download (1)
மைக்கேல் டெல் பிறந்தநாள்
டெல் நிறுவனத்தின்  நிறுவனர் மைக்கேல் டெல், .போர்ஃவ்ஸ் இதழின் கணிப்பின்படி 2006 இன் உலக பணக்காரர்கள் வரிசையில் 41வது இடத்தில் உள்ளார்..
டெக்சாசில் பிறந்தவரான டெல் ஒரு செல்வந்த யூத குடும்பத்தவர்.. தனது பதினைந்தாவது வயதில் தன்னால் முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே ஒரு புதிய அப்பிள்  கணினியை முழுவதுமாகக் கழற்றிப் பூட்டினார்.
பல்கலைக் கழக படிப்பின்போது, பி.சிஸ் லிமிட்டெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். அவரது அறைதான் அலுவலகம்! மெல்ல மெல்ல நிறுவனம் பெரிய நிறுவனமாக ஆகத்துவங்கியது. தனது பத்தொன்பதாவது வயதில் கல்வியை நிறுத்தி முழு நேரமாக நிறுவனத்தில் உழைக்கத் தொடங்கினார். 1987 இல் நிறுவனத்தின் பெயரை டெல் கம்ப்யூட்டர் கார்ப்பொரேசன்  என மாற்றினார். 2003 இல் பங்குதாரர்கள் டெல்  எனப் பெயரை மாற்ற வாக்களித்தனர். 2004 இல் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகினார். ஆயினும் நிறுவனத் தலைவராகத் தொடர்கிறார்.
 
download
சீகன் பால்க்  நினைவு நாள் (1719)
ஜெர்மனியைச் சேர்ந்த சீகன் பால்க் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் வந்த முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவார். இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது.  1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
 1705ஆம் ஆண்டு, நவம்பர் 29ஆம் நாள் சீகன் பால்க் ஜெர்மன் மன்னர் சார்பில், அவருடைய செலவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இங்கே வந்த சீகன்பால்க் தனது இறைப்பணியை ஆரம்பித்தார். முதலியப்பா என்ற இந்தியர் சீகனுக்கு உதவியாளரானார். சீகன் தன்னைச் சுற்றியிருந்த தொழிலாளர்களால் பேசப்படும் போர்ச்சுக்கீசையும், தமிழையும் கற்றார். ஒரு முதிய புலவரிடம் தமிழ் படித்தார். தனது மொழிபெயர்ப்பாளரான அலப்பூ என்பவர் மூலம் 5,000 தமிழ் வார்த்தைகளைத் தெரிவு செய்து மனப்பாடம் செய்தார். கடற்கரை மணலில் விரலால் எழுதி தமிழ் எழுத்துக்களைப் பழகினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தமிழைத் தன் சொந்த மொழி போல் கற்றுக் கொண்டார்.
சீகன்பால்க், ஐரோப்பியர்களின் வீடுகளிலும், தோட்டங்களிலும் எடுபிடி வேலை செய்த இந்தியர்களுக்காக, முதல் மிஷன் பாடசாலையையும், குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார். டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஜெர்மன் வீரர்களுக்காக வேதாகமம், பாடல் புத்தகம், தியானப் புத்தகம் கொண்ட ஒரு ஐரோப்பிய நூலகம் ஒன்றையும் ஏற்படுத்தினார்..
சீகனின் தீவிர முயற்சியால், தரங்கம்பாடி மிஷனை, ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் ஆதரித்தன. இவர்களால் கொடுக்கப்பட்ட பணத்தால் மிஷனரிகளுக்கு வீடுகளும், மூன்று பள்ளிக்கூடங்களும் வாங்கப்பட்டன. பொறையாறு என்னும் ஊரில் அழகிய தோட்டம் ஒன்றையும் சீகன் வாங்கினார். சென்னை மற்றும் கடலூரில் பள்ளிக்கூடங்கள் நிறுவினார்.
சீகன், 1708 ஆம் ஆண்டு, அக்டோபர் 17 ஆம் நாள் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். இந்தியச் சரித்திரத்தில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் மொழி புதிய ஏற்பாட்டை அச்சேற்ற அநேகத் தடைகள் ஏற்பட்டன. ‘கிறிஸ்தவ அறிவு விளக்க சங்கம்’ (S P C K – Society for the Propagation of Christian Knowledge) அச்சு எந்திரமும், ஜெர்மன் நாட்டு நண்பர்கள் அச்செழுத்துக்களும் கொடுத்து உதவினர். ஆனால் அவற்றைக் கொண்டு வந்த கப்பலை பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. பின்னர் அவை சென்னை நகர கவர்னரால் மீட்கப்பட்டன. மேலும் அச்சு எந்திர முதலாளி வரும் வழியில் இறந்து போனார். எனவே அச்சு வேலை தெரிந்த டேனிய வீரன் ஒருவனைக் கண்டு பிடித்து, 1713 இல், அச்சிலேற்றும் வேலையை ஆரம்பித்தனர். ஜெர்மனியிலிருந்து வந்த எழுத்துக்கள் பெரிதாக இருந்தன. அதோடு காகிதப் பற்றாக்குறை வேறு. எனவே தரங்கம்பாடியிலேயே சிறிய எழுத்துக்களை திரும்பவும் வார்த்தனர். இவ்வளவு கடின உழைப்பிற்குப் பின் 1715, ஜூலை 15 ஆம் நாள் தமிழ்ப் புதிய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது.
சீகன்பால்க்கின் தமிழ் நடை எளிமையானது. அவர் தம்மை சுற்றியிருந்த சாதாரண மக்களுடைய தமிழ் நடையிலேயே மொழிபெயர்த்திருந்தார்.. இந்தியாவிலேயே முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமே! முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளர் சீகன்பால்க்தான்.
1715ஆம் ஆண்டு ஹாலேயில் வைத்து சீகன்பால்க் எழுதிய தமிழ் இலக்கணப் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் மரியா டாரதியை திருமணம் செய்தார். இந்த புதுமணத் தம்பதியர் 1716ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்தியா வந்தனர். இவர்கள் 1716 ல் தரங்கம்பாடியில் இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவினார்.
மொழிபெயர்ப்புப் பணியோடு சீகன்பால்க் சில நூல்களையும் எழுதினார். தென் இந்தியாவின் மதக் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், ஆசாரங்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவற்றைப் பற்றி ஜெர்மன் மொழியில் 44 அதிகாரங்கள், 332 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமும் (Complete description of Malabar Heathendom), தமிழ் நாட்டு தெய்வங்களின் பரம்பரையைப் பற்றிய ஒரு புத்தகமும் (Geneology of Malabar Gods) எழுதினார். நீதி வெண்பா, கொன்றை வேந்தன், உலக நீதி என்ற புத்தகங்களை ஒன்று சேர்த்து ‘நானாவித நூல்கள்’ என்ற புத்தகத்தையும் ஆக்கினார். லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம் (Grammatica Tamulica) எழுதினார். தமிழ் – ஜெர்மன் அகராதியையும் சீகன் எழுதினார். சபையார் பாடுவதற்காகப் பல பாடல்களை மொழிபெயர்த்தார். ஐரோப்பிய ராகங்களுக்கு இசைந்த ஞானப்பாட்டுகளும், தமிழ் ராகங்களுக்கு ஏற்ற கீர்த்தனைகளையும் இயற்றினார். கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிச் சிறிய வினா – விடை புத்தகமும் சீகனால் எழுதப்பட்டது. இவர் தமிழ்நூல்களின் நூற்பட்டியல் (Verzeichnis der Malabarischen Bücher) ஒன்றையும் தொகுத்துள்ளார்.