டோக்கியோ: குசும்பு கோடீஸ்வரர் என்று சிலரால் விளையாட்டாக விமர்சிக்கப்படும் ஜப்பானின் யுஸகு மேஸவா, தற்போது தனது அடுத்த குசும்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நிலாவுக்கு அவருடன் பயணிக்க காதலி ஒருவர் தேவையாம்!
டிவிட்டரில் தனது பதிவை ரீடிவீட் செய்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுகளை சமீபத்தில் அறிவித்து இன்ப அதிர்ச்சியைக் கிளப்பியவர்தான் இந்த யுஸகு.
இவர் தற்போது தனது அடுத்த ஆட்டத்தை துவங்கிவிட்டார். இவர் நிலவிற்கு செல்வதற்கு ஏற்கனவே பதிவுசெய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது கூறியுள்ளதாவது, “எனக்கு இப்போது 44 வயதாகிறது. இதுவரை நான் நினைத்தபடி வாழ்ந்துவிட்டேன். ஆனால், இப்போது தனிமை மற்றும் வெறுமையின் எண்ணங்கள் என்மீது படரத் தொடங்கிவிட்டதாய் உணர்கிறேன். எனவே, அன்பை வெளிப்படுத்த எனக்கு ஒரு பெண் தேவைப்படுகிறாள்!
அவள் என்னுடன் நிலாவிற்கு வரவேண்டும். 20 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். ஜனவரி 17க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தவர்களுள் எனக்குப் பொறுத்தமானவரை மார்ச் மாத இறுதிக்குள் தேர்வு செய்வேன். நிலவுக்கு பயணம் செய்யக்கூடிய முதல் பெண்ணாக நீங்கள் இருக்கலாமே..?” என்றுள்ளார் கோடீஸ்வரர் யுஸகு.