கருணாநிதி - விஜயகாந்த்
கருணாநிதி – விஜயகாந்த்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அதி தீவிர ஆதரவாளரான சுப. வீரபாண்டியன், இணைய இதழ் ஒன்றில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கடுமையாக சாடி கட்டுரை எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “இனியும் தி.மு.க. காத்திருக்கக்கூடாது” என்று அந்த கட்டுரையில் சுப.வீ தெரிவித்திருப்பது, கருணாநிதியின் குரலாகவே பார்க்கப்படுகிறது.
“சுப.வீயின் கட்டுரை, எப்படி கருணாநிதி சொல்வதாகும்?” என்று சிலருக்குத் தோன்றலாம்.
திராவிட இயக்க தமிழர் பேரவை என்ற அமைப்பை சுப.வீ. துவக்கியபோது, “இது தி.மு.கவின் கிளைக்கழகம் போல் செயல்படுமா” என்று கேட்கப்பட்டது. அதற்கு சுப.வீ, “கிளைக்கழகம் போல் அல்ல. கிளைக்கழகமேதான்” என்று புன்னகையுடன் பதில் அளித்தார்.
தவிர வழக்கம்போல வரவிருக்கும் தேர்தலிலும் தி.மு.கவுக்காக தமிழகம் முழுதும் பிரச்சாரம் செல்கிறார் சுப.வீ.
ஆகவே, “திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மூலம், தனது சில கருத்துக்களை கருணாநிதி வெளிப்படுத்தி வருவது போலவே, சுப.வீ மூலம் விஜயகாந்துக்கு செய்தி சொல்லியிருக்கிறார்” என்கிறார்கள்.
சுப.வீ
சுப.வீ

“அரசியல் நேர்மையை அவமதிக்கும் விஜயகாந்த்”  என்ற காட்டமான தலைப்பில் சுப.வீ எழுதியுள்ள அந்த “தனித்துப் போட்டியா, கூட்டணியா என்பதைக் கூறாமல் ‘ரப்பர்’ போல இழுத்துக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த்” என்று வருத்தத்தை வெளிப்படுத்தும் சுப.வீ., “ விஜயகாந்த்  முடிவுக்காவே எல்லாக் கூட்டணிகளும் காத்திருக்கின்றன என்று பிரேமலாதா உட்பட  தே.மு.திகவினர் பலர்  பெருமைப்படுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிற்கும், தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளுக்கும் இந்நிலை அவமானத்தையே தேடித் தந்துள்ளது” என்று ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார்
மேலும், “விஜயகாந்தை பெரிய கட்சிகள் நாடி நிற்பதற்குக் காரணம், அவரிடம் இருப்பதாக கணிக்கப்படும் ஐந்து சதவிகித வாக்குள். அடுத்த காரணம், அவருக்கென்று கொள்கை ஏதும் கிடையாது.
எந்தக் கொள்கையும் இல்லாமல் அரசியல் நடத்துவதால்தான், எல்லாக் கட்சிகளும் விஜயகாந்துடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றன. அவரும் எல்லோரோடும் பேசத் தயாராக உள்ளார்” என்று சுப.வீ சாடியுள்ளார்.
அதோடு, “ தலைமைப் பண்பு, பேச்சில் தெளிவு, நடைமுறையில் நாகரிகம் ஆகியனவற்றை எல்லாம் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் விஜயகாந்துக்கு இல்லை.  பேச்சுக்காகக் கூட, ” மக்கள் தொண்டாற்ற வருகிறேன்” என்று கூறாமல், ‘கிங்’காக மட்டுமே வரக் காத்திருக்கிறார் விஜகாந்த்” என்றும் சுப.வீ. குற்றம் சாட்டியிருக்கிறார்.
இறுதியாக, சுப.வீ. கூறியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது., “விஜயகாந்துக்காக  காத்திருப்பது, பெரிய கட்சிகளின் தகுதிக்கு உரியதன்று. இனி அவருக்காகக் காத்திருக்கப் போவதில்லை, 200 தொகுதிகளில் நாங்களே போட்டியிடப் போகிறோம் என்று தி.மு.க. அறிவிக்குமானால், அது தொண்டர்களுக்கு ஊக்கம் தரும், வெற்றியின் முதல் படியாக அமையும்” என்று தனது கட்டுரையை முடித்திருக்கிறார் சுப.வீ.
இது குறித்து அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவதாவது:
“விஜயகாந்தின் வருகைக்காக பலமுறை அழைப்பு விடுத்தார் கருணாநிதி. விஜகாந்தும் பிரேமலதாவும் தி.மு.க.வை கடுமையாக சாடியபோதெல்லாம் அமைதியாக இருந்தார். சமீபத்திய தே.மு.தி.க. மாநாட்டில் கூட பிரேமலதா, “தமிழகத்தைப் பீடித்த சாபக்கேடு” என்று தி.மு.க.வை சாடினார். அதற்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி பதில் அளிக்கவில்லை.
இனியும் பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் கருணாநிதி அதன் வெளிப்பாடுதான் சுப.வீயின் இந்த கட்டுரை.
இனியும் விஜயகாந்திடமிருந்து சாதகமான பதில் வரவில்லை என்றால் தே.மு.தி.க இல்லாமலேயே தி.மு.க. தேர்தலை சந்திக்கும் முடிவுக்கு வந்துவிட்டது” – இவ்வாறாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.