1

கார்த்திகை தீபத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

உலகப்புகழ்

நினைத்தாலே முக்தி தரும் புகழ்கொண்டது திருவண்ணாமலை தலமாகும் சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கொண்டாடப்படுகிறது, இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மகாதீப திருவிழா மிகவும் பிரபலமானது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழகம் மட்டுமி்ன்றி வெளிநாடு வாழ் பக்தர்களும் வருகை தருகின்றனர்.

தலபுராணம்

திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் இடையே யார் பெரியவர்கள் என்ற போட்டி எழ… இவர்களது அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம்.  அந்த நாளே கார்த்திகைதீப திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானின் உருவமாக வணங்கப்பட்டு வருகிறது. பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீப நாட்களில் பல லட்சம் பக்தர்கள் இம் மலையை சுற்றி கிரிவலம்செல்வது வழக்கம்.

 

1960ல் திருவண்ணாமலை..: படம்: ஈ.வெ.ரா. மோகன்
1960ல் திருவண்ணாமலை  ( படம்: ஈ.வெ.ரா. மோகன்)

கார்த்திகை பெருமை

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியானது கார்த்திகை நட்சத்திரத்தில் வருவதால் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பு. ஆறு நட்சத்திரங்களையும் இணைத்தால் ஜோதி வடிவம் போலவும். தீயவைகளை நீக்கும் கத்தி போலவும் தோற்றமளிக்கிறது.

தீய எண்ணம், தீய பழக்கவழக்கம் கொண்டவர்களின் சேர்க்கையினால் நமது உடலும் மனமும் எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்பட்டு, நமது ஆற்றல் குறைகிறது. இப்படி நாம் இழந்த நேர்மறை சக்தியை பெருக்கிக் கொள்வதற்கு பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் உதவி செய்கிறது.

தீபம்
தீபம்

 

கிரிவல சிறப்பு

திருவண்ணாமலை திருத்தலத்தில் கிரிவலம் செய்வது மிகச் சிறப்பானது. கிரிவலத்தின் போது நமது வெறும் கால்கள் நிலத்தில் படும்பொழுது நிலம் என்ற பஞ்சபூதத்தாலும், நமது தலை உச்சி ஆகாயத்துடன் தொடர்பு கொள்வதால் ஆகயம் என்ற பஞ்சபூதத்தாலும், தீபத்தின் சக்தியானது நெருப்பு என்ற பஞ்சபூதத்தாலும், நமது உடல் மலையை சுற்றி வீசும் காற்றுடன் தொடர்பு கொள்வதால் காற்று என்ற பஞ்சபூதத்தாலும் நமது உடல் மற்றும் மனமானது சுத்திகரிக்கப்பட்டு பிரபஞ்சத்தில் நிலவும் நேர் மறை சக்தியால் சூழப்படுகிறது.

 

தற்போது திருவண்ணாமலை
தற்போது திருவண்ணாமலை

எந்த நாளில் என்ன பலன்

மற்ற நாட்களிலும் கிரிவலம் வரலாம். ஞாயிறு அன்று வலம்வருவதால் நோய் தீரும், திங்கள் அன்று வலம்வந்தால் மன உறுதி உருவாகும், செவ்வாய் அன்று வலம்வந்தால் எதிரி மற்றும் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம், புதன் அன்று வலம்வருவதால் கலை கேள்விகளில் புகழ் அடையாலாம், வியாழன் அன்று வலம்வருவதால் ஆன்மீக ஞானம் பெருகும், வெள்ளிக்கிழமை அன்று வலம்வருவதால் செல்வம் பெருகும்.
கிரிவலம் வருவது எப்படி

கிரிவலம் வரும்போது நமது சிந்தனை ஒருமுகப்பட்டு சிவனை நோக்கியே இருக்க வேண்டும்.   ஓம் சிவாய நம, நமசிவாய போற்றி என்ற சிவ நாமங்களை உச்சரிப்பது, சிவன் பாசுரங்களை பாடுவது, சிவ புராணம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.

மனமொன்றி அண்ணாமலையார் தீபத்தை வழிபடுங்கள்.. வாழ்வில் அனைத்து வளங்களையும் பெருங்கள்!

  • சிவனடிமை அருணாச்சலம்