பாரீஸ் நகரில்  தொடர் குண்டு வெடிப்பின்போது நடந்தது என்ன  என்று,  பாரீஸில் வசிக்கும் தமிழரான ஜே ரீபார்ன், நமது patrikai.com  இதழுக்காக  எழுதுகிறார்.

 

paris91-ap-676x450

 

ப்ரான்ஸ் தலைநகர் பாரீசில் வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணியளவில் நான், நண்பர்களுடன் “ஸ்தாத் த பிரான்ஸ்” என்ற பகுதியில் அருகில் ஒரு கடையில் ஷாப்பிங்க செய்தேன். அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்கிறது.

ஐஎஸ். ஐ.எஸ். அமைப்பினை சேர்ந்த தீவிரவாதிகள் கடும் தாக்குதல்களை நடத்தினர்.

மொத்தம் ஆறு வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற தாக்குதல்களில் 132 பேர் கொல்லப்பட்டனர். 352 பேர் காயமடைந்துள்ளனர்.

மிகவும் திட்டமிடப்பட்டே இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

​ தாக்குதல் நடைபெற்ற கம்போடிய உணவகத்தில் பணிபுரிந்த தமிழர்கள் 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அருகருகே அமைந்திருந்த இரண்டு கம்போடிய உணவகங்களில் ஒன்றில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

உணவகத்திலிருந்தவர்களை கொன்றது மட்டுமில்லாமல், அதன் பின் சாலையில் சென்ற சிலரையும் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

​ போலீசாரை தொடர்பு கொண்டு அழைத்த போதும் அவர்கள் அதனை வதந்தி என எண்ணி புறக்கணித்ததாலேயே உயிரிழப்புகள் அதிகமாயின என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. பல அழைப்புகள் தொடர்ந்து வந்த பிறகு மட்டுமே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆண்கள், பெண்கள் என பாரபட்சம் பார்க்காமல் துடிக்க துடிக்க கொன்றதாக நேரில் பார்த்தவர்கள் கதறினர்.

துப்பாக்கி குண்டுகள் தீர்ந்ததும் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டினை வெடிக்க செய்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bataclon படகலான் இரவு விடுதியில் இசை நிகழ்வின் போது நடைபெற்ற கொடூர தாக்குதல்களில் மட்டும் 87 பேர் பலியாகியிருக்கின்றனர். இவர்களில் பலர் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டு பின்னரே கொல்லப்பட்டனர். சிலர் விடுதியின் சன்னல்கள் வழியாக குதித்தும், தொங்கியும் தப்பித்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு இசை நிகழ்ச்சி நடத்திய Eagles of Death Band இசை குழு தனது ஐரோப்பிய பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்பியது.

99 க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையிலிருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

1944 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக பாரிசு நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவசர நிலை அறிவிக்கப்பட்டது.​

​ப்ரெஞ்சு அரசு மூன்று நாள் நாடு தழுவிய துக்கத்தை அறிவித்துள்ளது.​

பெல்ஜியத்தில் ஏராளமான இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகளில் ஒருவர் ப்ரான்சு நாட்டை சேர்ந்த Omar Ismaïl Mostefai என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஏழு தீவிரவாதிகள் மூன்று அணிகளாக பிரிந்து இத்தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஆறு பேர் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து இறந்தனர், ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

paris 1

​ Montreuil பகுதியில் தீவிரவாதிகள் தப்பிக்க பயன்படுத்திய கார் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று காலாக்சினோவ்​ வகை துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தீவிரவாதிகள் தப்பியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

செர்பியா, குரோசியா, ஹங்கேரி வழியாக தீவிரவாதிகளில் ஒருவன் வந்திருக்கலாம் என அவனது பாஸ்போர்ட்டை சோதனையிட்டதின் மூலம் தெரியவந்திருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஆனாலும், அது போலி பாஸ்போர்ட்டாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

​ 103 உடல்களின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு 30 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படும் பணி நடைபெற்று வருவதாகவும் ப்ரெஞ்சு பிரதம மந்திரி இம்மானுவேல் வால்ஸ் தனது ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

​இந்த சம்பவம் குறித்து சலே அப்தெஸ்லாம் (26) என்ற பெல்ஜியத்தை பிறப்பிடமாகக் கொண்ட ப்ரான்ஸ் வாழ் நபரை  போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட முஸ்தாபி எனும் நபருக்கு நெருக்கமான சகோதரர் , தந்தை உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜே ரீபார்ன்
ஜே ரீபார்ன்

​ ஸ்தாத் தே ப்ரான்ஸ் எனுமிடத்தில் ப்ரான்ஸ் – ஜெர்மனியிடையே நடைபெற்ற பயிற்சியாட்டத்தை காண ப்ரான்ஸ் அதிபர் ப்ரான்சுவா ஹாலந்து வருகை தந்திருந்தார். தீவிரவாதிகள் ஸ்டேடியத்தின் அருகே குண்டுகளை வெடிக்க செய்ததின் மூலம் அதிபர் வருகையை முன்கூட்டியே தெரிந்துக் கொண்டு அவரை குறி வைத்து தாக்கவோ அல்லது ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்களை கொல்லவோ முயற்சி செய்திருக்கலாம் என்று கணிக்கப்படுகின்றது.​

​ விளையாட்டரங்கத்தின் கடுமையான காவல் கெடுபிடியினாலும், சோதனைகளின் காரணமாகவும் உள்ளே நுழைய முடியாததால் , அரங்கத்தின் அருகேயே தற்கொலை தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளதாக உறுதியான அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாத இறுதியில் உலக தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கும் புவி வெப்ப மயமாதல் குறித்த பன்னாட்டு மாநாடு நடைபெற இருந்த சூழலில் இத்தாக்குதல் நடைபெற்றது உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

​எனினும், நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் எவரும் தங்கள் பயணத்தை இரத்து செய்யாததால் மாநாடு குறித்த தேதியில் நடைபெறும் என ப்ரான்சு

அதிபர் ப்ரான்சுவா ஹோலாந்து தெரிவித்துள்ளார்.​

​தாக்குதலின் காரணமாக ஈபிள் டவர் காலவரையின்றி மூடப்பட்டது.​

​ ஏராளமான இரெயில்கள் இரத்து செய்யப்பட்டு குறிப்பிட்ட தடங்களில் சில இரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் இரண்டாவது நாளாக ஏராளமான மக்கள் கடினப்பட்டனர். எனினும், கூடுதல் சிறப்பு பேருந்துகள் ஆங்காங்கே இயக்கப்பட்டன.

தாக்குதல் நடைபெற்ற நேரமும் இடமும் :

மணி 21.20 _ ஸ்தாத் தே ப்ரான்ஸ் (Stade de France)

மணி 21.25 _ லே காரியோன் Le Carillon and லே பெத்தி கம்போஜ் Le Petit Cambodge

14 பேர் பலி

21:32 கச நோஸ்த்ரா , ருய் தே லா பான்துனே ருவா Casa Nostra , Rue de la Fontaine Roi : 5 பேர் பலி.

21.38 லா பேல் எக்குய்ப் , ருய் தே ஷரோன் La Belle Équipe, Rue de Charone : 19 பேர் பலி

21.49 Le Bataclan லே பத்தக்லான் ( இசை கச்சேரி நடைபெற்ற இடம் ) : பலி 89

​ தாக்குதல் நடைபெற்றதும் அடைக்கலம் தேடி ஓடிய மக்களுக்கு பாரீஸ் வாழ் மக்கள் காட்டிய அன்பும் , இரக்கமும் அனைவரையும் நெகிழ வைத்துள்ளன.

டிவீட்டரில் #porteouverte #opendoors ஆகிய ஹேஷ் டேகுகளை பயன்படுத்தி அடைக்கலம் தேடி ஓடியவர்களுக்கு தங்கள் வீடுகளின் முகவரியையும், தொடர்பு எண்களையும் அளித்து உதவி செய்தனர்.​ டாக்ஸிகள் தங்கள் மீட்டர்களை நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்டவர்களை அவர்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தனர்.

பெல்ஜியம், போர்சுகல், ஸ்வீடன் , ப்ரான்ஸ், இங்கிலாந்து , அமெரிக்கா ஆகிய நாடுகள் உட்பட பதினைந்து நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் பலியாகி இருக்கின்றனர்.

சிரியாவில் ப்ரான்ஸ் நடத்தும் தாக்குதலில் எவ்வித தோய்வும் ஏற்படாது என ப்ரான்ஸ் நாட்டு பிரதமர் இம்மானுவேல் வால்ஸ் தெரிவித்துள்ளார்.

​கடந்த வாரம் பவேரியாவில் வாகன சோதனையின்போது ஒரு காரில் குவியலாக ஆயுதங்கள்​ கைபற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.​​

தாக்குதல் நடைபெற்ற இடத்தின் சிறிது தொலைவில்தான் சார்லி ஹெப்தோ இதழின் அலுவலகம் இருப்பதும், கடந்த சனவரி மாதம் அல் கொய்தா தீவிரவாதிகளால் 12 பேர் இங்கு சுட்டுக்கொல்லப்பட்டதும் மற்றுமொரு  ​துயர சம்பவம்.​

​ பத்திரிக்கையாளர், வழக்குரைஞர்கள், வெளிநாட்டு மாணவர், சுற்றுலாப் பயணிகள் , புகைப்பட கலைஞர், பிறந்த நாள் விழாவிற்கு வந்த இரண்டு சகோதரிகள் என பலத்தரப்பட்டவர்களும் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட சோகமும் நடந்திருக்கிறது.​

​ இரண்டாம் உலகப்போருக்கு பிறக்கு ப்ரான்ஸ் சந்திக்கும் மிகப்பெரிய தாக்குதல் இது என சொல்லப்படுகிறது. 2004 இல் இதே போன்ற ஒரு தாக்குதலில் 194 பேர் கொல்லப்பட்டனர்.​

பாரீஸில்இருந்து ஜே ரீபார்ன்