நியூயார்க்:

பெண்களை சரிசமமாக நடத்த வேண்டும் என்பது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் என ஐநா சபையின் தலைமை செய்தி தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு 10 வயது சிறுமிகள் முதல் 50 வயது பெண்கள் வரை செல்ல தடை இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்தது.

நீதிமன்ற தீர்ப்பின் படி அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்தது. இதனையடுத்து, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேரளாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2-ம் தேதி 2 பெண்கள் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்தனர். இதனையடுத்து, கேரளா முழுவதும் கலவரம் மூண்டது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அண்டோனியோ கட்டரஸின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, சட்டத்தை அனைவரும் மதிக்க ஐநா சபை உந்துதலாக இருக்கும். உச்சநீதிமன்றம் தலையிட்டிருப்பதால், இந்த பிரச்சினையை இந்தியாவில் உள்ள நீதித்துறை அதிகாரிகளிடமே விட்டுவிடுகிறோம்” என்றார்.
அடிப்படை உரிமை மற்றும் சரிசமமான உரிமையை காக்க வேண்டும் என்பதே ஐநா நிலைப்பாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
“பெண்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவதை எதிர்த்து கேரளாவில் நடக்கும் கலவரம் தொடர்பாக ஐநாவின் நிலை என்ன?”என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ஃபர்ஹான் ஹக், “எல்லோரும் சட்டத்தை மதிக்க வேண்டும் என உந்துதல் தருவோம்”என மீண்டும் கூறினார்.
“பெண்களுக்கு சம உரிமை என்பது இஸ்லாமிலும் கிறிஸ்துவத்திலும் அனுமதிக்கப்படுகிறதா?” என செய்தியாளர்கள் கேட்டதற்கு,”எந்த மதமாக இருந்தாலும் பெண்களையும் சமமாக நடத்த வேண்டும் என்பது பொருந்தும்”என்றார் ஃபர்ஹான் ஹக்.