கடப்பா
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ஆர் ராஜசேகர ரெட்டியின் தம்பி விவேகானத ரெட்டி கொலை செய்யப்பட்டது உறுதி ஆகி உள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ஆர் ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரர் ஒய் எஸ் ஆர் விவேகானந்த ரெட்டி. இவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சித்தப்பா ஆவார். இவர் கட்சிப் பணிகளுக்காகவும் தேர்தல் பிரசாரத்துக்காகவும் தனது சொந்த ஊரான கடப்பா மாவட்டத்திலுள்ள புலிவேந்தலாவில் அமைந்துள்ள தனது சொந்த வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று அதிகாலை விவேகானந்த ரெட்டி அவர் வீட்டின் கழிவறையில் பிணமாக கிடந்தார். அவர் தலை மற்றும் முகத்தில் காயங்கள் இருந்தன. முதலில் அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் எனவும் இறந்து விழுந்த போது காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது. காவல்துறையினர் காயங்களைக் கண்டு சந்தேகம் அடைந்ததால் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர்.
கடப்பா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உடலில் 8 இடங்களில் கத்தியால் வெட்டப்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளதை கண்டறிந்துள்ளனர். அதை ஒட்டி விவேகானந்த ரெட்டி கொல்லப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடப்பா காவல்துறையினர் 5 சிறப்பு படைகள் அமைத்து விவேகானந்த ரெட்டியை கொன்றவர்களை தேடி வருகின்றனர்.