ஆப்கனில் இந்திய தூதரகம் மீது தற்கொலை படைத் தாக்குதல்
காபூல்:
ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் நகரிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஆப்கானிஸ்தான் ஊழியர் படுகாயமடைந்தார்.
நங்கர்கார் மாகாணம், ஜலாலாபாத் நகரில் இந்திய துணைத் தூதரகம் உள்ளது. இந்தத் தூதரகத்தைக் குறிவைத்து பயங்கரவாதிகள் புதன்கிழமை திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
தூதரகத்தின் நுழைவு வாயிலில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் திடீரென வந்து தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் அந்த பயங்கரவாதி உடல்சிதறி இறந்தான். மேலும், தூதரகத்தில் பணிபுரிந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதைத் தொடர்ந்து, தூதரக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோ&-திபெத் எல்லைக் காவல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதைக் கண்டறிந்து துப்பாக்கியால் சுட்டனர். இதில், 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில்,‘‘ ஜலாலாபாத் தூதரகத்தில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர்’’ என தெரிவித்தார்.