக்கும் அந்த வாழ்த்தை இவர் தான் எழுதியிருக்க வேண்டும் . அவ்வளவு அழகான கையெழுத்து வேறு யாருக்கும் வாய்க்காது .

படித்து விட்டு திரும்பும் போது சுப்பிரமணியின் சைக்கிள் கிரீச் .. கிரீச் .. என்ற சத்தத்துடன் முன்னாள் ரஜினி மன்ற தலைவரை சுமந்து கொண்டு தார் சாலைக்கு ஏறியிருந்தது .

  • பல்லடம் ராசு