raamanna1

டீ பையன் வரும் நேரம்.. சொல்லிவைத்த மாதிரி வந்தார், அரிகரன். (முன்னாள் பத்திரிகையாளர். இந்நாள் தொழிலதிபர். எந்நாளும் தீவிர தமிழ்ப்பற்றாளர். தனது பெயரை “அரிகரன்” என்றுதான்  எழுதுவார், உச்சிரிப்பார். மற்றவர்களும் அப்படித்தான் பேச, எழுத வேண்டும் இல்லவிட்டால் ரணகளம்தான்!)

“என்ன திடீர் விஜயம்?” என்றேன்.

“இன்றைக்கு அறிஞர் அண்ணா பிறந்தநாள் ஆச்சே..  அவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வர்றேன். வழியில உங்க ஆபீஸ் தட்டுபட்டுச்சா.. அதான்”  என்றவர் அண்ணாதுரை பற்றி பல தகவல்களைக் கொட்டினார்.

C-N-Annadurai

“முக்கியமாக அண்ணாவோட மதுவிலக்கு கொள்கை பற்றி தெரிஞ்சிக்கிறது தற்போதைய சூழல்ல அவசியம்.  1967-ம்   ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தப்பவே,  ‘மதுவிலக்க ரத்து செஞ்சா, அரசுக்கு 600 கோடி ரூபா வருமானம் வரும். நிதிநிலைமை சரியாகும்” அப்படின்னு அதிகாரிங்க சொன்னாங்க.

அண்ணா ஒரே வார்த்தையில சொன்னார்:  ‘மதுவால வர்ற வருமானம்   புழுத்துப்போன தொழுநோயாளி கையில இருக்கிற வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்!’

அதுமட்டுமில்ல…  1968 ம் ஆண்டு,  ஏப்ரல் 12ம் நாள் சென்னையில நடந்த அகில இந்திய மதுவிலக்கு மாநாட்டுல   அண்ணாதான் வரவேற்புக் குழுத் தலைவர். அப்போ அவர் பேசும்போது  என்ன சொன்னார் தெரியமா?” –  சொல்லி நிறுத்திய அரிகரன், அண்ணா  குரலில் அப்படியே அட்சரம் பிசகாமல் பேசினார்:

” மதுவிலக்கை ரத்து செய்வதனால் கிடைக்கக்கூடிய வருவாய் என் மனக்கண் முன்னால் ஒரு விநாடி தோன்றியது. அதற்குப் பின்னால், அழுகின்ற தாய்மார்களின் உருவமும், குழந்தைகளின் கதறலும், மனிதன் தன் அறிவை இழந்து காட்டுமிராண்டி போல் தெரியும் காட்சிதான் என் கண் முன்னால் நிற்கிறது. ஆகையால் மதுவிலக்கு ரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு விடை சொல்வோம். அதற்கு மாறாகச் சிரிக்கின்ற தாய்மார்களின் முகங்களும், குதூகலம் உள்ள குடும்பங்களையும் குடிபோதைக்கு அடிமை இல்லாத மக்களையும் வரவேற்போம்”  – அண்ணா குரலிலேயே சொல்லி முடித்தவர் சற்று நேரம் அப்படியே அமைதியாக இருந்தார்.

பிறகு, “மதுவிலக்குல அண்ணா எத்தனை உறுதியா இருந்தார் அப்படிங்கிறதுக்கு இன்னொரு சம்பவத்தையும் சொல்லலாம்  அதிகாரிங்க மாதிரியே கட்சிகாரர் ஒருத்தரும் மதுவிலக்க ரத்து பண்ணலாமேனு சொன்னார். அதோட, “வெளிநாட்டுல எல்லாம் து குடிக்கத்தானே செய்யறாங்க” அப்படின்னும் கூடுதல் தகவல் கொடுத்தார்.

அவரை மேலேயும் கீழயும் ஒருமுறை பாத்தார். பிறகு, “யேய்.. வெளிநாட்டுக்காரன் கதை வேற… நம்ம பயலுகளுக்கு அளவோடு குடிக்கத்தெரியாது. குடிச்சிட்டு அவன் மட்டுமில்ல.. அவன் குடும்பமும் மல்லாந்துடும்!”னு சொன்னாரு.

மக்கள் மேல எவ்வளவு பாசம் இருந்தா இப்படி ஒரு வார்த்தை வந்திருக்கும். ஹூம்… அவரு பேரச் சொல்லி கட்சி நடத்தறவங்க, கொடியில அவரு படத்த போட்டிருக்கறவங்க.. எல்லாருமே அந்த அண்ணாவோட மதுவிலக்கு கொள்கையையும் குழிதோண்டி புதைச்சுட்டாங்களே..” என்று வருத்தத்தோடு சொன்னார் அரிகரன்.

அவருக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.