இன்று பங்குனி உத்திரம்: அறுபடை வீடுகளில் அலோமோதும் பக்தர்கள் கூட்டம்

Must read

0
ங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனி,  சுவாமிமலை, திருத்தணி, திருப்பரங்குன்றம், உள்ளிட்ட முருகக் கடவுளின்  அறுபடை வீடுகளில் பக்தர்கள் பெருந்திரளாக குவிந்து வருகிறார்கள்.
பழனியின் பிரசித்தி பெற்ற திருத்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. அதைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருக்கிறார்கள்.
12வது மாதமான பங்குனியில், 12வது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனிதநாள்தான் பங்குனி உத்திரம் எனப்படுகிறது. நற்பலன்களை தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதம் மிகவும் முக்கியத்துவமானது.  இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்பர். இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வீகத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் சொல்கின்றன.
தெய்வீக திருமணங்களான மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ; பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தது இந்த பங்குனி உத்திதிர தினத்தில்தான்.
உத்திர நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் ஆவார். அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்துவது இரட்டைச் சிறப்பாகும்.
சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாளும் இதுதான். ரதி – மன்மதன் சிவனின் தவத்தைக் கலைத்ததால் சிவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுவே.  முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார்.  நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது; மகாலட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது; சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது போன்றவை நடந்ததும் இந்த பங்குனி உத்திரம் அன்றுதான்.
மகாலட்சுமி அவதாரம் அன்னை மகாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள் ஆகும். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர் மாலையை ஏந்திக் கொண்டு தோன்றி தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் அணிவித்தார். இதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் அவதார நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நிகழ்ந்தது.  பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் திருமண பாக்கியம் உடனே கிட்டும்.
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று பக்தர்கள் கூட்டம் பெருமளவில் திரண்டு வருகிறது. பழனியில் வழக்கத்த விட பன்மடங்கு பக்தர்கள் திரண்டிருக்கிறார்கள்.

More articles

Latest article