குண்டூர்: மக்களவை துணை சபாநாயகர் பதவியை, நான்காவது பெரிய கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வழங்க பாரதீய ஜனதா முன்வந்தால், அதை ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி ஏற்காது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுவதற்கு முன்னதாக இந்தப் பதவியை ஏற்றால், தேவையற்ற விமர்சனங்கள் கிளம்பும் என்பதாலும், பாரதீய ஜனதாவுடன் நெருக்கமாக செயல்படுவது போன்ற தோற்றம் உருவாகும் என்பதாலும், ஜெகன்மோகன் ரெட்டி அத்தகைய முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளிடமிருந்தும் சம தூரத்தை பராமரிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் விரும்புவதாகவும், மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது ஒன்றே பிரதான இலக்கு என்றும் அக்கட்சி தரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 22 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, தொடக்கம் முதலே மக்களவை துணை சபாநாயகர் பதவியானது இக்கட்சிக்கு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது நினைவிருக்கலாம்.
மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியான திமுகவிற்கு, பல அரசியல் காரணங்களினால் துணை சபாநாயகர் பதவி கிடைக்காது என்றே தொடர்ந்து வரும் தகவல்கள் உறுதிபடுத்துகின்றன.