விஜயவாடா:
ஆந்திராவில் இரண்டு தினங்களுக்குமுன் பேருந்து ஒன்று கால்வாயில் விழுந்து 11 பயணிகள் உயிரிழந்தனர்.
37 பேர் படுகாயமடைந்து நந்திகாமா அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்
ஜெகன்மோகன் ரெட்டி நேற்று மருத்துவமனை சென்றார். அப்போது அவர், விபத்துக்குள்ளான பேருந்து ஆளும்கட்சி பிரமுகருக்குச் சொந்தமானது
என்றும் இதன்காரணமாகவே குடிபோதையில் இருந்த டிரைவரது உடல் மட்டும் பிரேத பரிசோதனை நடத்தாமல் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.   மேலும் மருத்துவர்களிடம் இருந்த மற்றவர்களது பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் வலுக்கட்டாயமாக
வாங்கி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர்கள், ஜெகன்மோகன் மீது போலீஸாரிடம் புகார் அளித்தனர். மருத்துவர்களை பணியாற்ற
விடாமல் ஜெகன்மோகன் மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அவர்மீது போலீஸார்              

வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் பாபுவிடம் ஜெகன்மோகன் தரக்குறைவாக நடந்துகொண்டதாக ஆந்திர தலைமைச் செயலாளரிடம் மற்றொரு
புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.