சரோஜினி நாயுடு
சரோஜினி நாயுடு   பிறந்தநநாள் (1879)
“இந்தியாவின் நைட்டிங்கேர்ள்” என்று புகழப்பட்ட சரோஜினி நாயுடுவுக்கு, எழுத்தாளர், சுதந்திரப்போராட்ட தியாகி என்று பன்முகம் உண்டு.   இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவர் இவர்தான்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார். தர்சண சத்தியாகிரகத்தில் துடிப்புடன் பங்கேற்றார். காந்தி துவங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் முதலில் இணைந்தவர்  இவர்தான்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, உத்திரபிரதேசத்தின் ஆளுனர் பொறுப்பேற்றார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆளுனர் என்ற பெருமையையும் பெற்றார்.
சிறந்த கவிதைகளை எழுதிய இவர், பாரதிய கோகிலா” (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்பட்டார். .  1905 ஆம் ஆண்டு அவரது முதல் பாடல்கள் தொகுப்பு தி கோல்டன் த்ரெஷோல்டு என்னும் பெயரில் வெளியிடப்பட்டது.  தொடர்ந்து பல கவிதை தொகுப்புகளை வெளியிட்டார்.
மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.
maruthakasi
 
மருதகாசி  பிறந்தநாள் (1920)
“மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா சின்னப்பயலே…” என்பது உட்பட பல புகழ்பெற்ற பாடல்களை எழுதிய மருதகாசி, 1949ம் ஆண்டு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதத்துவங்கினார். இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தவர் மருதகாசி. தந்தை பெயர் அய்யம்பெருமாள்  தாயார் மிளகாயி அம்மாள். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார். 1940 ஆம் ஆண்டில் திருமணமான இவரின் மனைவி பெயர் தனக்கோடி அம்மாள். மருதகாசிக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் “தேவி நாடக சபை”யின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதி வந்தார்.
(தி.மு.க. தலைவர்) மு. கருணாநிதி எழுதிய மந்திரிகுமாரி போன்ற நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். கவிஞர் கா. மு. ஷெரீபின்நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான இராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார்.
1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்சார் தயாரித்த மாயாவதி என்ற படத்தில் பாடல் எழுதியதன் மூலம் திரைத்துறைக்கு வந்தார். தொடர்ந்து பல படங்களுக்கு எழுதினார்.
மந்திரி குமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற முடிவுநிலைப் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் இவருக்கு மேலும் புகழ் சேர்த்தன.
தாய்க்குப்பின் தாரம் படத்துக்காக, மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே என்ற பாடலை எழுதினார்.
இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த தாய் மீது சத்தியம்.
மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.  நவம்பர் 29, 1989 அன்று மறைந்தார்.
 
செய்குதம்பி பாவலர்
செய்குத்தம்பி பாவலர் நினைவு நாள் (1950)
சதாவதானி  செய்குத்தம்பி பாவலர், நாஞ்சில் நாட்டு கோட்டாறு பகுதியில் இடலாக்குடியில் அமீனா அம்மையாருக்கும் பக்கீர் மீரான் சாகிபுக்கும்மூன்றாவது மகவாக 1874 ஜூலை 31இல் பிறந்தார்.
அக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாளப் பள்ளிகளே நடந்து வந்தன.  ஆகவே இவரது ஆரம்ப கால கல்வி மலையாத்தில்தான் துவங்கியது.
ஆனாலும் சிறுவயதிலேயே தமிழ் ஆர்வத்தால் இடலாக்குடியை அடுத்த பட்டாரியார் வீதியில் சங்கரநாராயண அண்ணாவி என்பவரிடம் முறையாகத்தமிழ் கற்றார். இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார்.  காளமேகப் புலவர், மாம்பழக்கவிச்சிங்க நாவலர் போல அந்தாதியாகவும் சிலேடையாகவும்,யமகம், திரிபுகளாகவும் கவிபுனையும் திறன் பெற்றார். .
சீறாப்புராணத்துக்கு சீரிய உரையெழுதிப் பதிப்பித்தார். வேதாந்த விவகாரக் கிரிமினல் கேசு, தேவலோகத்துக் கிரிமினல் கேசு என்னும் நூல்களும் எழுதிப் பதிப்பித்தார். இதனால் இவர் புகழ் நாடெங்கும் பரவியது. உரை எழுதுதல், பாட்டெழுதுதல், பதிப்பித்தல் மட்டுமின்றி திருக்குறள், கம்பராமாயணம்,சீறாப்புராணம் பற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார்.
ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டார்
1950 பிப்ரவரி 13-இல் பாவலர் காலமானார்.
 
 
பாலுமகேந்திரா
பாலு மகேந்திரா  நினைவு நாள் (2014)
புகழ் பெற்ற திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா 20 மே 1939 அன்று   இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தார்.  பாலநாதன் மகேந்திரன் என்பது அவரது இயற்பெயர்.
லண்டனில் தன்னுடைய இளங்கலை படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற இவர், அந்த வருடத்தின்  ல் தங்கப்பதக்கத்தையும் பெற்றார். .
இவரது திறமை மற்றும் ஆர்வத்தைக்கண்டு, ‘செம்மீன்’ படப்புகழ் ராமு காரியத் தனது  ‘நெல்லு’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது  கிடைத்தது.
தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாலுமகேந்திரா,  தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்தார்.
ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவமாகும்.
பிறகு  இயக்குனராகமாறிய பாலு மகேந்திரா,  1977ல்  ‘கோகிலா’ என்ற கன்னட படத்தை இயக்கினார். இவர்  ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியானது. அடுத்த வருடம்,  தமிழில் இவர் இயக்கிய முதல் படமான ‘அழியாத கோலங்கள்’ வெளியானது.
பின்னாட்களில் கதை நேரம் எனும் தொலைக்காட்சி தொடரை சன்  தொலைக்காட்சிக்காக இயக்கினார்.இத்தொடர்கள். மிகத் தரமான தொலைக்காட்சி படைப்பு எனும் அங்கீகாரம் பெற்றது இந்த கதை நேரம்.
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார். அவை, வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள் ஆகும்.
ஜூலி கணபதி படத்துக்காக சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருதும் பெற்றார்
 
உலக வானொலி நாள்
 
உலக வானொலி நாள்

உலக வானொலி நாள்  என்பது ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) 2011 நவம்பர் 3 ஆம் தேதி, உலக வானொலி நாளாக அறிவித்தது.
வானொலி ஒலிபரப்புச் சேவைகள் குறித்த தகவல்களை பலருக்கும் அறியப்படுத்தவும்,  பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
முதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பிப்ரவரி 13 இல் கொண்டாடப்பட்டது.