1983 இனக்கலவரத்தின் பின்னணியில் தமிழகத்தில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களின் கதி தொடர்ந்து அந்தரத்திலேயே தொங்குகிறது.

மாநிலத்திலுள்ள 110 அகதி முகாம்களில் 65,000 பேரும், வெளியே மேலும் 40 ஆயிரம் பேரும் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.Srilankha

முள்ளிவாய்க்கால் கொடுமை ஓய்ந்து மெல்ல மெல்ல அங்கே சகஜ நிலைமை திரும்பிக்கொண்டிருக்கிறதே, மீண்டும் நாடு திரும்பிவிடலாமா, அமைதியாக வாழ்க்கை நடத்தமுடியுமா என்று தெரிந்துகொள்வதற்காக இலங்கை செல்ல முயல்வோரிடம், இனி நாங்கள் அகதிகளாக இந்தியா திரும்பமாட்டோம் என உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடச் சொல்லுகின்றனர் முகாம் அதிகாரிகள் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இது என்ன கொடுமை? ஒரு பக்கம் இங்கிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்படவேண்டும் என ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் கோரி வருகின்றன, அது குறித்து யோசிக்கலாம் என்று கூட மத்திய அரசு கூறியிருக்கிறது. இன்னொரு பக்கம் நாடும் வீடும் எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டு வரலாமே என நினைப்போரை, இனி இந்தப்பக்கம் தலைவைத்துப் படுக்காதே என்கிறது மத்திய, மாநில அரசுகள்.

1983 ஆண்டு இனகலவரத்தின் விளைவாய் ஆயிரக்கணக்கில் இலங்கைத் தமிழர்கள் பாக் ஜலசந்தியைக் கடந்து தமிழகம் வந்தடைந்தனர். நூற்றுக் கணக்கில் முகாம்கள் திறக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும்,  மண்ணெண்ணெயும், ஏன் மின்சாரமும் கூட இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் 1989 இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னணியில் ஏறத்தாழ அனைத்து முகாம்களும்மூடப்பட்டன, அகதிகள் நாடு திரும்பினர். பெரிய அளவில் அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று சொல்லமுடியாது. ஆனால் அவர்கள் தயக்கத்துடன் தான் இலங்கைக்குப் பயணித்தனர்.

MODI_JAYA_1304850f

ஆனால் இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே மோதல், இலங்கை அரசுடனேயே மீண்டும் போர், என்றான நிலையில் அகதிகள் திரும்ப தமிழகத்திற்கு வந்தனர்.

அப்போது மீண்டும் துவங்கப்பட்ட முகாம்கள் இன்னமும் தொடர்கின்றன. 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா.இவர்களெல்லோரும் விடுதலைப் புலிகள் அல்லது அவர்களது ஏஜெண்டுகள், அவர்கள் நாடு திரும்பவேண்டும் என ஒற்றைக்காலில் நின்று, அங்கே நிலை சரியில்லையே என முணுமுணுத்த ஐநாவின் அகதிகள் ஆணையத்தையும் மிரட்டிப் பணியவைத்து  30,000க்கும் மேற்பட்டோரைத் திருப்பி அனுப்பினார். ஆனால் தொடர்ந்து ஆர்வலர்களின் போராட்டம், நீதி மன்றத்தில் வழக்கு என்று எதிர்ப்பு உருவாக, அந்த நாடு கடத்தும் படலம் தற்காலிகமாக நின்றது.

ஆனாலும் முகாம்களில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். பணக்கொடை பத்தாது என வெளியே கூலி வேலைக்குப் போவது கூட பெரும் பிரச்சினையானது, தாமதமாகத் திரும்பினால் ஆயிரத்தெட்டு கேள்விகள், தொடர்ந்து அகதிகளிடம் போலீஸ் விசாரணை இப்படி படுத்தி எடுத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் 2009 தேர்தல்கள்போது அம்மையார் ஈழத் தாயாக மறு அவதாரம் எடுத்துவிட்டார் அவர் மீண்டும் முதல்வரான பின் சிதிலமாகிக்கொண்டிருந்த முகாம்கள் சீர் செய்யப்பட்டன, பல வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன. விருப்பமில்லாமல் எக்காரணம் கொண்டும் எவரும் திருப்பி அனுப்பப்படக்கூடாது என முழங்கினார்.

முள்ளி வாய்க்காலுக்காக எல்லோருமே முதலைக் கண் வடித்தனர். இந்நிலையில்தான் இப்போது மறைமுக நிர்பந்தம்.

முன்பு கூட படிவங்களை முகாமிற்கு முகாம் விநியோகித்து, நாடு திரும்ப விருப்பமா என்று பதில் சொல்லுங்கள் எனக் கேட்க, அகதிகள் மிரண்டு போயினர்.

இப்போதும் நிலை தெரிந்து வர இலங்கை செல்ல விரும்புவோரிடம், நாங்கள் அகதியாகத் திரும்பமாட்டோம் என கையெழுத்திடச் சொல்லுவானேன். அப்புறம் தொப்புள் கொடி உறவென்று என்ன பசப்பல்?

உடனடியாக பிரமாணப்பத்திரம் வழங்குவது நிறுத்தப்படவேண்டும் என அனைத்து ஆர்வலர்களும் இனைந்து குரல் கொடுக்கவேண்டும்.

t-n.gopalan

 

  •   த.நா.கோபாலன்     https://www.facebook.com/gopalant?fref=ts