காங்கிரஸ் பொதுச் செயலாளரும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தி மூன்று நாள் பயணமாக கடந்த 27ம் தேதி வயநாடு சென்றார்.
வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பல நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரியங்கா, மலப்புரம் வந்தூரிலிருந்து சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் கொச்சி விமான நிலையத்திற்கு சென்றார்.
அப்போது மன்னுத்தி பைபாஸ் சந்திப்பில் அணிவகுத்து சென்ற பிரியங்கா காந்தி எம்.பி.யின் வாகனத்திற்கு வழிவிடாமல் அந்த வாகனத்தின் முன்னே தனது வாகனத்தை நிறுத்திய நபர் மன்னுத்தி சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அனிஷ் ஆபிரகாம் என்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒரு யூடியூபர் என்பதும் எம்.பி.யின் வாகன அணிவகுப்பில் சென்ற வாகனங்கள் எழுப்பிய ஹாரன் சத்தத்தால் கோபமடைந்ததால் தனது காரை வாகனத் தொடரணிக்கு முன்னால் அவர் நிறுத்தியதாகத் தெரியவந்தது.
இதையடுத்து அவரை ஜாமீனில் விடுவித்ததாக காவல்துறை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.