சமீபத்திய வெள்ளம் பற்றிய அற்புதமான பதிவு.  பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜெயந்தன் என்கிற ஜேசு எழுதியது.

“உள்ளம் கொள்ளை கொண்ட வெள்ளம்” என்கிற தலைப்பிலான முதல் பதிவு. அழகாக மட்டுமின்றி ஆவணமாகவும் இருக்கும் பதிவு.

za

 

அன்பு நண்பர்களே…

அடையாறு ஆற்றினையொட்டித் தரைதளத்தில் வசித்து வந்த எனது வீடு முற்றிலும் வெள்ளநீரால் மூழ்கிவிட்டது. ஆனால் நம்பிக்கை மூழ்கிடவில்லை. இது என் அனுபவம். மறைந்துவிடாத மனிதத்தைத் தரிசித்த தருணங்களை உங்களுடன் பகிர்வதை மிக முக்கியமாகக் கருதுகிறேன்.

செவ்வாய் இரவின் நிகழ்வு

கடந்த 2000-வது ஆண்டிலிருந்து 2007-வரை அடையாறு ஆற்றினை ஒட்டி அலுவலகம் அமைந்திருக்கும் கல்கி வார இதழில் பணியாற்றி வந்தேன். அலுவலகம் அருகாமையில் ஜாபர்காண்பேட்டையில் குடியேறினேன்.

ஆற்றின் கரையிலிருந்து ஆறாவது தெருவான ஞானஒளி தெருவில் வசித்து வந்தேன். வழக்கத்துக்கு மாறான வெள்ள நேரங்களில் (நான் பார்த்தது 2005வெள்ளம்) திருவள்ளுவர் தெருவை(ஆற்றுக்கரையிலிருந்து நான்காவது தெரு) தாண்டித் தண்ணீர் புகுந்தது இல்லை.

இந்த நம்பிக்கையும் அங்கே கிடைக்கும் மாசுபடாத நிலத்தடி நீரும்தான் தொடர்ந்து அங்கே வசித்துவரக் காரணமாக இருந்தன.

கடந்த திங்கள் கிழமை இரவு தொடங்கிய இடைநில்லா மழை பெய்துகொண்டே இருந்தது. மறுநாள் செவ்வாய் காலை 11 மணிக்கு ரெயின்கோட் அணிந்து பைக்கில் அலுவலகம் புறப்பட்டேன். ஆனால் அசோக்நகர் அம்பேத்கர் சாலை, மேற்குமாம்பலம் ஆரிய கவுடா சாலை, சைதாப்பேட்டை மேட்டுப்பாளையம், ஈக்காடுதாங்கல் என அலுவலகத்துக்கு வர வாய்ப்புள்ள எல்லா வழிகளிலும் 3 அடி உயரத்துக்கு மழைநீர் ஓடியது.

இருப்பினும் ஈக்காடுதாங்கல் வழியாகக் கிண்டியை அடைந்து, அங்கிருந்து அலுவலகத்தை அடைந்து விடலாம் என்று கிளம்பியபோது ஈக்காடு தாங்கல் கலைமகள் நகரில் பேருந்து நிறுத்தம் அருகே ஓடிய தண்ணீரில் எனது பைக் தனது மூச்சை நிறுத்திக் கொண்டது. அங்கிருந்து வண்டியைத் தள்ளிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தபின், எனது தலைமை அதிகாரி அரவிந்தனிடம் நிலைமையை விளக்கினேன்.

அவர்” நீங்கள் வீட்டிலிருந்தபடியே வேலைகளை முடித்து மெயிலில் அனுப்புங்கள்” என்றார். இரவு 9 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் வரை வேலைகளில் மூழ்கியிருந்தேன். பிறகு வேலையைத் தொடர முடியாமல் எழுந்துசென்று ஆற்றில் தண்ணீர் எதுவரை வந்துள்ளது என அறிந்துவரக் கிளம்பினேன். வீட்டிலிருந்து குடையைப் பிடித்தபடி ஆற்றினை நோக்கி நடக்கத்தொடங்கினேன். வளமைபோல அது திருவள்ளுவர் தெருவில் சலசலத்தபடி ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற குறளைச் சொல்லிக்கொண்டிருந்தது.

ஜெயந்தன்
ஜெயந்தன்

நாளை சீக்கிரமாக அலுவலகம் சென்று எஞ்சிய வேலைகளை முடித்து புதன்கிழமை நான் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் பக்கத்தை முடித்துவிட எண்ணியிருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

கதவைத் தட்டிய தண்ணீர்

செவ்வாய் கிழமை முடிந்து புதன் கிழமை பிறந்த(சரியாக இன்றுடன் 9 நாட்கள் முடிந்தது) அதிகாலை 2 மணிக்கு எனது வீட்டின் கதவு பெருத்த சத்ததுத்துடன் தட்டப்பட்டது. பதறியடித்து எழுந்து கதவைத் திறந்த எனக்கு அதிர்ச்சியில் கொஞ்சநேரம் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும் அளவுக்கு இருந்தது அந்தக் காட்சி. கதவைத் தட்டியது பக்கத்து வீட்டுக்காரர் மட்டுமல்ல…. வேகமாய் நெளிந்து செல்லும் பாம்பினைப்போல வீட்டின் உள்ளே நுழைந்த ஆடையாற்றின் தண்ணீரும்தான். “ எவ்வளவு முடிமோ அவ்வளவு எடுத்து லேப்ட்டுல போடுங்க… முதல்ல உங்கப் பிள்ளைகள எதிர்த்த வீட்டு மாடியில விட்டுட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு அவர் தனது வீட்டின் பொருட்களை காப்பாற்றச் சென்றார்.

அனுமதிக்காத வெள்ளம்

மகனும் மகளும் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மகனை முதலில் எழுப்பினேன். எழுந்தவன் பயப்படாமல் இருக்க அவனுக்குத் தைரியம் கொடுத்தேன். வெளியே இருக்கும் படப் புத்தகங்களை புத்தகப்பையில் எடுத்து வைக்கும்படி கூறினேன். ஆச்சரியம் வீட்டிற்குள் கணுக்காலைத் தாண்டி பாய்ந்து கொண்டிருந்த ஐஸ் கட்டி போன்ற தண்ணீரில் ஓடிப்போய் அவனதும் தங்கையினதும் புத்தகப்பைகளை ஒவ்வொன்றாய் எடுத்து வந்தான். இளங்கன்று பயமறியாது. இதற்கிடையில் குழந்தைகளின் ‘ஹெல்த் ரெக்கார்டுகளை’ எடுத்த மனைவி அடுத்து அவரது சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு ஓடிவந்தார். இவற்றை எங்கே வைப்பது என்றார். அழுக்குத் துணிகளை போடுவதற்கென்று பயன்படுத்தி வந்த 4 அடி உயர பச்சை வண்ண பிளாஸ்டில் பக்கெட் சட்டென்று நினைவுக்கு வந்தது. அதை எடுத்து வந்ததும் பீரோவைத் திறந்து அதில் கடந்த இரண்டு வருடங்களில் வாங்கிய புதுத்துணிகளையும் அவரது கல்யாணப் புடனை நிச்சயப்புடவை ஆகியவற்றையும் எடுத்து வைத்தார். அயன் செய்து வந்திருந்த எனது ஐந்து சட்டைகள் மூன்று ஜீன்கள் ஆகியவற்றை எடுத்து வைத்தர். பக்கெட் நிரம்பியது துணிகளின் மேல் சான்றிதழ்கள் மற்றும் ஹெல்த் ரெக்காடுகளை வைத்து பக்கெட்டை மூடி லேப்டில் தூக்கி வைத்தேன். புத்தகப்பைகளை தூக்கி வைத்தேன்.

இந்தநேரத்தில் “அப்பா தண்ணீ காலை இழுக்குது..” என்று கத்தினான் மகன். ஸ்டூலை விட்டு தண்ணீரில் நான் இறங்கியபோது தண்ணீரின் சீற்றம் என் வயிற்றைக் கலக்கியது. எனது முட்டிக்கால்களைத் தாண்டி நிறைந்துவிட்ட தண்ணீரில் மகனை உப்பு மூட்டையாகத் தூக்கிக்கொண்டு தெருவுக்கு வந்தேன். தெருவில் தண்ணீர் என் இடுப்பளவு வந்துவிட்ட நிலையில் தண்ணீரின் வேகம் என்னையும் மகனையும் தள்ளிச் சென்று எதிர் வரிசையில் இரண்டாவது வீட்டின் வாசலில் விட்டது. அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஓரமாகவே முன்னேறி அவனை எனது வீட்டின் எதிர்வீட்டில் இரண்டாம் தளத்தில் விட்டுவிட்டு வேகவேகமாக வந்தேன். இதற்குள் என் வீட்டுக் காம்பவுண்டின் முக்கால் திட்டத்துக்கு தண்ணீர் வந்துவிட்டது மட்டுமல்ல, அதன் வேகம் திகைக்க வைத்தது.

கூச்சலும் கூக்குரலும்

திரும்பவும் நான் வீட்டுக்குச் சென்று என் மகளையும் மனைவியும் அழைத்துவர வேண்டும். எங்கிருந்து அந்த வேகம் வந்ததோ, கிராமத்தில் கற்றுக்கொண்ட நீச்சல் கைகொடுத்தது. வீட்டில் கரையேறினேன். வீட்டின் ஹாலில் மனைவியைக் காணாமல் ஒரு நிமிடம் நெஞ்சு வெடித்ததுபோல இருந்தது. அத்தனை ஐஸ் தண்ணீரிலும் இதயம் வேகமாக துடிக்க “ ஜோதி … ஜோதி…” என்று கத்தினேன். அவர் இங்கே இருக்கோம் என்று படுக்கையறையில் கட்டிலில் ஏறி நின்றிருந்தார், மகளை தோளில் சுமந்தபடி. கண்முன்னால் இலவம் பஞ்சுக் கட்டிலில் தண்ணீர் சத்தமே இல்லாமல் பாய்ந்து கொண்டிருந்தது. உடனடியாக மனைவியின் கைகளிலிருந்து மகளை வாங்கிய நான் எதிர்த்த வீட்டுக்காரரை கத்தி அழைத்தேன். தோட்டத்துக்குத் தண்ணீர் பிய்ச்சியடிக்கும் ஹோஸ் பைப்புடன் ஓடிவந்த அவர், தண்ணீரில் இறங்கி அதை அவரதுவீட்டின் கிரில் கேட்டில் கட்டிவிட்டு அதைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் குதித்தார். விழித்த மகள் அலறி அழ ஆரம்பித்தாள். தெருவெங்கும் கூக்குரல். சத்தம். அவரது உதவியுடன் மகளை கழுத்தில் ஏற்றிக்கொண்டு நடந்தாலும் தண்ணீர் என் தோள்களை தாண்டிவிட்டதாலும் வேகம் அதிகரித்துவிட்டத்தாலும் எதிர்த்தாற்போலிருந்த இரண்டாவது வீட்டின் வாசலில் எங்களைத் தள்ளியது. மகளை மாடிப்படிகளில் காத்திருந்த எதிர்வீட்டுக்காரரின் மனைவியிடம் ஒப்படைத்து விட்டு தண்ணீரில் பாய்ந்தேன். வீட்டின் ஹாலில் இருந்த சாப்பாட்டு மேசையில் பிள்ளைகளுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் வாங்யிருந்த தமிழ், ஆங்கிலப் புத்தகங்களின் ஒரு தொகுப்பை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தார். ஆனால் பயனில்லை, கண்முன்னால் சாப்பாட்டு மேசையில் வைத்த புத்தகங்களை நனைத்துவிட்டு இன்னும் வை என்றது வெள்ளம்.

எல்லாவற்றையும் இழந்தேன்

இதற்குள் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் சிபியூ, டிவி, ப்ரிட்ஜ், வாசிஷ்மெஷின், அக்வா கார்ட் போன்றவை தண்ணீரில் மூழ்கிவிட்டிருந்தன. இதற்குமேல் தாமதித்தால் உயிருக்கு உலையாகும் என்பதை உணர்ந்த நான் மனைவியிடம் திட்டு வாங்கிக் கொண்டே கொல்லைபுறக்கதவை சிரமப்பட்டு மூடினேன். இப்போது வீட்டின் உள்ளே தண்ணீரின் தாண்டவம் சற்று குறைந்தது. மனைவியை நைட்டியுடன் தண்ணீரில் இழுத்துக்கொண்டு வெளியே வந்தேன். அவரை வீட்டின் மாடிப்படிகளில் ஏறி நிற்கவைத்துவிட்டு, சாவியை எடுத்து கதவை பூட்ட முயன்றபோது தண்ணீர் என்னை அனுமதிக்கவில்லை. வீட்டில் நெஞ்சளவுத் தண்ணீரில் சாவித்துளையை கையால் தடவியறிந்து பூட்டியபின் மனைவியை அழைத்துக்கொண்டு, மீண்டும் ஹோஸ் பைப் உதவியுடன் அதிகாலை மூன்று மணிக்கு எதிர்வீட்டின் மாடிப்படிகளில் சிரமப்பட்டு ஏறினோம். உயிர்பிழைத்த நிம்மதி ஏற்பட்டாலும் கண் முன்னால் எல்லாப் பொருட்களையும் இழந்துவிட்ட துக்கம் மனைவியை உடைய வைத்துவிட்டது. அவர் கதறி அழ ஆரம்பித்தார்.
அடைக்கலம் கொடுத்த எதிர்வீட்டு நண்பர் “ பொருள் போனால் சம்மாதிச்சு வாங்கிக்கலாம். உயிர்போனா வருமா?” என்று ஆறுதல் படுத்தினார். அப்படியும் மனைவி அழுகையை நிறுத்தவில்லை.

எனக்கோ ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை. கடந்த 2000-வது ஆண்டு முதல் குருவி சேமிப்பதுபோல் சேமித்தும் தவனை முறையிலும் வாங்கிய பொருட்கள். 6 மாதங்களுக்கு முன் வாங்கிய கஸ்டோ ஸ்கூட்டர், மனைவியின் ஸ்கூட்டி பெப் என இருசக்கர வாகனங்களும் மூழ்கிவிட்டன. ஆனால் வெள்ளத்தின் வேகத்துக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. திகைத்து வெறித்து நின்றேன். ஆனால் மனிதம் இன்னும் மறைந்துவிடவில்லை என்பதை உள்ளம் கொள்ளை கொண்ட இந்த வெள்ளம் எனக்கும் என்னைப் போன்ற லட்சக்கணக்கான சாமானிய மக்களுக்கும் உணர்த்திச் சென்றிருக்கிறது.

அன்புடன்

ஜெயந்தன்