அந்த எம்கேக்கு என்ன தண்டனை? : த.நா. கோபாலன்

Must read

6

முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் செருப்பால் அடிக்கப்பட்ட சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம். இந்த எம்கே சரி, அந்த எம்கேக்கு என்ன தண்டனை? இதென்ன பாரபட்சம்?

கொடுமை அரங்கேறியபோது மாநில முதல்வராக இருந்தவர், காலை உணவுக்கும் மதிய உணவுக்குமிடையே உண்ணாநோன்பிருந்தவர், கன ரக ஆயுதங்கள் பயன்படுத்தமாட்டார்கள் என உறுதியளிக்கப்பட்டிருப்பதாகக் கூறினீர்கள், ஆனால் குண்டு மழை நிற்கவில்லையே என மறு நாள் செய்தியாளர்கள் கேட்டபோது, மழை நின்று விட்டது, ஆனால் தூறல் ஆங்காங்கே என்றவர், முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பிறகும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தவர், ஏழெட்டு கோடி தமிழ் மக்களின் ஒரே தலைவர் முத்துவேலர் கருணாநிதிக்கு இப்படி மரியாதை செலுத்தவதில்லையா?

q

பின்னி எடுத்திருப்பார்கள். இப்போது எந்த அளவில் காவலில் அந்த இளைஞருக்கு கவனிப்பு எனத் தெரியவில்லை, ஆனால் கலைஞர் பக்கம் சென்றிருந்தால் நேரே மருத்துவமனைதான். எனவேயே தன்னால் இயன்ற பங்களிப்பை புதுக்கோட்டை தம்பி செய்திருக்கிறார்.

மே 17 இயக்கம் நாராயணனுக்கும் இந்து ராமுக்கும் தண்டனை கோருகிறது. ஆனால் நான் குறிப்பிட்டபடி, மகிந்தாவுக்கு அடுத்தபடியாக ஆகப்பெரிய குற்றவாளி கருணாநிதி.

தவிரவும் முள்ளிவாய்க்கால் சோகத்திற்கு முக்கிய காரணமாயிருந்தவர்கள் விடுதலைப் புலிகளின் முட்டாள்தனமான, காட்டுத்தனமான அணுகுமுறையே அதோடு கதை முடியவில்லை. இறுதிவரை சமாதானத்துக்கு ஒப்புக்கொள்ளாதீர்கள், வருகிறது அத்வானி, ஆட்சி ஈழம் கிடைத்துவிடும் எனத் தவறாக அவர்களுக்கு ஆலோசனை கூறிய நம் ஊர் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் பொறுப்பிருக்கிறதே.

எந்த வரிசையில் பார்த்தாலும் நாராயணன் மிகப் பின்னால்தான் வருவார். அவர் சிக்கினார் என்றால் அவர் ஒரு சாஃப்ட் டார்கெட். அவ்வளவுதான்.

முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ்ஷில் தொடங்கிய செருப்பு வீச்சு போராட்டம் இன்னமும் தொடர்கிறது. இதுவரை கண்டனம் தெரிவிக்க செருப்பை வீசத்தான் செய்வார்கள். இப்போதோ மறத் தமிழன் என்பதை செருப்பால் அடித்து நிரூபித்திருக்கிறார் நம்மூர் பிரபாகரன்.

இங்க் அல்லது கறுப்பு பெயிண்ட் வழியாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவரும் பரிவார கோஷ்டியினருக்கு புதுக்கோட்டை இளைஞர் புதிய வழிகாட்டியிருக்கிறார்.

தற்போது நாட்டளவில் சகிப்புத் தன்மை குறித்து விவாதம் நிகழ்ந்து வரும் வேளயில் செருப்பு சம்பவம் நடந்திருப்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

என்னைப் பொறுத்தவரை செருப்படி சற்று கூடுதலான வன்முறை. ஆனால் செருப்புவீசி கண்டனம் தெரிவிப்பது ஒன்றும் பாவ காரியமல்ல. புஷ் மீது செருப்பை வீசினானே அந்த ஈராக் இளைஞன், அவன் வேறு என்ன செய்திருக்கமுடியும். தனது நாட்டையே நிர்மூலமாக்கிய ஒரு நபர் மீதான கோபத்தை தனக்குத் தெரிந்த முறையில் அவன் கையறு நிலையில் வெளிப்படுத்தினான்.

இன்று ஆளும் வர்க்கம் இம் என்றால்  சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்றுதானே நடந்துகொள்கிறது. ஆள்தூக்கி சட்டம் வைத்திருக்கிறது. யாரைவேண்டுமானாலும் கேள்விமுறையில்லாமல் கைது செய்து நீதிமன்றத்துக்கே கொண்டுவராமல் வாரக்கணக்கில் ரகசிய இடங்களில் வைத்து சித்திரவதை செய்கின்றனர்.

இப்போது நம் கோவனுக்கு என்ன நடந்தது? அவர் என்ன குற்றம் செய்தார் என்று நள்ளிரவில் கைது செய்கின்றனர்? நீதி மன்றமும் அரசின் அத்துமீறல்களுக்குத் துணை போகிறது.

அணை கட்டுவதற்காக நிலத்தைப் பறிக்கிறீர்கள் இழப்பீடு இல்லை, இது அநீதி என்று சொல்லி தங்களை வருத்திக்கொண்டு நீரில் பல மணி நேரம் நின்று எதிர்ப்பைக் காட்டிய பெண்களும் கைது செய்யப்படுகின்றனர்.

நாட்டுப் பாதுகாப்பை சாக்கிட்டு இராணுவம் எதையும் செய்யலாம் எனக்கூறும் மிகக்கொடுமையானதொரு சட்டம் எம்மக்களுக்கு அநீதி இழைக்கிறது, பெண்கள் வன்புணர்ச்சிக்குட்படுத்தப்படுகின்றனர், பலர் கொல்லப்படுகின்றனர், இச் சட்டத்தை நீக்குங்கள் எனக் கோரி உண்ணாவிரதமிருக்கிறார் இரோம் ஷர்மிளா 15 ஆண்டுகளாக, உடலெல்லாம் புண்ணாகிவிட்டது, அப்படி ஒரு சித்திரவதைக்கு தன்னை உட்படுத்திக்கொள்ளும் அவர்தான் கைதாகிறார், குற்றம் சுமத்தப்படும் எவருக்கும் தண்டனை இல்லை.

த.நா. கோபாலன்
த.நா. கோபாலன் 

சரி இப்படி ஆளாளுக்கு செருப்பை வீசவிட்டால் எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் இதுதான் நடக்கும் என்பதும் நியாயமான வாதமே. என் பதில் அப்படி நிகழாவண்ணம் மக்களின் குறைகளை தீர்க்கும் நடவடிக்கைகளில் அரசு,ஆளும் வர்க்கம் இறங்கட்டுமே.

எதிர்ப்பு என்பது ஆர்ப்பாட்ட்த்தோடு நிற்கவேண்டிய அவசியமில்லை. சற்று தீவிரமாகவும் முன்னெடுக்கலாம். ஆனால் வன்முறை தவிர்க்கப்படவேண்டும்.

சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டால் தானாகவே தீவிர எதிர்ப்புக்கள் குறைந்துவிடும்.

https://www.facebook.com/gopalant

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article