கடப்பா
கடப்பா மக்களவை உறுப்பினர் ஒய் எஸ் விவேகானந்த ரெட்டி கொலை குறித்து அவர் செயலர் உள்ளிட்ட மூவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் மறைந்த ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் சகோதரர் விவேகானந்த ரெட்டி. இவர் கடப்பா தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் கடந்த 14 ஆம் தேதி அன்று காலை குளியலறையில் கொல்லப்பட்டு கிடந்தார். முதலில் சந்தேக மரணமாக பதியப்பட்ட இந்த வழக்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு கொலை வழக்கு என மாற்றப்பட்டது.
ஒய் எஸ் விவேகானந்த ரெட்டியின் இறுதிச் சடங்கு நேற்று பலத்த பாதுகாப்புக்கிடையில் புலிவெந்துலா பகுதியில் நடந்தது. இந்த வழக்கை விசாரிக்க காவல்துறையினர் சிறப்பு புலனாய்வு பிரிவு ஒன்றை அமைத்தனர். ஆயினும் இந்த கொலையில் ஆந்திர முதல்வர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அத்துடன் எதிர்க்கட்சியினர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால் தெலுங்கு தேசம் கட்சியை சார்ந்த சிலர் இந்த கொலைக்கான தடயங்களை அவரது குடும்ப உறுப்பினர்களே மறைத்து வருவதாக கூறி வருகின்றனர். சிறப்பு காவல் துறையினருக்கு விவேகானந்த ரெட்டி எழுதிய கடிதம் ஒன்று இரத்தக் கறையுடன் கிடைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அந்த கடிதத்தை விவேகானந்த ரெட்டி இறக்கும் தருவாயில் எழுதியதாகவும் அதில் தன்னை தனது ஓட்டுனர் தன்னை அடித்து தாக்குவதாக குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை ஒட்டி சிறப்பு விசாரணை குழுவினர் விவேகானந்த ரெட்டி வீட்டு பணியாளர், அவர் அந்தரங்க செயலர் கிருஷ்ணா ரெட்டி, மற்றும் ஓட்டுனர் பிரசாத் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.