karunanithi
அதிமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளதாம் மதுவிலக்கு. இது குறித்து, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கொந்தளித்துள்ளார்.
“திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று 21-7-2015 அன்று நான் அறிவித்தேன்.
“திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10-8-2015 திங்கள் கிழமையன்று மாவட்டத் தலைநக ரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர் தலைமையில் மதுவிலக்கை நடைமுறைப் படுத்தக் கோரி அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று 3-8-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தேன். அவ்வாறே ஆர்ப்பாட்டங்களும் வெற்றிகரமாக தமிழகமெங்கும் நடைபெற்றன.
இந்த மதுவிலக்குப் பிரச்சினை பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் சிலர் பொத்தாம்பொதுவில், தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது தானே, மது விலக்கை ரத்து செய்தது. எனவே தி.மு.கழகத்தால்தான் எல்லாம் கெட்டுவிட்டது என்ற ரீதியில் உள்நோக்கத்தோடு, ஏற்கனவே அரசியல் காரணத்திற்காகச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, அதையே உறுதி செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
தி.மு. கழக ஆட்சியில் மது விலக்கு ஒத்தி வைக்கப் பட்டது என்றாலும், அப்போதே நான் கூறியிருக்கிறேன்; இதனை திராவிட முன்னேற்றக் கழகம் முழு மனதோடு கொண்டு வரவில்லை என்றும், அப்போதுள்ள தமிழகத் தின் நிதி நிலைமை தான் அதற்குக் காரணம் என்றும் பல முறை விளக்கியிருக்கிறேன்.
மதுவிலக்கை ஒத்தி வைத்து தமிழகச் சட்டப்பேரவையில் நான் உரை நிகழ்த்தும்போதுகூட கூறியது என்ன?
“புனித நோக்கத்துடன் இந்தியப் புவி முழுவதும் எந்தக் கொள்கை விரிவாக்கப்பட வேண்டுமென்று காந்தியடிகள் கூறினாரோ, அந்தக் கொள்கை அவர் ஏந்திய கொடி நிழலில் அணி வகுத்து நின்ற அவர்தம் தானைத் தளபதிகளாம் மாநில முதல்வர்களாலேயே பின்பற்ற முடியாமல் போனது மட்டுமல்ல; மத்திய அரசினை நடாத்தும் மகாத்மாவின் வாரிசுகளாலும் புறக்கணிக்கப்பட்டது வேதனை தரும் செய்தியாகும். கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்” என்று சட்டப்பேரவையில் பேசினேனே தவிர, மனச்சாட்சி இடம் கொடுக்காத நிலையில்தான் மதுவிலக்குச் சட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தேன்.
29-6-1971 அன்று நிதி நிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்குப் பதிலளித்து நான் உரையாற்றும் போது “மாண்புமிகு உறுப்பினர்களின் – தோழமைக் கட்சி நண்பர்களின் உணர்ச்சியை மதிக்கிறேன். பாராட்டுகிறேன். அவர்களில் சிலபேர் என்னைக் கெஞ்சிக்கூடக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மன்றாடிக் கேட்பதாகக்கூடச் சொன்னார்கள். அவர்களை எல்லாம்விட நான் வயதிலே சிறியவன். அப்படி மன்றாடிக் கேட்டதை, கெஞ்சிக் கேட்டதைத் தயவு செய்து திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். இதைத் தவிர வேறு வழி இல்லை என்ற காரணத்தால்தான் இந்த முடிவுக்கு வந்திருக் கிறோம். அதுவும் ஒத்தி வைத்திருக்கிறோம் என்றுதான் கூறியிருக்கிறோம்” என்றுதான் கூறினேன்.
1971இல் தி.மு. கழக அரசு; கள், சாராயக் கடைகளைத் திறந்தது என்றாலும், 1974இல் – தி.மு. கழக ஆட்சிக் காலத்திலேயே, மீண்டும் மதுக் கடைகளை மூடி, மது விலக்கை நடைமுறைப்படுத் தியது. திறந்ததை மறக்காமல் சொல்லிக் கொண்டிருப் பவர்கள், மூடியதை மட்டும் வசதியாக மூடி மறைப்பது சரிதானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒத்தி வைப்பது என்பது மீண்டும் நடைமுறைக்கு வரும் என்ற அடிப்படையில்தானே? தி.மு. கழக ஆட்சிக் காலத் திலேயே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் சட்ட முன் வடிவு தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக 22-8-1974 அன்று நிறை வேற்றப்பட்டது.
அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன செய்தார்கள்? தி.மு.கழக ஆட்சியிலே கொண்டு வந்த மதுவிலக்கு ரத்து என்பது, தி.மு. கழக ஆட்சியிலேயே மீண்டும் திரும்பப் பெறப்பட்டு, மதுவிலக்கு நடைமுறைக்கு வந்து விட்டது என்பதுதான் உண்மை, உண்மை.
ஆனால், 1981இல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மீண்டும் கள், சாராய விற்பனைக்காக, மது விலக்கை ரத்து செய்தார். இந்த உண்மையை ஒரு சிலர் உரக்கச் சொல்வதில்லை; காரணம் அ.தி.மு.க. ஆட்சி என்றாலே ஏற்படும் அச்சம்!
அதற்குப் பிறகு, 2001இல் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது மது ஒழிப்பு பிரகடனம் செய்தார். எனினும், ஜெயலலிதா ஆட்சியின் அந்த ஆண்டில் மட்டும் – மதுவிலக்கு சட்டத்தின்கீழ் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா குறுகிய காலத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாகப் பதவி விலகி, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது, அந்நிய மது வகைகள், 100 மில்லி 15 ரூபாய் என்கிற மலிவு விலையில் 2002 ஜனவரி முதல் வாரத்திலிருந்து விற்பனைக்கு வரும் என்று அறிவித்தார்.
2003ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசே மதுவிற்பனைக்காக “டாஸ்மாக்” நிறுவனத்தைத் தொடங்கி, அரசே ஊருக்கு ஊர் மது விற்பனைக் கடைகளைத் திறந்தது. முக்கியமான இந்தத் தகவலையும் ஒரு சிலர் பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைத்திட முயற்சிக்கிறார்களே தவிர, மனசாட்சிக்கு ஊறு விளைவிக்காமல் வெளிப்படையாகச் சொல்வதில்லை.
திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் மதுவிலக்குக் கொள் கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு நான் அறிவித்த பிறகு, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், முன்னணியினரும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும், மகளிர் அமைப்புகளும் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் என்னைத் தொடர்பு கொண்டு அந்த அறிவிப்பை வரவேற்றதோடு, நல்ல முடிவு என்றும் கூறினார்கள். என்னுடைய அறிவிப்பு அனைத்துத் தரப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல!
22-12-2008 அன்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களும், மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர் களும் என்னைச் சந்தித்து தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்திய போது, அவர்கள் கூறியதில் ஒத்த கருத்துடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு, 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதிலும் 1300 மதுக் கூடங்களை (பார்) மூடியுள்ளது என்பதையும், அதேபோல் 128 சில்லறை மது விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பதை யும் நினைவூட்டினேன்.
மேலும், தொடர்ந்து படிப்படியாக முழு மதுவிலக்கினை எய்திடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதுவரையில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகில் மதுக்கடைகள் அமையாமல் எச்சரிக்கையுடன் நடவடிக்கை மேற்கொள்வது என்று முடி வெடுத்துள்ளது என்றும், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் 1 மணி நேரத்தைக் குறைத்து – மதுக்கடைகள் இயங்கும் என்றும் அறிவித்ததோடு, அதற்கிணங்க ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.
மதுவிலக்குக் கொள்கையைப் பொறுத்தவரையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் முதன் முதலாக மதுவிலக்கு ஒத்தி வைக்கப்பட்டதைப்போல சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதுவும் உண்மையல்ல. 1937இல் ராஜாஜி தலைமையில் சென்னை மாகாண அரசு அமைந்ததும், அதுவரை சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இல்லாத மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால் அதுவும் 1939இல் முடிவுக்கு வந்தது. அந்த 1937ஆம் ஆண்டிலே கூட, ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோதே கூட, சென்னை மாகாணத்தில் இருந்த
25 மாவட்டங்களில், நான்கு மாவட்டங்களில் மட்டும்தான், அதாவது சேலம், சித்தூர், கடப்பா, வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களில்தான் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. மற்ற மாவட்டங்களில் 1937ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த நிலைமைதான் இருந்து வந்தது. 1948இல் ஓமந்தூரார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகுதான் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப் படுத்தினார். இது தவிர மற்ற காலங்களில் அதாவது 1937க்கு முன்பும் சரி, 1939க்குப் பின்பு 1948ஆம் ஆண்டு வரை யிலும் சரி, தமிழகத்திலே மதுவிலக்கு நடைமுறை யிலே இல்லை என்பதை சற்று யோசித்துப் பார்த்தால், தமிழகத்திலே தி.மு. கழக ஆட்சியில்தான் முதன் முதலாக மதுவைப் புகுத்தி விட்டார்கள் என்ற வாதம், எந்த அளவுக்கு உண்மைக்குப் புறம்பானது என்பதையும், தி.மு. கழகத்தைப் பொறுப்பாக்குவது எப்படிப்பட்ட திரிபுவாதம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இன்னும் சொல்லப்போனால், மதுவிலக்கு குறித்து 13-9-1969இல் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை யின் இறுதியில், “மதுவிலக்குக் கொள்கையில் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள எந்தத் தனி மனிதனுக்கோ, எந்தக் கட்சிக்கோ உள்ள அக்கறையை விட, அந்தக் கொள்கை மக்க ளுக்குத் தேவையானது என்ப தில், தி.மு. கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞ ருக்கு அதிக அக்கறையும், அதிகப் பிடிப்பும் உண்டு என்பதை மற்றையோரை விட அழுத்தமாக என்னால் துணிந்து கூற முடியும்” என்று தெரிவித்ததையும், அதற்குப் பின் அவரே “ஆனந்த விகடன்” பத்திரிகையிலே “நான் ஏன் பிறந்தேன்” என்ற தலைப்பிலே எழுதிய நீண்ட தொடர் கட்டுரையிலே விரிவாக எழுதியதையும் ஜெயலலிதாவின் தலைமையிலே உள்ள அ.தி.மு.க.விலே தற்போதுள்ளவர்கள் – புதியதாக வந்தவர்கள் வேண்டு மானால் மறந்திருக்கலாம்; ஆனால் நானும் மறக்கவில்லை; இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து உற்று நோக்கி வருவோரும் மறக்கவில்லை.
காந்தியவாதி சசிபெருமாள்! அறுபது வயதைக்கூட எட்டவில்லை. குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை மூட வேண்டுமென்பதற்காகத்தான் போராட்டம். அந்த ஒரு கடையை மூடுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தால் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகமெங்கும் போராட் டமும் பெருகியிருக்காது. ஆனால் இந்த ஆட்சியிலே எதைக் கவனித்தார்கள்; இதைக் கவனிப்பதற்கு? “செல்போன் டவரில்” எத்தனை மணி நேரம் அவரால் இருக்க முடியும்? சம்பந்தப்பட்டவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் அங்கே வந்து பிரச்சினையைப் பேசி முடிவு கண்டிருந்தால், மதுவிலக்குக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருந்த சசி பெருமாள் இறந்திருப்பாரா?
மதுவிலக்குப் பிரச்சினை குறித்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளும் அறிக்கை வெளியிட்ட பிறகும், தன்னெழுச்சியான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று, காவல்துறையின் அடக்குமுறை ஏவி விடப்பட்ட நிலை யிலும், அதுபற்றித் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு வார்த்தைகூட அப்போது கூறவில்லை. காரணம், அவர் மனதில் குடியமர்ந்துள்ள சர்வாதிகார மனோபாவம்! அதுபற்றி அப்போது “ஆனந்த விகடன்” “தீயன அகலட்டும்” என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கமே பொருத்தமான பதிலாக அமையும். அந்தத் தலையங்கம் வருமாறு :- “தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா; மது விலக்கு குறித்தோ, மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்தோ, டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் குறித்தோ ஒரு வார்த்தை கூட இதுவரை சொல்லவில்லை. சசி பெருமாள் மரணத்துக்கு முன்னர் இருந்தே தமிழ்நாட்டில் டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்கள் முழு வீச்சுடன் தொடங்கிவிட்டன. அவரது மரணத்துக்குப் பிறகு அவை தீவிரமடைந்தன. கல்லூரி மாணவர்கள், குடும்பத்தலைவிகள், பொது நல அமைப்புகள் என தமிழ்நாடு எங்கும் போராட்டங்கள் தொடருகின்றன. அத்தனை அரசியல் கட்சிகளும் தங்கள் பங்குக்கு களத்தில் நிற்கின்றன.
போராட்டங்கள் தீவிரமடைய தொடங்க, ஆகஸ்ட் 15ஆம் தேதி மதுக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என்ற செய்திகள் அரசுத் தரப்பில் இருந்து ஊடகங்களில் கசியவிடப்பட்டன. போராட்டங்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதல் அமைச்சர், டாஸ்மாக் கடைகளில் வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டார். அரசே நடத்தும் மது வியாபாரம் குறித்து தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை முதலமைச்சர் அறிவித்தாக வேண்டும்.
ஒருவேளை தேர்தல் நெருக்கத்தில் டாஸ்மாக் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டால், வாக்கு அறுவடை செய்யத் தோதாக இருக்கும் என அரசு திட்டமிட்டுத் தாமதித்தால், அது மிகத் தவறானது. கேடு எனத் தெரிந்த பின்னர், அந்தக் கணமே அதைக் கைவிடுவதே சரி. தீயன உடனே அகலட்டும்….நல்லன உடனே தொடங்கட்டும்” – என்று ஆனந்தவிகடன் விரிவாகத் தலையங்கம் தீட்டியது.
ஆனந்தவிகடனின் தலையங்கத்தை மெய்ப்பிக்கும் விதத்தில்தான் சில செய்திகள் தற்போது வந்து கொண் டிருக்கின்றன. அதாவது 2016ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் மே திங்கள் வருவதால், எல்லாவற்றிலும் எப்போதும் ஏமாற்று வித்தையையே தொடர்ந்து கையாண்டு வருவதைப் போல, தேர்தலில் மக்களை ஏமாற்றுகின்ற நோக்கத்தோடு, ஏமாற்றி வாக்கு அறுவடை செய்து விடலாம் என்ற நப்பாசையோடும், கபட எண்ணத்தோடும், அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கை யில், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மது விலக்கைக் கொண்டு வரப் போவதாக அறிவிக்க இருக் கிறதாம்! ஆட்சியிலே இருந்த ஐந்தாண்டுகளில் செய்திட மனம் வராததை, தேர்தல் அறிக்கையில் ஊரை ஏமாற்றச் செய்யப் போகிறார்களாம்!
இதே ஆண்டு, ஜனவரியில் தமிழகச் சட்டப்பேரவை யில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற போது, “மதுவிலக்குக் கொள்கையை மத்திய அரசு இந்தியா முழுவதும் கொண்டு வந்தால் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சொல்கிறோம்” என்று “மிடாஸ்” அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார். தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், அண்டை மாநிலங்களைப் பின்பற்றி படிப்படியாகவாவது, மதுவிலக்கை அமல்படுத் துமாறு மிகுந்த கவலையோடு கேட்டுக் கொண்ட போது, அமைச்சர் நத்தம் விசுவநாதன் அதற்கும் மறுத்து விட்டார். ஆனால் தற்போது தேர்தல் வருகிறது என்றதும், மதுவிலக்குக் கொள்கையை மத்திய அரசு இந்தியா முழுவதும் கொண்டுவராத நிலையிலேயே, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கினைக் கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையிலே அறிவிப் பார்களானால், அது பாமர மக்களை ஏமாற்று வதற்காகச் செய்யப்படும் “கண்கட்டும் வித்தை” அறிவிப் பாகத்தான் இருக்கமுடியும்.’’