ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்-அமைச்சராக இருந்தவர், ராஜசேகர ரெட்டி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
விமான விபத்தில் அவர் மரணம் அடைந்த நிலையில், அவர் மகன் ஜெகன் மோகன், புதிய கட்சி ஆரம்பித்தார். இப்போது அவர் ஆந்திர முதல்-அமைச்சராக இருக்கிறார்.
இந்த நிலையில் ராஜசேகர ரெட்டியின் மகளும், முதல்வர் ஜெகன் மோகன் தங்கையுமான ஷர்மிளா, புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார்.
கட்சி ஆரம்பிப்பது குறித்து ஷர்மிளா கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இதையடுத்து அடுத்த மாதம் 9 ஆம் தேதி புதிய கட்சி தொடங்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளார், ஷர்மிளா.
கம்மம் பகுதியில் பிரமாண்ட மாநாடு நடத்தி அன்றைய தினம் கட்சி பெயர் மற்றும் கொடி போன்ற விவரங்களை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ராஜசேகர ரெட்டி மாநிலம் தழுவிய பாதயாத்திரையை தொடங்கினார். மக்களிடையே அந்த பயணம் பெரும் எழுச்சியை உருவாக்கியது.
எனவே தந்தை ராஜசேகர ரெட்டி யாத்திரை ஆரம்பித்த தினத்தில், கட்சி அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளார், ஷர்மிளா.
– பா. பாரதி