கபில்தேவ்
கபில்தேவ்

கபில்தேவ் பிறந்தநாள்
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் பிறந்ததினம் இன்று. இவரது தலைமையில்தான் 1983-ல் முதன் முறையாக, இந்தியா உலகக்கோப்பையை வென்றது. ஆல்ரவுண்டரான இவர், டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளும், 5,248 ரன்களும் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் 253 விக்கெட்டுகளும், 3,783 ரன்களும் எடுத்தார்.
வேகப்பந்து வீச்சாளரான இவர், ஹரியானா புயல் என்று புகழப்படடுகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

ரஹ்மான் பிறந்தநாள்
அல்லா இரக்கா ரஹ்மான் என்ற ஏ.ஆர். ரஹ்மான் 1966ம் ஆண்டு இதேதினத்தில்தான் பிறந்தார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமான ரோஜா மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், இந்தி, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துவருகிறார். இசைப்புயல் என அழைக்கப்படும் ஏ.ஆர். ரஹ்மான், ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றார். இதே திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இந்த இரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியர் ரஹ்மான்தான். 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்று அழைக்கப்படுகிறார்.
பிரமிள்
பிரமிள்

பிரமிள் நினைவு தினம்
கவிஞர், விமர்சகர், சிறுகதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் பிரமிள் நினைவு தினம் இன்று. (1997) . சிவராமலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் இலங்கையில் பிறந்தவர்.
எழுபதுகளின் ஆரம்பத்தில் தமிழகம் வந்து விட்டார். பிறகு சென்னையிலேயே பெரும்பாலான நாட்களை கழித்தார். வேலூர் அருகிலுள்ள கரடிக்குடியில், மறைந்தார்.
தமது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த எழுத்து பத்திரிகையில் கவிதைகளும் விமர்சனங்களும் எழுத ஆரம்பித்தார் பிரமிள். ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமை படைத்திருந்தார்; “படிமக் கவிஞர்’ என்று புகழப்பட்டார் பிரமிள்.

வேட்டி தினம்
உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோ நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜனவரி 6ம் தேதி சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் உயரத்தில் குறைந்தவர்தான். பண்புகளில் நெடிதுயர்ந்தவர். 2014 ம் ஆண்டு சென்னை கிரிக்கெட் கிளப்புக்கு வேட்டி கட்டி வந்த நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களை கிளப் நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனையடுத்து சென்னை கிரிக்கெட் கிளப்பின் நடவடிக்கைக்கு தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் கிளம்பின. தமிழகத்தில் ஓட்டல்கள், கிளப்கள் அனைத்தும் வேட்டி கட்டி வருபவர்களை அனுமதிக்காவிட்டால் கிளப் அனுமதி ரத்து செய்யப்படும் என தமிழக அரசு சட்டம் இயற்றியது.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை அனைவரும் அணியச் செய்யும் வகையிலும் அப்போதைய கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் IAS அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் கல்லூரிகளும் வேட்டி தினம் கடைபிடித்து ஊழியர்களும் மாணவர்களும் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களை ஆதரிக்கவேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதினார். குடும்ப விழா, கோவில் விழா, நாம் வழக்கமாக கொண்டாடும் தீபாவளி, பொங்கல் போன்ற திருநாட்களில் வேட்டி உடுத்திக் கொள்வதையே பெருமையாக கருதுகின்றோம். வேட்டி கட்டுவதில் உள்ள சில சவுகரியங்கள் பிற உடைகள் அணியும்போது கிடைக்காது. வெளி நாடுகளில் இருந்து வருபவர்கள் கூட நம்முடைய வேட்டியைக் கட்டி மகிழ்ச்சி அடைகின்றனர்.
கலாக்ஷேத்ரா
கலாக்ஷேத்ரா

கலாக்ஷேத்ரா துவங்கிய தினம்
புகழ் பெற்ற கலாக்ஷேத்ரா நாட்டியப் பள்ளியை ருக்மிணி அருண்டேல், 1936ம் ஆண்டு இதே தினத்தில்தான் துவக்கினார். சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா அமைப்பைத் தனது காதல் கணவர் ஜார்ஜ் சிட்னி அருண்டேலுடன் இணைந்து ஆரம்பித்தார்.
தி பெசண்ட் தியசாபிகல் ஹை ஸ்கூல், தி மரியா மான்டிசோரி ஸ்கூல் ஃபார் சில்ரன், தி கிராஃப்ட் எஜூகேசன் அண்ட் ரிசர்ச் சென்டர் மற்றும் உ.வே.சாமிநாதையர் நூலகம் ஆகியவற்றையும் கலாக்ஷேத்ரா வளாகத்துக்குள் அமைத்தார். இந்தியா முழுவதுமிருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் மாணவர்கள், இங்கு தங்கி கலைகளில் தேர்ச்சி பெறுகிறார்கள்.