z

 

Free Basics-அமெரிக்காவில் மைக்கெல் ஜாக்சன் ஆதரிக்கிறார்; சப்பான்ல ஜாக்கிசான் ஆதரிக்கிறார் என்றெல்லாம் பட்டியல் போட்டு, என்னையும் மனுப் போடச் சொன்னது Facebook. எனக்குக் காட்டப்பட்ட மாதிரியை TRAIக்கு அனுப்புவதாகவும் சொன்னது. அக்கடிதத்தில் நான் சில திருத்தங்களைச் செய்து அனுப்பியிருக்கிறேன். என் திருத்தங்கள் அதில் சென்று சேருமா எனத் தெரியாது. என் பெயரில், நானும் Free Basicsஅய் ஆதரித்ததாக உங்களுக்குத் தகவல் வரலாம். நான் ‘திருத்தி’ அனுப்பிய கடிதம் இது தான் என்பதை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள். அதற்காகவே இந்தப் பதிவு.
—————————————————————————

தலைப்பு: இந்தியாவில் Free Basics ஐ ஆதரிக்கவில்லை; கட்டற்ற மென்பொருள் இணைய சுதந்திரத்தையே ஆதரிக்கிறேன்

செய்தி:
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு,

நான் இந்தியாவிற்கான டிஜிட்டல் சமத்துவம் என்னும் பெயரில் இணையத்தை முற்றுரிமைக்குக் கொண்டுசெல்வதை எதிர்க்கிறேன்.

Free Basics தகவல் தொடர்பு, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, விவசாயம் மற்றும் பல அத்தியாவசிய இணைய சேவைகளுக்கான இலவச அணுகலை வழங்குவதாகச் சொல்கிறது. இது தரவிற்கு கட்டணம் செலுத்த முடியாதவர்கள் அல்லது ஆன்லைனில் தொடங்க சிறிய உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவும் என்றும் பசப்பப்படுகிறது. மேலும் இதை அனைத்து மக்களும், உருவாக்குநர்களும், மொபைல் ஆபரேட்டர்களும் பயன்படுத்தலாம் என்றெல்லாம் ஆசைவார்த்தை சொல்லப்படுகிறது.

இது ஓபியம் போருக்கு நிகரான ஒன்றோ என்று நான் அய்யுறுகிறேன். இன்னும் 100 கோடி இந்திய மக்கள் சாலைகள் வழிகூட இணைக்கப்படாத நிலையில், Free Basics என்னும் பெயரில் இணையத்தின் வழி இணைக்கிறோம் என்பது இனிப்பு தடவிய கார்ப்பரேட் மாவை நமது நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது திணித்து போதைக்குப் பழக்கப்படுத்தும் முயற்சியாகும்.

இணையம் என்றாலே முகநூல் தரும் குறிப்பிட்ட சில தளங்கள் தான் என்ற குறுக்கப்பட்ட வழியில் பழக்கப்படுத்தும் செயலாகுமே என்று அச்சம் கொள்கிறேன்.

இந்தியாவிற்கான Free Basics என்று எம் மக்களின் தரவுகளை உருவி, அவர்களை வேவு பார்க்கும் கார்ப்பரேட் மோசடியைத் தவிர்த்து மற்றும் அரசு சார்பில் தொலைத் தொடர்பை விரிவுபடுத்தி கட்டற்ற மென்பொருள், இணைய சமத்துவத்தை உருவாக்குவதையே நான் ஆதரிக்கிறேன். நன்றி.

 

–   ச. பிரின்சு என்னாரெசு பெரியார்